Newsu Tamil
அரசியல் தமிழ்நாடு செய்திகள் தலையங்கம் பின்னணி

மின்கட்டண கொள்ளை… பிச்சை தட்டையும் திருடும் அரசு

வாசகர் பதிவு:

மின்வாரியமும், நீதிமன்றமும் மிகச் சாதூர்யமாக பொதுமக்களின் வேதனையை புறந்தள்ளவே செய்கின்றது. அதாவது பொதுமக்கள், அரசாங்கம் சொன்ன பொதுமுடக்கத்தால் தான் தங்களது வேலையை, தொழிலை, வருமானத்தை இழந்து 4 மாதங்களாக வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கிறார்கள் என்பதை, திட்டமிட்டு மறைக்க முயல்கின்றனர்.

பொதுமக்கள் மின் ஊழியர்கள் கணக்கீடில் குறை உள்ளது போல் புலம்புகின்றனர், திடீரென மின் கட்டணம் அதிகரித்துவிட்டதாக ஆதங்கப்படுகின்றனர். உண்மையில் மின்கட்டண ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிப்படி, கீழ்க்கண்ட முறைப்படிதான் பொதுமக்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கான மின்கட்டணம் கணக்கிடப்படுகிறது. அதில் எந்த தவறும் ஏற்படவில்லை.

கோடை காலத்தில் பொதுமக்கள் வீட்டிற்குள் இருந்ததால் அவர்களின் மின்நுகர்வு அதிகமாகியுள்ளது. அதை உணராமல் மின்வாரியத்தை குறை சொல்கிறார்கள் என்கிறது மின்வாரியமும், நீதிமன்றமும். இந்த அதிமேதாவிகள் பொதுமக்களின் இன்றைய நிலையை உணரும் நிலையில் இல்லை. அவர்களின் குறிக்கோள் கல்லாவை நிரப்பவேண்டும் அவ்வளவுதான்.

4 மாத பொது முடக்கத்தை நிர்பந்தித்தது அரசுதான். பொதுமக்களின் வருமான இழப்பிற்கு காரணமே அரசின் செயல்தானே தவிர, பொதுமக்கள் தானாக விரும்பி வீட்டிற்குள் முடங்கவில்லை. பொதுமுடக்க காலத்தில் மின் கணக்கீடு செய்யவேண்டாம் என எந்த பொதுமக்களும் தடுக்கவில்லை. கொரோனாவை காரணம் காட்டி கணக்கீடு செய்யாமல் முந்தைய கட்டணத்தையே வாங்கியது மின்வாரியம்தான். தற்போது அதே பொதுமுடக்க காலத்தில் மின்கணக்கீடு எடுத்ததும் அரசுதான்.

தற்போது வருமானமில்லாமல், முதல் இரண்டு மாதத்தில் அவரவர் வைத்திருந்த சிறிதளவு கையிருப்பும் கறைந்துவிட்ட பிறகு மூன்றாம் மாதமே செலவுகளுக்கு போதிய பணமின்றி தவித்த பொது மக்கள், நான்காம் மாதத்தில் திக்கற்று நிற்கும் சூழலில், ஒரேயடியாக, 4மாதத்திற்கும் மொத்தமாக கணக்கிட்டால் யூனிட் அடிப்படையில் 4 மடங்கிற்கு மேல் கட்டணம் உயரத்தானே செய்யும் என்றுதான் பொதுமக்கள் புலம்புகின்றனர்.

ஆனால் மின்வாரியமும், நீதிமன்றமும் ஏதோ பொதுமக்கள் கணக்கீட்டு முறையில் தவறு நடந்திருக்கிறது என்றுதான் புலம்புகின்றனர் என்பதுபோல் சித்தரிப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. மாதாமாதம் மின் அளவீடு எடுத்தால் மேற்கண்ட கணக்குப்படி முதல் 100 யூனிட் கழித்துக்கொள்ளப்படும் போது தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் 500 யூனிட்டை தாண்ட வாய்ப்பில்லை. இதனால் மின் கட்டணம் தேவையில்லாமல் உயரும் என்ற பயமுமில்லை.

மாறாக இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின்அளவீடு கணக்கெடுப்பு என்பதே மக்களை வலிக்காமல் கண்ணை பிடுங்கும் செயல்தானே ஒழிய வேறென்ன? 2 மாதத்திற்கு மொத்தமாக கணக்கிட்டாலே 500 யூனிட்டை எளிதாக தாண்டிவிடும் . அதனால் வீடுகளுக்கான யூனிட் கட்டணத்தின் உச்சபட்ச வசூல் கொள்ளையான ஒரு யூனிட் 6.60 பைசா என்ற அளவில் வந்து நிற்கும்.

தற்போது நிராயுதபாணியாக தவிக்கும் பொதுமக்களை, 4 மாதத்திற்கு பயன்படுத்திய மொத்த மின் பயன்பாட்டை கணக்கிட்டு மொத்தமாக கட்டுங்கள் என்றால் பொதுமக்கள் எங்கே போக முடியும்? 4 மாதம் மொத்தமாக கணக்கிட்டதில் ஒவ்வொரு வீட்டிற்கும் மின் பயன்பாடு சராசரியாக 2000 ம் யூனிட்டை தாண்டியுள்ளது. இதன்காரணமாக 2 மாதத்திற்கு ஒருமுறை 5000 ற்குள் மின் கட்டணம் செலுத்தியவர்கள் கூட தற்போது 10000 த்தை தாண்டி மின் கட்டணம் செலுத்தவேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதை அரசும், நீதிமன்றமும் கவனத்தில் கொள்ளாமல், பொதுமக்கள் கணக்கீட்டில் குறை சொல்வதாக வேண்டுமென்றே மடைமாற்றுகிறார்கள். உண்மையில் 100 யூனிட் இலவசம் என்று சொல்வதே ஒரு ஏமாற்று வேலைதான். இலவசம் என்று சொல்லிவிட்டு, அதை முதல் 100 யூனிட் தான் என்பது ஆகச்சிறந்த கணக்கீட்டுப்புலியின் அசாத்திய திறமை என்றுதான் சொல்லவேண்டும்.

ஏனென்றால் முதல் 100 யூனிட்டில் 1 யூனிட் வெறும் 2.50 ரூபாய் தான். அந்த 250 ரூபாயை அதற்கு அடுத்து 100 யூனிட்டிற்கு, ஒரு யூனிட் 3.50 என்றும், அதற்கு அடுத்த 300 யூனிட்டிற்கு, ஒரு யூனிட் 4.60 என்றும் அதற்கு அடுத்து வரும் ஒவ்வொரு யூனிட்டும் 6.60 என்றும் கணக்கிடப்பட்டு 100 யூனிட் மானியம் கொடுத்ததை விட அதிகப்படியாக வசூலித்து வருகின்றனர்.

இப்படி மக்களை வஞ்சிக்கும் அளவிற்கான ஒரு திட்டம் எப்படி நல்லத்திட்டமாக இருக்க முடியும்?

நிச்சயம் இரண்டுமாத கணக்கீட்டு முறை, ஒவ்வொரு மாதமும் கணக்கிடும் முறையாக மாற்றப்படவேண்டும். முடிந்தால் பிரிப்பெய்டு மீட்டர் சிஸ்டம் கொண்டு வர வேண்டும். தொலைக்காட்சியில் நாம் தேர்ந்தெடுத்த சேனல்களுக்கு மட்டும் முன்னமே கட்டணம் கட்டி பார்ப்பது போல, நம் தேவைக்கு ஏற்றாற்போல, 1000ம் 2000ம் 3000 ம் மடங்கில் ரீசார்ஜ் செய்து மின்சாரம் பயன்படுத்தும் நிலையை உருவாக்கலாம்.

அதைவிடுத்து ஏற்கனவே வறுமையில் இருக்கும் பொதுமக்களை இப்படி வஞ்சிப்பது நியாயமல்ல.

அண்டை மாநிலமான கேரளா தன் மாநில மக்கள் மீது அக்கறை கொண்டு மின் கட்டண மொத்த தொகையில் 50% ம் மட்டும் இப்பொழுது கட்டுங்கள், மீதமுள்ள தொகையை பொது முடக்கம் நீங்கிய பிறகு 5 தவணைகளில் கட்டுங்கள் என பொது மக்களுக்கு வாய்ப்பினை வழங்குகிறது.

அதுபோன்றாவது ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்து முதல்வராக அமர்ந்து இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொதுமக்கள் மீது கருணை காட்டலாமே. அதைவிடுத்து 1000 ம் ரூபாய் ரேஷனில் கொடுத்து 10000 ம் ரூபாயை மின்வாரியம் மூலம் பிடுங்கலாமா? அது நியாயமா முதல்வரே?