Newsu Tamil
crime Humanity தமிழ்நாடு செய்திகள்

மாஜிஸ்ட்ரேட்டை இழிவுபடுத்திய விவகாரம் – தூத்துக்குடி எஸ்.பி காத்திருப்போர் பட்டியலில் வைப்பு .!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரியிகள் போலீசாரின் லாக் அப் தாக்குதலினால் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையானது, கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனை விசாரணை நடத்த உத்தரவிட்டது. நேற்று (28/06/2020) முன்தினம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மதியம் 12 மணிக்கு தொடங்கிய விசாரணையானது, நேற்று அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து 16 மணி நேரம் நடைபெற்றது.

விசாரணையின் போது தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 3 பேர் தனக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை ஒருமையில் பேசியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாஜிஸ்திரேட் பாரதிதாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த அறிக்கையில் தகவல்கள் :-

விசாரணைக்காக சாத்தான்குளம் காவல்நிலையம் சென்ற போது காவலர்கள் முறையாக நடந்து கொள்ளவில்லை.

உடல்பலத்தை காட்டும் தொணியில் உடலசைவுகள் செய்தார்கள்.

அவர்கள் பார்வை மிரட்டும் தொனியில் அமைந்திருந்தது.

குறிப்பேடு மற்றும் பதிவேடுகளை கேட்ட போது அவற்றை கொடுக்க பெரும் தாமதம் செய்தனர்.

நீண்ட நேரம் கழித்து குமார் என்பவர் சக ஊழியர்களை ஒருமையில் பேசி அதட்டும் தொனியில் குறிப்பேடுகளை கேட்டார்.

அன்று ஒரு மணி அளவில் தான் என்னால் விசாரணையை தொடக்க முடிந்தது.

(19/06/2000) முதல் எவ்வித காணொலி பதிவுகளும் கணினியில் இல்லை – எல்லாம் அழிக்கப்பட்ட நிலையில் இருந்தன.

காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அந்தந்த தினம் தானாகவே அழிந்து போகும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

மேலும், மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் அறிக்கையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜை காவல்துறை விடிய விடிய தாக்கியது அம்பலமாகியுள்ளது. அவரைத் தாக்கிய லத்தியை கேட்ட மாஜிஸ்ட்ரேட் கேட்டவுடன் ஒரு காவலர் தப்பி ஓடியுள்ளார்.

இதனிடையே இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. சம்பந்தப்பட்ட மூன்று காவல்துறை அதிகாரிகளும் நேரில் ஆஜரானார்கள்.

இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ..

ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்பு தொடர்பாக போலீஸ் மீது கொலை வழக்கு பதிய முகாந்திரம் உள்ளது எனவும்,

சிபிஐ இந்த வழக்கு விசாரணையை தொடங்குவதற்கு முன் தடயங்கள் போலீசாரால் அழிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும்,

சிபிஐ விசாரணையை தொடங்குவதற்கு முன் சிபிசிஐடி இந்த வழக்கு விசாரணையை உடனே தொடங்க வேண்டும், டிஜிபி உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை எனவும், உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், மாஜிஸ்ட்ரேட் ஒருமையில் பேசிய விவகாரத்தில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகிய இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். காவலர் மகாராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு காவல்துறை தரப்பில் மன அழுத்தத்தில் இருந்ததால் அப்படி பேசியதாகவும், அரசு வழக்கறிஞர் நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரினார்.

மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனுக்கு சாட்சியம் அளித்த அதே காவல் நிலையத்தை சேர்ந்த பெண் காவலருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் முழு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருள் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.