Newsu Tamil
Media Critics சரியா? தவறா? தமிழ்நாடு செய்திகள்

எங்கள் சேனலில் இஸ்லாமியரே இல்லை – கறுப்பர் கூட்டம் விளக்கம்

பாஜக ஆதரவாளரான கிஷோர் கே.சுவாமி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் நியூஸ் 18 செய்தியாளர் ஹசீஃப் முஹம்மது கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இந்து கடவுள்களை விமர்சிப்பதாகவும், இஸ்லாமியருக்கு இந்து கடவுள்களை பற்றி பேச என்ன தேவை என்றும் கேட்டிருந்தார்.

இதே போல் கடந்த மாதம் திருமாவளவனை இழிவுபடுத்தி கார்டூன் வரைந்த வர்மாவும் ஹசீப் முஹம்மது தான் கறுப்பர் கூட்டம் சேனலில் இந்து கடவுள்களை இழிவுபடுத்துவதாக பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

கிஷோர் கே.சாமியின் பதிவை தொடர்ந்து, வர்மா உள்ளிட்ட பாஜக ஆதரவாளர்கள் ஹசீஃப் முஹம்மது மீது மத ரீதியிலான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்கள். ஆனால், உண்மையை ஆராய்ந்து பார்த்தால், கிஷோர் கே.சாமி வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் ஸ்க்ரீன் ஷாட்டில் இருப்பவர் பெயர் நாத்திகன். அவர் தான் அந்த சேனலில் பேசி வருபவர். இதுபற்றி விரிவாக நமது தளத்தில் உண்மை கண்டறியும் பதிவை வெளியிட்டு இருந்தேன்.

இந்த நிலையில் இதுபற்றி கறுப்பர் கூட்டம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், “கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இந்துமத சமஸ்கிருத புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஆபாச கருத்துகளை பொதுமக்களுக்கு புரியும் வண்ணம் ’ஆபாச புராணம்’ எனும் தலைப்பில் எடுத்துரைத்து வந்தோம். இது பெரியார் காலம் தொட்டு பல முற்போக்காளர்கள் மேடைகளில் பேசியே பார்ப்பனிய எதிர்ப்பின் தொடர்ச்சி தான்.

ஆனால் தமிழ் கடவுள் முருகன் பற்றிய ’கந்தசஷ்டி கவசம்’ விளக்க உரை காணொளி தமிழக பொதுமக்கள் பலரது மனதை புண்படுத்தி உள்ளது என்பதை நேரடியாக நமக்கு தெரிவித்துள்ளதால் அதற்காக கறுப்பர் கூட்டம் வருத்தம் தெரிவித்துகொள்கிறது. அக்காணொளி யூடியூப் தளத்தில் இருந்து நீக்கி உள்ளோம்.

மேலும் கறுப்பர் கூட்டத்தின் தலைமை ஒருங்கினைபாளர் ஓர் இஸ்லாமியர் என்றும் கிறிஸ்த்துவர் என்றும் பொய்யான பிரச்சாரத்தை இந்துத்துவ அமைப்புகளும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளும் பாஜக ஆதரவாளர்களும் பரப்பி வருகின்றனர். மதகலவரத்தை தூண்டும் விதமான இச்செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்.

அத்துடன் கறுப்பர்கூட்டத்தில் உள்ள அத்தனை நபர்களும் பிற்ப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பட்டியலின சமூகத்தில் இருக்கும் நபர்கள் தான் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். பாசிச பாஜக ஆட்சியில் வடஇந்தியாவில் நடந்த பல மதகலவரங்களும், பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல்களையும் நாடறியும்.

தற்போது தமிழகத்திலும் ஊடகத்துறை மீதான இந்துத்துவ கும்பலின் நேரடியான மிரட்டல்களும்,
அச்சுருத்தல்களும் தமிழத்தின் அமைதியை சீர்குலைக்கும் வேலையாகும். இதை சமூக பொறுப்புள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்து எதிர்க்க வேண்டும்.” என குறொப்பிட்டு உள்ளனர்.