Newsu Tamil
தமிழ்நாடு செய்திகள் தலையங்கம் மக்கள் மறைக்கப்பட்டவை

கோவையில் மீண்டும் அடிமை முறை… துன்புறுத்தலால் தொடரும் தற்கொலைகள்!

கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத் தோட்டங்கள், பஞ்சாலைகள்,சிறு,குறு தொழிற்கூடங்கள், லேத் பட்டறைகள், கோழிப்பண்ணைகள் உள்ளிட்டவற்றில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை அறிந்த அவர்கள் குடும்பம்,குடும்பமாக தங்களது சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரயிலில் புறப்பட்டு சென்றனர். தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக தொழில் நிறுவனங்கள், தோட்ட உரிமையாளர்கள் உள்ளூர் தினக்கூலி தொழிலாளர்களை வேலைக்கு அழைத்தனர். குறிப்பாக பெண் குழந்தைகள் அதிகம் உள்ள குடும்பத்தை குறி வைத்து அட்வான்சாக(முன்பணம்) ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து செல்கின்றனர்.

அட்வான்ஸ் பணம் என சொல்லி கொடுக்கப்படும் தொகைக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் வட்டியும் வசூலிக்கப்பட்டு வருகிறது. கூலித் தொழிலாளி விடுப்பு எடுக்காமல் வேலைக்கு வந்தால் வட்டி சதவீதம் அதிகரிக்காது. அடிக்கடி விடுப்பு எடுப்பாரேயானால் வட்டி சதவீதம் அதிகரித்து கந்து வட்டி, மீட்டர் வட்டி என கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது.

அல்லது அவர்களுக்கான ஊதியத்தில் கழிக்கப்படுகிறது. வேறு பக்கம் வேலைக்கு செல்வது தெரிய வந்தால், வீட்டிற்கே வந்து தரக்குறைவான வார்த்தைகளால் திட்டுவதோடு, மறுநாள் அதிகாலையிலேயே வீட்டிற்கு வந்து தொழிலாளி அழைத்து சென்று வேலை செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதுடன், கட்டளைக்கு கீழ்படியாத தொழிலாளர்களை தனி அறையில் பூட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கட்டிடவேலை எடுத்து செய்யும் ஒரு சில கான்டிராக்டர்கள் வீடு,வீடாக சென்று அட்வான்ஸ் தொகை வாங்கிய தொழிலாளிகளை மொத்தமாக அன்னூர் பேருந்து நிலையம் அழைத்து வந்து குழுக்காளாக வேலைக்கு பிரித்து விடுகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கால் 50 சதவீத கட்டுமான பணிகளே நடைபெறுகிறது.

இந்த வேளையில் காலையில் அழைத்து வரக்கூடிய தொழிலாளர்களில் பாதி பேருக்கு கூட சரிவர வேலை இல்லாத நிலை ஏற்படுகிறது. கான்ட்ராக்டர்களை நம்பி காலை முதல் மதியம் வரை காத்திருந்து வேலையும் இல்லாமல், ஊதியம் கிடைக்காமல் வெறுங்கையுடன் வீடு திரும்பும் அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பிற்பகலுக்கு மேல் எங்கும் வேலைக்கு செல்ல முடியவில்லை. வருவாய் இழப்பால் வாழ்தாராத்தை இழந்து உணவிற்கு கூட வழியில்லா நிலையில் சிக்கி தவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக வேலைக்கு வராத தொழிலாளிகளிடம் அட்வான்ஸ் தொகைக்கு வட்டி போட்டு, வட்டிக்கும் வட்டி போட்டு கான்ட்ராக்டர்களே கந்து வட்டி கேட்டு தொழிலாளிகளை சித்ரவதை செய்வதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. தரக்குறைவான வார்த்தைகள், வேலை கிடைக்காத மன உளைச்சல், கொடூர தாக்குதலுக்கு பயந்து கூலித் தொழிலாளர்கள் தற்கொலை முடிவை தேர்ந்தெடுக்கின்றனர்.

இதில் அன்னூரை அடுத்துள்ள பட்டக்காரன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி (35) இவர், ரோடு காண்டிராக்டர் ஆன மாடசாமி (50) இடம் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வருடம் ரூ 40 ஆயிரத்தை மாடசாமியிடம் இருந்து கடனாக பெற்றுள்ளார். தற்போது ஒன்றரை லட்சமாக தரவேண்டும், எனக் கூறி மூர்த்தியின் வீட்டுக்கு வந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, ஒரு நாள் முழுக்க கழிவறையில் வைத்து மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அதில் மாடசாமியின் உறவினர் சுசிலா (40), நஞ்சம்மாள் (38) ஆகியோர் தகாத வார்த்தைகளில் மூர்த்தியின் மனைவி மோகனாம்பாளை திட்டியும், மூர்த்தியை தாக்கியும், கொலை மிரட்டல் விடுத்தும், தற்கொலைக்கு மூர்த்தியை தூண்டியும் உள்ளனர்.

இந்நிலையில் மூர்த்தி வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் மாடசாமி மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோரிடம் தாக்கியது குறித்து கூறினார். இதனையடுத்து மனைவி சுய உதவிக் குழுவில் இருந்து பணத்தை பெற்று, கடனை அடைத்து விடலாம். என தன் கணவனுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இந்நிலையில் மூர்த்தி அவமானம் தாங்க முடியாமல், தனது வீட்டில் அருகில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் மூர்த்தியைப் போலவே அங்குள்ள பலரையும், இதுபோன்ற கான்ட்ராக்டர்கள் மிரட்டி வருவது வழக்கமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கந்து வட்டியை விட அதிகமாக வட்டிக்கு வட்டி போட்டு வாங்கி தங்களை அடிமைப்படுத்தி விடுவதாகக் கூறுகின்றனர். தாங்கள் வெளியே வேலைக்கு சென்றால் அவர்கள் எங்களை அடிப்பது உறுதி.

அதனால் நாங்கள் பயந்து வெளியே செல்வதில்லை. அவர்களிடமே கட்டிட வேலைகளுக்கு, காண்ட்ராக்ட் வேலைக்கு செல்கிறோம். எனக் கூறுகின்றனர். கணவரை இழந்து வாழும் மோகனாம்பாள், தனது சிறு குழந்தைகளை எப்படி எதிர் காலம் வரை காப்பாற்றப் போகிறோம், என்ற அச்சத்திலும் ஆழ்ந்துள்ளார்.

இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இதுபோன்ற கூலித் தொழிலாளிகளின் கோரிக்கைகளாக உள்ளது.