Newsu Tamil
Headlines தமிழ்நாடு செய்திகள் பின்னணி மறைக்கப்பட்டவை

சாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பம்… பாஜக பிரமுகரின் காரில் தப்பிய இன்ஸ்பெக்டர்

தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பான சாத்தான்குளம் காவல்நிலைய, எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

இந்த படுகொலை நடந்து கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டவுடன் பீதியடைய ஆய்வாளர் ஸ்ரீதர் கார் ஒன்றில் தப்பிச்செல்ல முயன்றுள்ளார். அப்போது கங்கைகொண்டான் அருகே அவரை சிபிசிஐடி போலீஸ் மடக்கிப் பிடித்து கைது செய்தது.

இந்த நிலையில், ஸ்ரீதர் தப்பிச்சென்ற கார் அவருடையது அல்ல என்ற தகவலை உறுதிபடுத்திய சி.பி.சி.ஐ.டி போலீஸ் நம்பர் பிளேட்டை வைத்து உரிமையாளர் யார் என்று பார்த்தபோது கார் சென்னை மேற்கு மாவட்ட பாஜக அமைப்பு சாரா அணியின் செயலாளர் சுரேஷ் என்பவருடையது என்பதை அறிந்துகொண்டனர். இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பிய சி.பி.சி.ஐ.டி. நேரில் ஆஜராகி விளக்கம் கேட்டனர்.

இதையடுத்து நேற்று நேரில் ஆஜரான சுரேஷ், தான் வாடகை கார் நிறுவனம் நடத்தி வருவதாகவும் நெய்வேலியை சேர்ந்த கணேச பாண்டியன் என்பவரிடம் காரை ஒப்பந்த அடிப்படையில் வழங்கியதாகவும் அது ஸ்ரீதரிடம் எப்படி சென்றது என்று தமக்கு தெரியாது என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், பாஜக பிரமுகரின் கார் சுரேஷ் குமாரிடம் எப்படி சென்றது, மாயமான கார் இவ்வளவு நாட்களாக கிடைக்காமல் இருந்ததா? தன்னிடம் காரை பெற்றுச்சென்ற கணேச பாண்டியனிடம் இதுகுறித்து சுரேஷ் ஏன் வினவவில்லை? கணேச பாண்டியன் யார்? அவரிடம் இருந்து கார் திருடப்பட்டதா அல்லது ஸ்ரீதருக்காக காரை வாங்கினாரா? சுரேஷுக்கும் ஸ்ரீதருக்கும் தொடர்பு ஏதேனும் உள்ளதா என்ற கேள்விகள் அடுக்கடுக்காக எழுகின்றன.

தந்தை – மகன் கொலையின் பின்னணியில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்குள் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ். சதி இருப்பதாக கூறப்படும் நிலையில், பாஜக பிரமுகரின் காரில் ஆய்வாளர் தப்ப முயன்றது அடுக்கடுக்கான சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.