Newsu Tamil
தமிழ்நாடு செய்திகள் மறைக்கப்பட்டவை

பிரசவத்துக்கு சென்ற பெண்ணுக்கு கொரோனா… பாதியில் விரட்டியடித்த தனியார் மருத்துவர்!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் பிரசவதிற்க்காக தஞ்சையை சார்ந்த AKC மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு குலுக்கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த சற்று நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு பெண்ணிண் தாயாருக்கு வந்திருக்கிறது. மறுமுனையில் பேசிய நபர் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். மருத்துவமனையில் இருப்பதாக அவரது தாயார் கூறியவுடன் மருத்துவரிடம் அலைபேசியை கொடுக்க சொல்லி உள்ளார். பெண்ணிண் தாயாரும் அலைபேசியை மருத்துவரிடம் கொடுத்துள்ளார்.

சட்டென அலைபேசியை துண்டித்த மருத்துவர் கையில் ஓடிக்கொண்டிருந்த குலுக்கோஸை பிடுங்கி எடுத்துவிட்டு நிறைமாத கர்ப்பிணியிடம் நீங்க இங்கிருந்து கிளம்புங்க, வெளிய போங்க என்று மருத்துவமனையை விட்டு விரட்டி அடித்துள்ளார். எவ்வளவோ கெஞ்சியும் காதில் வாங்காமல் எந்த காரணமும் சொல்லாமல் அவர்களை விரட்டி அடித்துள்ளார்.

இதனால் செய்வதறியாது தவித்த பெண்ணும் அவரது தாயாரும், இறுதியாக ஆட்டோவில் ஏறி தஞ்சை பேருந்து நிலையம் வந்து நடு ரோட்டில் அமர்ந்திருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தமுமுக நிர்வாகிகள் தங்கள் அமைப்பின் ஆம்புலன்ஸை வரவழைத்து அந்தப் பெண்ணை உடனடியாக ஏற்றி தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனை மேலாளர் ஜேம்ஸிடம் தமுமுக மாநிலச் செயலாளர் தஞ்சை பாதுஷா நடந்த விஷயங்களை விளக்கியதை அடுத்து அவர் மனிதாபிமான அடிப்படையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து வர சம்மதித்தார். அந்த பெண் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு கொரோனா உள்ளிட்ட அனைத்து வகை சோதனைகளும் நடத்தப்பட்டன.

பின்னர் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், சோதனையில் அப்பெண்ணிற்கு கொரோனோ தொற்று இருப்பதாக தெரிவித்தனர். உடனடியாக அந்த பெண் தனிமைப்படுத்தப்பட்டு மீனாட்சி மருத்துவமனையினுடைய அவசர ஊர்தியில் திருவாரூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கொரோனா நோயாளி என்று தெரிந்தவுடன் கர்ப்பிணியை குளூகோசை பிடுங்கி விரட்டிய தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு எதிராக கண்டங்கள் குவிந்து வருவதுடன், உரிய நேரத்தில் உயிர் காக்கும் உதவிபுரிந்த தமுமுகவினரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.