Newsu Tamil
Media Critics சரியா? தவறா? தமிழ்நாடு செய்திகள்

மாரிதாசுக்கு வெற்றி – நேர்மையான ஊடகவியலாளர்கள் மீது நியூஸ் 18 நடவடிக்கை

விகடன் குழுமத்தில் செய்தியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தியதற்காக பணியில் இருந்து விலக வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் ஹசீப்.

அதே வேளையில், உச்சபட்சப் பொறுப்பில் இருந்த குணசேகரன் இனி விவாத நிகழ்ச்சிக்கு மட்டும் நெறியாளராகப் பணியாற்றுவார் எனக் கூறப்பட்டிருக்கிறது. விவாதங்களின் தலைப்பைக் கூட இனி அவரால் முடிவுசெய்ய முடியாது என்பதே இந்தப் பணிக்குறைப்பின் சாரம்.

பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் பொய்களை கட்டவிழ்த்துவிட்டு வெளியிட்ட லிஸ்டில் இருந்த பத்திரிகையாளர்களில் மேலும் சிலர் கடந்த வாரத்தில் பணிநீக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டு, பணியில் இருந்தும் விலகியிருக்கின்றனர். குணசேகரனைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கின்றன தமிழ் ஊடகத்துறையில் ஊடுருவியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் சக்திகள்.

ஹசீப் முஹம்மது தமிழக ஊடகங்களில் பணிநீக்கம் செய்யப்பட்ட பல்வேறு செய்தியாளர்களுக்காக முன்வந்து போராடியிருக்கிறார். தமிழ் ஊடகத்துறையில் பத்திரிகையாளர்களின் உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், குரல் கொடுக்கவும் தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியில் கடந்த ஆண்டுகளில் ஈடுபட்டிருக்கிறார்.

அவர் முன்னின்று பணியாற்றிய மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம், கடந்த ஆண்டுகளில் புதிய தலைமுறை, வேந்தர் டிவி, காவேரி டிவி, கலைஞர் டிவி, மாலை முரசு, கேப்டன் டிவி முதலான நிறுவனங்களில் பணியாற்றி, பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்காகப் போராடி, நஷ்ட ஈடுகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான கிஷோர் கே.சுவாமி, மாரிதாஸ் போன்ற மதவாத சக்திகள், ஹசீப் தான் கறுப்பர் கூட்டத்தின் அட்மின் என அவதூறு பரப்பி மத மோதல்களை ஏற்படுத்த திட்டமிட்டனர்.

அது பொய் என உறுதி செய்யப்பட்ட கறுப்பர் கூட்டத்தின் சுரேந்திரன் முதலானோர் கைதாகி உள்ளனர். ஹசீப் போலீசில் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். ஆனால், அந்த அவதூறுகள் மீது நடவடிக்கை எடுக்காமல், கறுப்பர் கூட்டத்தின் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது. ஊடகங்களும் கறுப்பர் கூட்டம் செய்தியை பெரிதுபடுத்தி, அதன் பின்னால் ஆர்.எஸ்.எஸ். தூண்ட நினைத்த மதக்கலவரத்தை மறைத்துவிட்டது.

இந்த சூழலில் தான், மாரிதாஸின் பொய்களுக்கு அஞ்சி மக்களுக்காக குரல் கொடுத்த ஊடகவியலாளர்களை தூக்கி வீசியுள்ளது நியூஸ் 18. ஹசீப்பின் பணிநீக்கம் என்பது கருத்து சுதந்திரம் மீதான அடக்குமுறை மட்டுமல்ல, தொழிலாளர் உரிமைகளுக்காகப் பத்திரிகையாளர்கள் ஒன்றுசேர்வதைத் தடுக்கும் நடவடிக்கையும் கூட. பார்ப்பனியத்தால் குறிவைக்கப்படும் தோழர்களுக்குத் துணைநிற்போம்.

#ShameOnNews18TamilNadu #StandWithGunasekaran #StandWithHaseef #CMPC #SaveJournalismFromBrahminism