Newsu Tamil
court crime தமிழ்நாடு செய்திகள் தலையங்கம் பின்னணி

ஒரு காவல் நிலையமே சிறையில் அடைக்கப்பட்ட கதை… “சாத்தான்”குளம் சரித்திரம்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 15க்கும் மேற்பட்ட காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் பால் துரை உள்ளிட்ட மேலும் ஐந்து காவலர்கள் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஏற்கனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் இரவு முதல் கூடுதலாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 15 காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் 24 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். சிபிசிஐடி ஐஜி சங்கர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய ஐந்து பேரும் விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர் படுத்தப் கொண்டு செல்லப்பட்டனர்.

முன்னதாக நேற்று இரவு 10 மணியளவில்
கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 5 காவலர்களும் மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அச்சமயம் பால்துரை தனக்கும் இந்த வழக்கிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தன்னுடைய வாழ்க்கை இந்த வழக்கினால் பறிபோய்விட்டது என்றும் மேலும் தனது கைது நடவடிக்கைக்கு அதிகாரிகளும் பத்திரிக்கையாளர்களுமே காரணம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தனக்கு சர்க்கரை நோய் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பால் துரையை சமாதானப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு கூட்டிச் சென்றனர்.

மருத்துவ பரிசோதனையின் போது சிறப்பு உதவி ஆய்வாளர் பால் துரைக்கு சர்க்கரை நோயும் மற்றும் காவலர் தாமஸ்க்கு உயர் ரத்த அழுத்தமும் இருந்ததன் காரணமாக இருவரையும் மருத்துவமனையில் அனுமதிக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் பால் துரை மற்றும் காவலர் தாமஸ் ஆகிய இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதை அடுத்து கைது செய்யப்பட்ட காவலர்கள் சாமதுரை, வெயில் முத்து, செல்லத்துரை ஆகிய மூவரும் இன்று அதிகாலை ஒரு மணியளவில் தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
தன் முன் ஆஜர்படுத்தப்பட்ட மூன்று காவலர்களையும் வரும் ஜூலை 23ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் தூத்துக்குடி அருகே பேரூரணியில் உள்ள மாவட்ட சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனிடையே தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ள சாத்தான்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை மற்றும் காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா மருத்துவமனையில் நேரில் விசாரணை மேற்கொண்டு இருவருக்கும் வரும் 23-07-2020 வரை நீதிமன்ற காவல் உத்தரவினை பிறப்பித்தார்.