Newsu Tamil
தமிழ்நாடு செய்திகள் மக்கள் மறைக்கப்பட்டவை

15 ஆண்டுக்கு முன் வந்த கோவிலால் 40 ஆண்டு கால பிரியாணி கடையை அகற்ற துடிக்கும் சங்கிகள்!

திருவண்ணாமலை மாடவீதி தெருக்களில் ஒன்றான திருவூடல் தெருவில் ஸ்டார் பிரியாணி ஓட்டல் உள்ளது. 1979 ஆம் தொடங்கப்பட்ட ஓட்டல். பத்தடிதான் அகலம் இருக்கும். அதிகபட்சம் ஒரேநேரத்தில் 16 பேர்வரைதான் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்குதான் இடமிருக்கும். ஹயாத்பாஷா என்ற இஸ்லாமியரின் குடும்பத்தினர் 41 வருடங்களாக பாரம்பரியமாக நடத்திவருகின்றனர்.

பிரியாணியின் சுவையோ ஈடற்றது. எந்த ஊரில் பிரியாணி சாப்பிட்டாலும் ஸ்டார் ஓட்டலுடன் மனசு ஒப்பிட்டு பார்க்குமளவுக்கு ஊரில் கறி சாப்பிடுவோரின் ரத்ததிலேயே இதன் சுவை கலந்துவிட்டிருக்கும். நான் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்து இங்கு சாப்பிட்டு வருகிறேன். போன உடனே இடம் கிடைக்காது.ப்காத்திருந்துதான் இடம்பிடித்து சாப்பிடவேண்டும். பிரியாணியுடன் வைக்கும் எண்ணெய் கத்திரிக்காயின் சுவையே தனி. இங்கு மட்டன் பிரியாணிதான் ஸ்பெஷல். சுத்தமான இளங்கறியில் செய்யப்பட்டிருக்கும்.

ஊரில் பிரியாணி என்றால் அது ஸ்டார் ஓட்டல்தான். அவ்வளவு மவுசு. ஊருக்கு எந்த தலைவர்கள் வந்தாலும் அந்தந்த கட்சியின் தொண்டர்கள் பார்சல் வாங்கிக்கொண்டு போய் கொடுப்பார்கள். எங்கள் நிகழ்ச்சிக்கு வரும் தோழர்களை ஒருவேளையாவது தவறாமல் நாங்கள் அழைத்துப்போய் வாங்கிக்கொடுப்போம். அதுவே ஒரு பெருமைதான். அந்தளவுக்கு சுவையும் தரமும் மிக்க பிரியாணியை தருவார்கள்.

ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு இதிலிருந்த சிலர் பிரிந்து போய் 5 ஸ்டார் பிரியாணி ஓட்டல் என்று ரவுண்டானா பகுதியில் தொடங்கினார்கள்.பிறகு சின்னக்கடை தெரு, வேங்கிக்கால் பகுதியிலும் தொடங்கி நடத்திவருகிறார்கள். இங்கும் அதே சுவையை பராமரிக்கிறார்கள் என்றாலும் தாயின் கை மணத்துக்கு எப்பவுமே தனி இடம்தானே. அதுபோலத்தான் அந்த பழைய ஸ்டார் ஓட்டலும்.
இப்போது நிறைய ஓட்டல்கள் வந்து பெருகிவிட்டதால் இங்கு விற்பனை குறைவுதான் என்றாலும் சுவையில் மாற்றமில்லை. இவர்களும் தொழில்போட்டியை புரிந்துகொண்டு அதற்கேற்ப தயாரித்து விற்கிறார்கள்.

இவ்வளவு பாரம்பரியமிக்க ஓட்டலை அங்கிருந்து அப்புறப்படுத்த இந்து அமைப்புகள் தீவிரமாக களமிறங்கிவிட்டன. அதற்காக கோயில் அதிகாரிகள் மூலம் ஓட்டல் இருக்கும் இடத்துக்கு சொந்தக்காரர்களான ஒரு மடத்தின் நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்து. அவர்களும் இப்போது அந்தக்கடையின் பெயர்ப்பலகையை வம்படியாக அகற்றிவிட்டார்கள்.இன்னும் மூன்று மாதத்திற்குள் கடையையே அங்கிருந்து காலிசெய்யவைக்கிறோம் என்று மடத்தின் தரப்பிலிருந்து கோயில் நிர்வாகத்துக்கு உறுதி தந்திருக்கிறார்களாம்.

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், கடையையொட்டி இருக்கும் ஒரு சிறிய கோவில்தான். அங்கு ஒரு சிறிய கோவில் இருக்கிறது. அதற்கு பக்கத்தில் பிரியாணி கடை இருப்பதா என்று மதத்துவேஷத்தை விதைத்திருக்கிறார்கள்.

இதில் உண்மை என்னவென்றால் கடை தொடங்கப்பட்டது 1979 ல். கோயில் கட்டப்பட்டது சமீப 15 ஆண்டுகளுக்குள்தான். அந்த கோயில் இருக்குமிடம் வீட்டின் ஒருபகுதிதான். கிரிவலம் வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் அப்பாதையில் இருக்கும் அஷ்டலிங்க கோயில்களில் உண்டியல் காசு போடுவது வழக்கம். அதில் கிடைக்கும் வருமானத்தை பார்த்து ஊரில் ஏராளமான கோயில்கள் முளைத்தன. அதுபோல முளைத்த கோயில்தான் இதுவும். அதைக்காரணம் காட்டித்தான் இந்த கடையை காலி செய்ய நினைக்கிறார்கள்.

கடை நடந்துவரும் கடந்த 41 வருடமாக இதே தெருவில் சாமிகள் ஊர்வலம் போகின்றன. தீப நாட்களில் பத்து நாளும் காலையும் மாலையும் உற்சவமூர்த்திகள் இந்த வழியில் தான் போகிறார்கள். புகழ்மிக்க திருவூடல் உற்சவமே இந்த கடையின் அருகேதாந் நடக்கிறது. ஒருநாளும் கடவுள் கோவிச்சுக்கிட்டதே இல்லை. எல்லாம் அதனதன் போக்கில் அமைதியாக போய்க்கொண்டுதான் இருக்கிறது. ஒரு பிரச்சனையும் இல்லை.

ஆனால் இப்போது கோயில் வடிவில் மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்க இந்துத்துவ அமைப்புகள் நெருப்பை பற்ற வைக்கிறார்கள்..

என்ன செய்யப்போகிறோம்..?

– கருப்பு கருணா