Newsu Tamil
environment இந்திய செய்திகள் மறைக்கப்பட்டவை

ஸ்டெர்லைட்டை விட ஆபத்தான நிறுவனங்கள் தொடங்க உதவும் மத்திய அரசின் சட்டம்!

கொரோனாவால் மனிதகுலத்திற்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்ப்பட்டிருக்கும் இவ்வேளையில், அதன் தோற்றம், பரவல் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இவ் வல்லுநர்கள் காடுகள் அழிப்பு போன்ற மனித செயல்பாடுகளினால் பாதிக்கப்பட்ட காட்டுயிர்களின் மூலமே கொரோனா போன்ற பெருந்தொற்றுகள் ஏற்படுவதாக எச்சரித்தும் உள்ளனர்.

ஆனால், பல்வேறு சூழலியல் முக்கியத்துவம் கொண்ட இயற்கை அமைப்புகளை கொண்ட நாடான இந்தியா “கொரோனாவுக்கு மேலும் வலு சேர்ப்போம்” என்ற தொனியில் செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது.

EIA என்றால் என்ன?

இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய “போபால் விஷவாயு விபத்து” தொழிற்சாலைகளிடமிருந்து இயற்கையை பாதுகாப்பதற்கான அவசியத்தை உணர்த்தியது. அதன் ஊடாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986 உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தின் ஓர் கருவியாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு சட்டத்தை (Environmental impact assessment) 1994 ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்டது. சுரங்கம், தொழிற்சாலை, அணை போன்ற தொழில் வளர்ச்சித்திட்டங்களால் ஒரு நாட்டின் சூழலியல் வளங்கள் பலியாகிவிட கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்படும் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்தான் இந்த சூழலியல் தாக்க மதிப்பீடு ஆகும்.

தற்போது சூழலியல் தாக்க மதிப்பீடு, 2006 நடைமுறையில் உள்ளது. இதன் முக்கிய அம்சமே சுற்றுச்சூழலுக்கான தீவினைகளை முன்பே கணித்து அதனைத் தடுப்பது குறைப்பது ஒழுங்குபடுத்துவது ஆகும். இது மக்கள் கருத்து, நிபுணர்கள் அறிக்கை, ஆய்வு என பல்வேறு வழிமுறைகளை உள்ளடக்கியுள்ளது.

மத்திய பாஜக அரசின் சதித்திட்டம் என்ன?

இந்நிலையில் இதன்மீதான மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு (EIA,2020) மார்ச் 22, 2020 ல் மத்திய அரசின் சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தினால் வெளியிடப்படுள்ளது. EIA 2020 சூழலியல் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கு சூழலியல் ஆர்வாளர்களுக்கும் மக்களுக்கும் எஞ்சியுள்ள கடைசி நம்பிக்கையையும் வழிமுறைகளையும் நசுக்குவதாக உள்ளது.

மேலும், கொரோனாவின் இக்கட்டான கால சூழலில் இத்திருத்த வரைவை விரிவான விவாதங்களுக்கு உட்படுத்துவதும் அவ்வளவு எளிமையானதாக இல்லை. இதை பயன்படுத்தியே அவசர அவசரமாக இந்த வரைவை நடைமுறைப்படுத்த முயல்கிறது ஒன்றிய அரசு. EIA, 2020 ன் ஆபத்தான சில அம்சங்கள் பின்வருமாறு…

1. பல திட்டங்களுக்கு மக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகளிலிருந்து விலக்கு அளித்துள்ளது. குறிப்பாக, நீர்ப்பாசன நவீனமயமாக்கல் திட்டங்கள், அனைத்துக் கட்டுமானங்கள் மற்றும் பகுதி மேம்பாட்டு திட்டங்கள், உள்நாட்டு நீர் தடங்கள், தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்குதல் அல்லது அகலப்படுத்துதல், தேசிய பாதுகாப்பு தொடர்பான அனைத்து திட்டங்கள் மற்றும் மத்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட பிற யுக்தி திட்டங்களும், எல்லைப்பகுதியில் குழாய் இணைப்புகள் மற்றும் கடல் மைல்களுக்கு (nautical miles) அப்பால் அமைந்துள்ள கடல் திட்டங்கள் மூலம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் யுக்தி திட்டங்களின் விவரங்களை எந்த பொது தளங்களிலும் வெளிப்படுத்த தேவையில்லை என்றும் கூறியுள்ளது.

2. EIA, 2006 ன் படி வளர்ச்சி திட்டங்களை A மற்றும் B என இரண்டு வகையாக பிரித்து A வகை திட்டங்களை மத்திய அரசு ம், B வகை திட்டங்களை மாநில அரசும் பரசீலித்து அனுமதியளிக்க முடிவு எடுப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது B பிரிவு திட்டங்களை மேலும் B1 மற்றும் 82 வகைகளாக பிரித்து, B2 வகை திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு பதிலாக சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் (EMP) மட்டுமே போதும் என்று பரிந்துரைத்துள்ளது.

3. A மற்றும் B1 பிரிவு திட்டங்களுக்கு மக்கள் கருத்துக்களை தெரிவிக்கும் காலத்தை 30 நாட்களிலிருந்து 20 நாட்களாகக் குறைத்தும், மக்கள் கருத்து கேட்பு செயல்முறை காலத்தை 45 நாட்களிலிருந்து 40 நாட்களாகக் குறைத்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் செய்திகளை எளிதாக கொண்டு செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இதை பற்றிய விழிப்புணர்வு மற்றும் நடக்கவிருக்கும் தாக்கத்தை அறிவதில் சிக்கல்கள் ஏற்படும்.

4. முந்தைய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பை (2006) ஒப்பிடுகையில் 2020 வரைவு அறிவிப்பு சம்பந்தப்பட்ட நதிகள் திட்டங்களுக்கு 10 வருடத்தில் இருந்து 15 வருடமும், சுரங்கம் சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு 30 வருடத்தில் இருந்து 50 வருடமும் மற்றும் பிற திட்டங்களுக்கு 5 வருடத்தில் இருந்து 7 வருடமும் செல்லுபடியாகும் காலத்தை மாற்றியுள்ளனர். இதன் விளைவாக சுற்றுச்சூழல் மீதான பாதிப்பு மேலும் நீட்டிக்கப்படும்.

5. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தன்னுடைய செயல்பாடுகள் குறித்த அறிக்கையை ஒவ்வொரு நிறுவனமும் சமர்ப்பிக்க வேண்டும் என்றிருந்த விதிமுறையை ஆண்டுக்கு ஒருமுறை சமர்ப்பித்தால் போதுமென திருத்தப்பட்டுள்ளது. இந்த நீண்ட கால அவகாசம், சூழலியல் மற்றும் சமூக விளைவுகளை மறைக்க போதுமானதாக இருக்கும். மேலும், இது அறிவிப்பு தொழிற்சாலைகளால் செய்யப்படும் சுற்றுச்சூழலுக்கு எதிரான செயல்முறைகளை ஒழுங்குமுறைப் படுத்துவதற்காக பல பரிந்துரைகளை கூறியுள்ளது. அவை சட்ட மீறல்களுடன் செயல்பட்டு வரும் திட்டங்களை சட்டபூர்வமாக்குவதற்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

6. சதுப்பு நிலக் காடுகளில் மணல் போட்டு சமன் படுத்துவதற்கு அனுமதியோ சூழலியல் தாக்க மதிப்போ, செய்ய வேண்டியதில்லை என்று கூறும் பிரிவுகளும் இதில் உள்ளன. சூழலியல் நோக்கில் நீர்வளத்திற்கு இது மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

7. வறண்ட புல்வெளிக் காடுகள் இந்த புதிய சட்ட வரைவினால் தரிசு நிலங்களாக கணக்கு காட்டப்பட்டு தொழில் துறைகளால் அபகரிக்கப்படும்.

8. EIA, 2020 ல் மிகவும் ஆபத்தமானதாக கருதப்படுவது, குறிப்பிட்ட நிறுவனங்களால் ஏற்படும் சூழலியல் சீர்கேடுகளை குடிமக்களால் புகாரளிக்க முடியாது, அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்படும் அமைப்பால் மட்டுமே குற்றங்களை பதிய முடியும் என்பதாகும்.

இறுதியாக, பருவநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பாதிப்புகளை உலக நாடுகள் எதிர்கொள்ள திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்திய அரசாங்கம் இதனை ஒரு பொருட்டாகக் கூட கவனத்தில் கொள்ளாமல் சுற்றுச்சூழல் சார்ந்த முக்கிய முடிவுகளை இந்த பெருந்தொற்று (Covid19) காலத்தில் கொண்டு வருவது முறையற்றது.

இவ்வகை முடிவுகளை எடுப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது மட்டுமின்றி நம் வருங்காலம் பெரும் கேள்விக்குறியாக நம்முன் நிற்கிறது. இதற்கான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் “பூவுலகின் நண்பர்கள்”
அமைப்பு #ScrapEIA2020 என்ற ஹாஷ்டாகின் கீழ் ட்விட்டரில் இணையவழி போராட்டத்தை தொடங்கியுள்ளது.