Newsu Tamil
அரசியல் இந்திய செய்திகள் பின்னணி மறைக்கப்பட்டவை

சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த மாணவர் சர்ஜீல் உஸ்மானி கைது!

கடந்த டிசம்பர் மாதம் நாடு முழுவதும் நடத்தப்பட்ட குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது மத்திய அரசு குறிவைத்து வருகிறது. குறிப்பாக உத்தரபிரதேச காவல்துறையினர் மாணவர்கள் மீது பொய்யான புகார்களின் கீழ் வழக்குகளை பதிந்து சிறைகளில் அடைத்து சித்ரவதை செய்து வருகின்றனர்.

ஷர்ஜீல் உஸ்மானி கைது:

அதன் ஒரு பகுதியாக சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்த அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவரும், எழுத்தாளருமான ஷர்ஜீல் உஸ்மானி நேற்று (08-07-2020) மாலை அசாம்கரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

சி.ஏ.ஏ. போராட்டத்தில் சர்ஜீல் உஸ்மானி

கைது நடந்தது எப்படி?

இதுகுறித்து  உஸ்மானியின் சகோதரர் ஆரிப் கூறுகையில், “எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்ற 5 பேர் தங்களை குற்றப்பிரிவு போலீஸ் என்றனர். அவர்கள் சீருடை அணியவில்லை. என்ன விசயம் என நான் கேட்டேன்.  அப்போது ஐவரில் ஒருவர் `அதை நீங்கள் தெரிந்து கொள்ளத் தேவையில்லை, நாங்கள் ஏன் இங்கே இருக்கிறோம் என்று ஷர்ஜீலுக்குத் தெரியும்’ என்று கூறிவிட்டு, தேநீர் அருந்திக் கொண்டிருந்த ஷர்ஜீலின், கைகளை கட்டி, தலையைக் கீழே தள்ளியவாறு கைது செய்தனர்.

பின்னர் தாங்கள் யார் என்ற எந்த அடையாளத்தையும் காட்டாமல், உஸ்மானியின் அறையைப் பார்க்க வேண்டும் என அவர்கள் கூறினர். அங்கு சென்று அவருடைய மடிக்கணினி, அவருடைய புத்தகங்கள், ஆடைகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் எங்கள் ஒவ்வொருவரையும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றார்கள். அப்போது ஷர்ஜீல் உடனான தங்கள் உறவை குறிப்பிட சொன்னார்கள். எங்கள் தாய் வழி அத்தையையும் அவர்கள் புகைப்படம் எடுக்க கட்டாயப்படுத்தினர். அப்போது எந்த பெண் அதிகாரியும் அவர்களுடன் இல்லை” என்றார்.

பெற்றோரின் கதறல்:

இதுகுறித்து ஷார்ஜீலின் தந்தை தாரிக் உஸ்மானி பேசுகையில்,  “இது ஒரு கைது என்று நான் நம்ப மறுக்கிறேன். ஷர்ஜீல் மீதான குற்றச்சாட்டுகள் என்ன என்பதை அவர்கள் எங்களிடம் கூறவில்லை, ஷர்ஜீலுடன் பேசவும் அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை” என்றார்.

“ஷர்ஜீல் கைதுக்கான காரணம் பற்றி தெரிந்துகொள்ள ஒரு பெற்றோராகவும், மிக முக்கியமாக இந்திய குடிமக்களாக, எங்களுக்கு உரிமை உண்டு” என்று கண்ணீருடன் கூறுகிறார் ஷார்ஜீலின் தாயார் சீமா உஸ்மானி.

கேரளாவில் நடைபெற்ற போராட்டத்தில் சர்ஜீல் உஸ்மானி

என்ன சொல்கிறது போலீஸ்?

5 பேரும் தங்கள் அடையாளத்தை காட்டாததால் ஷர்ஜீல் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. கைது தொடர்பாக ஆசம்கார் போலீஸ் எந்த முறையான அறிவிப்பும் வெளியிடவில்லை. இதுகுறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் குமார் க்வோட்டிங் கூறும்போது “ஷர்ஜீலை லக்னோ தீவிரவாதத்தை தடுப்பு காவல் பிரிவு (ஏ.டி.எஸ்) கைது செய்துள்ளது. அலிகர் முஸ்லிம் பல்கலையில் நடைபெற்ற சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக டிசம்பர் மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இப்போது கைதாகியுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.

அலிகர் பல்கலையில் நடந்தது என்ன?

அலிகர் பல்கலையில் நடைபெற்ற எழுச்சிமிகு சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம்

CAA-NRC-NPR க்கு எதிராக அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தை கலைக்க போலீஸ் அத்துமீறி உள்ளே புகுந்து மாணவர்களை கடுமையாக தாக்கியது. அப்போது, மாணவர்கள் கற்களை வீசியதில் 19 போலீசார் களத்தில் காயமடைந்ததாக காவல்துறை குற்றம்சாட்டியது.

அலிகர் முஸ்லிம் பல்கலை தாக்குதல் பற்றி, ஹர்ஷ் மந்தர் மற்றும் பேராசிரியர் சாமன் லால் தலைமையிலான குழு தயாரித்த ஒரு உண்மை கண்டறியும் அறிக்கையில் காவல்துறையினர் மிருகத்தனத்துடன் நடந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர், குறிப்பாக மோரிசன் ஆண் விடுதிக்கு புகுந்து போலீஸ் நடத்திய தாக்குதலில், 100 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களில் குறைந்தது 20 பேர் படுகாயமடைந்ததாக குறிப்பிட்டு உள்ளனர்.

அலிகர் பல்கலை. மாணவரை தாக்கில் கைது செய்யும் போலீஸ்

பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு:

காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் உஸ்மானி மற்றும் சக மாணவர்கள் மீது 307 (கொலை முயற்சி), 147 (கலவரம்), 148, 149, 153, 188, 189, 332, 336, 504, 506, குற்றவியல் திருத்தச்சட்டம் பிரிவு 7, பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் சட்டத்தின் பிரிவு 3-ன் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சமீபத்தில், இந்த விவகாரத்தில் காவல்துறை குற்றப்பத்திரிகை இறுதி அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளது, விரைவில் இந்த வழக்கு இப்போது விசாரணைக்கு வர உள்ளது.

தொடரும் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராளிகளின் கைதுகள்:

தனது கைதுக்கு முன், சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தேசிய பாதுகாப்பு சட்டம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் (UAPA), குண்டர் சட்டம், தேச விரோத சட்டங்களின் கைது செய்யப்பட்ட ஷார்ஜீல் இமாம், சஃபூரா சர்கர், உமர் காலித், ஆசிப் இக்பால் தன்ஹா, சந்திரசேகர் ராவன் மற்றும் மீரன் ஹைதர் உள்ளிட்ட மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என உஸ்மானி குரல் கொடுத்து வந்தார்.

யார் இந்த சர்ஜீல் உஸ்மானி?

CAA-NRC-NPR க்கு எதிராக அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாபெரும் போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர்களில் உஸ்மானியும் ஒருவர். ஃப்ரெட்டர்நிட்டி இயக்கத்தின் தேசிய செயலாளரான உஸ்மானி மனித உரிமை போராளி ஆவார்.

எழுத்தாளர் அருந்ததி ராயுடன் சர்ஜீல் உஸ்மானி

பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்று ஒடுக்கப்படும்  மக்களின் குரலாக இருந்து உள்ளார். மேலும் Firstpost , DailyO மற்றும் Newslaundry போன்ற இணையதளங்களில் தலித், சிறுபான்மை, ஒடுக்கப்பட்டோர் நலன் குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதி உள்ளார் சர்ஜீல் உஸ்மானி.

செய்தி: வையர்

தமிழாக்கம்: நியூசு.இன்