Newsu Tamil
இந்திய செய்திகள் பணம் பின்னணி

சீன ஆப்களுடன் லட்சக்கணக்கான இந்தியர்களின் வேலைக்கு ஆப்பு வைத்த பாஜக அரசு

சீனாவின் தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டு பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என பாஜகவினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தன. இந்த நிலையில், இன்று சீனாவின் 59 செல்போன் ஆப்களை செய்துள்ளது மத்திய அரசு. உடனே மத்திய அரசை புகழத் தொடங்கி விட்டனர் ஐடி விங்குகள்.

ஆனால், இதன் மறுபக்கத்தை அவர்கள் பார்க்க மறந்துவிட்டனர். இதுகுறித்து தடை செய்யப்பட்ட ஆப்களில் ஒன்றான ஷேர் இட் நிறுவனத்தில் பணிபுரியும் சென்னையை சேர்ந்த நபரிடம் நியூசு தளத்துக்கு தெரிவித்ததாவது, “இது முட்டாள்தனமான முடிவு. தடை செய்யப்பட்ட இந்த 59 ஆப் நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்துள்ள நிறுவனங்களில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக ஷேர் இட், ஹலோ, டிக்டாக் போன்ற ஆப்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மொழிவாரியாக பல்வேறு மாநிலங்களில் இந்த நிறுவனங்கள் கிளை அமைத்து இயக்கி வருகின்றன. இந்த நிறுவனங்களை சார்ந்து பல்வேறு தொழில்கள், வடிவமைப்பு நிறுவனங்கள், சுயாதீன மென்பொறியாளர்கள், சுயாதீன வடிவமைப்பாளர்கள், விளம்பர நிறுவனங்கள் என பல உள்ளன. இந்த தடையின் மூலம் இந்த நிறுவனங்களில் பணிபுரியும் எங்களைப் போன்ற ஊழியர்களுக்கு வேலையிழப்பு இருக்குமா இல்லையா என்ற சந்தேகம் எழுகிறது.” என்றார்.

ஏற்கனவே மோடி அரசின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, தனியார்மய, தாராளமய கொள்கைகளால் இந்தியாவில் பல கோடிபேர் வேலை இழந்துள்ளனர். இந்த சூழலில் சோசியல் மீடியா கருத்துக்களை படித்துவிட்டு மத்தி்ய அரசு செய்த இந்த அறிவிப்பால் மேற்கொண்டு வேலையிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இந்தியாவின் இறக்குமதி நாடுகள் பட்டியலில் சீனா முதலில் உள்ளது, எனவே சீன பொருட்களை புறக்கணித்தாலே போதும் வேறெதுவும் வேண்டாம் என்கிறார்கள். அவ்வாறு பதிவிடும் பலரும் பயன்படுத்தும் செல்போன் ரெட்மி, ரியல்மி, ஓப்போ, விவோ, ஹுவாவே போன்ற சீன நிறுவனங்களுடையதாகவே இருக்கும்…

பிச்சைக்காரன் படத்தை பார்த்துவிட்டு ₹500, ₹1,000 நோட்டுக்களை ஒழித்தால் கறுப்பு பணம் ஒழியும் என சொன்னவர்கள் தான் இவர்கள். சீனாவின் ஏற்றுமதி நாடுகள் டாப் 10 பட்டியலில் இந்தியா உள்ளது… இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாகவும் சீன கம்பெனிகள் கால் பதித்துள்ளன . ஒரே சொடுக்கில் சீனா பொருட்களை வேண்டாம் என்று மோடி சொல்லிவிட்டால் சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை வேறு எங்கிருந்தோ இறக்குமதி செய்யும் நிலைக்கு நாம் செல்ல நேரிடும்.

அத்தியாவசியமான சில பொருட்களின் தட்டுப்பாடும் ஏற்படும் நிலை வரலாம். மற்ற நாடுகளை விட மலிவான விலையில் பொருட்களை உற்பத்தி செய்யும் சீனா நமது அண்டை நாடு என்பதால் போக்குவரத்து செலவும் அதிகமில்லை. இந்த சூழலில் உற்பத்தியில் தன்னிரைவு அடையாத இந்தியா, உணர்ச்சிவயப்பட்டு சீன போன்ற நாட்டின் இறக்குமதியை குறைத்தால் பல்வேறு பின்வளைவுகள் நேரலாம். எனவே அதை இந்தியா உடனே மாற்றிக்கொள்வது சாத்தியம் இல்லாத விஷயம்.

இது ஒருபுறம் இருக்க, போர் என சிலர் கதறுகிறார்கள். பாஜக ஆட்சியமைத்ததில் இருந்தே ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்புக்கு பிறகு நோயாளி போல் சென்ற மாறிய நமது பொருளாதாரம் கொரோனாவால் ஹோமா நிலைக்கு சென்றுவிட்டது. ரிசர்வ் வங்கியின் சேமிப்பை கூட எடுத்து முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்துவிட்டார்கள். இந்நிலையில் போருக்கான செலவீனங்களை செய்வது இயலாத காரியம். அதோடு வீண் வைராக்கியங்களை விட்டுவிட்டு பார்த்தால், நம்மை விட சீனா ராணுவ வலிமையிலும் , எல்லையில் கட்டுமானத்தை கொண்டு வந்ததிலும் முதலிடத்தில் இருக்கிறது. இழப்பு இரு நாடுகளுக்கும் ஏற்படும், நமக்கு இன்னும் அதிகமாக ஏற்படும்.

இந்நிலையில் எதையும் அரசு ரீதியாக, இரு தரப்பு பேச்சுவார்த்தை ரீதியாக சரி செய்வதும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தற்சார்பு இந்தியா என்பதை குறைந்த அளவுக்காவது உருவாக்க முயல்வதிலும் மட்டுமே வெற்றி காண முடியும். முடிவுகளை அரசுகள் எடுக்கட்டும், சோஷியல் மீடியாக்கள் அல்ல.