Newsu Tamil
crime இந்திய செய்திகள் மறைக்கப்பட்டவை

17 வயது மாணவி பாலியல் படுகொலை… மலைவாழ் இனம் என்பதால் மறைத்த மீடியாக்கள்

தெலங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டம் கங்காபிஷன் பஸ்தியை சேர்ந்தவர் அசோக் பிரசாத். இவரது மூன்றாவது மகளான தேவிகா பிளஸ் டூ ( இன்டர்மீடியட் ) முடித்து இந்த ஆண்டு டிகிரியில் சேர்ந்து கல்லூரிக்கு சென்று படிக்க திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சந்தீப் என்ற இளைஞர் கடந்த புதன்கிழமை அன்று தேவிகாவின் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளார். இதனை பார்த்த தேவிகாவின் பெற்றோர்கள் சந்தீப்பின் நடவடிக்கை குறித்து அவரது பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறி கண்டித்தனர். அசோக் பிரசாத் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தேவிகா வீட்டில் இல்லை. இதனால் பல இடங்களில் அசோக் பிரசாத் மற்றும் அவரது உறவினர்கள் தேடி வந்தனர்.

தனது மகள் காணவில்லை என அசோக் பிரசாத் காவல் நிலையத்திலும் புகார் அளித்து தேடி வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை காலை சுஞ்சுபள்ளி மண்டலம் பேரியம் தண்டா அருகே ரயில்வே தண்டவாளத்தில் அரை நிர்வாணமாக உடலில் பல இடங்களில் காயங்களுடன் 17 வயது பெண் சடலமாக இருப்பதாக அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அசோக் பிரசாத் அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ரயிலில் அடிபட்டு இறந்த பெண் தேவிகா என்பது உறுதி செய்யப்பட்டது.

ஆனால் வீட்டிலிருந்த தேவிகா எவ்வாறு நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் உடலில் பல இடங்களில் காயங்களுடன் சடலமாக வந்தார் என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. சந்தீப் தன் வீட்டில் நுழைந்த தனது மகளுடன் பேச முயன்றதை பெற்றோருக்கு தெரிவித்து கண்டித்ததால் தன் மகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து தண்டவாளத்தில் வீசி இருக்கலாம் என அசோக் பிரசாத் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே தேவிகா சடலமாக மீட்கப்பட்டது அறிந்த சந்தீப் மற்றும் அவரது குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி சென்றனர். இதனால் இந்த சந்தேகம் மேலும் வலுப்பெற்றது. இதற்கிடையே தேவிகாவின் உடல் கொத்தகூடம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்பதற்காக மீண்டும் மறுமுறை பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. இந்த வழக்கில் போலீசார் உண்மையை மறைக்க நினைப்பதாகவும் குற்றவாளியை கைது செய்யா இருப்பதாக தேவிகாவின் பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மலைவாழ் இனத்தை சேர்ந்தவர் என்பதால் தேவிகாவின் மர்மமான மரணம் குறித்து ஒன்றிரண்டு ஊடகங்களை தவிர்த்து வேறு யாரும் செய்தி வெளியிடவில்லை. இதே தெலங்கானாவில் பிரியங்கா ரெட்டிக்கு நடந்த கோர சம்பவத்தை ஒட்டுமொத்த மீடியாக்களும் ஒரு வாரம் பேசின. ஆனால், இந்த சிறுமிக்கு நடந்த கோரத்தை யாரும் பேசவில்லை.

மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்தவர் தேவிகா என்பதால் இந்த வழக்கை போலீசார் அலட்சியமாக இருப்பதாகவும் இதன் மீது உரிய நியாயம் கிடைக்க செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவு செய்துவருகின்றனர். இந்த செய்தி தற்போது டுவிட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக மாறி உள்ளது.

இந்த வழக்கில் சந்தீப் தனது வீட்டிற்கு வந்ததை பெற்றோர்கள் பார்த்ததால் அதனை அவமானமாக கருதி சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பொழுது ரயில் மோதியதில் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டதா அல்லது சந்தீப் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தாரா என்ற விவரங்கள் தெரியாத நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்எல்ஏ வெங்கடேஸ்வர ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தேவிகா சம்பவத்தில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விரைவு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தேவிகாவை சந்தீப் மற்றும் அவரது நண்பர்களே திட்டமிட்டு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருப்பதாகவும் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என தேவிகாவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.