Newsu Tamil
crime தமிழ்நாடு செய்திகள் பின்னணி

போலீசின் பொய் வழக்கு… விசாரிக்காமல் ரிமாண்ட் செய்து இருவர் இறக்க காரணமான மாஜிஸ்திரேட்

வழக்கறிஞர் தங்கபாண்டியனின் பதிவு:

சாத்தான் குளம் காவல்நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட இருவர் மீதான முதல் தகவல் அறிக்கை இது தான்.

மொத்தம் 5 பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டுள்ளது. காவல்துறை எம்புட்டு மொக்கையாக ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியும் என்பதற்கு இந்த முதல் தகவல் அறிக்கை சான்று.

இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள்: 188, 269, 294(b), 353 மற்றும் 506(ii) ஆகிய பிரிவுகள்.

பிரிவுகள் வாரியாக ஒவ்வொரு பிரிவும் என்ன சொல்கிறது என்றால்,

பிரிவு: 188
பொது ஊழியர் ஒருவரின் கட்டளைக்கு கீழ் படியாமை

பிரிவு: 269
உயிருக்கு ஆபத்தான நோய் தொற்றினை பரப்பக் கூடிய அஜாக்கிரதை செயல்

பிரிவு: 294(b)
பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல்

பிரிவு: 353
பொது ஊழியர் ஒருவரை கடமை செய்ய விடாமல் தடை செய்வதற்காக தாக்குதல் அல்லது வன்முறை செய்தல்

பிரிவு: 506(ii)

மரணம் அல்லது கொடும் காயம் விளைவிக்க தக்க குற்ற மிரட்டல். (உதாரணம். உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய ஆயுதம் கையில் வைத்துக் கொண்டு மிரட்டுவது)

இந்த ஐந்து பிரிவுகளில் கடைசி பிரிவு மட்டுமே நீதிமன்றக் காவலுக்கு அடைக்கத் தக்க பிணையில் விட முடியாத குற்றம் ஆகும். மற்ற நான்கு பிரிவுகளும் பிணையில் விட தக்க குற்றங்களே ஆகும். அதாவது காவல் நிலையத்திலேயே எதிரிகளை பிணையில் விடுவித்து இருக்கலாம்.

பிரிவு 506(ii) பயன்படுத்தும் வகையில் புகாரில் எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை. அதாவது கையில் அரிவாள், இரும்பு கம்பி, கத்தி, துப்பாக்கி போன்ற உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ஆயுதம் வைத்துக் கொண்டு கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி இருந்தால் மட்டுமே இந்த பிரிவில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய முடியும் என்பது குமாஸ்த்தாக்களுக்கு கூட நன்கு தெரியும். அப்படி இருக்கும் போது நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப தக்கக் குற்றச்சாட்டு புகாரில் இல்லை என்பதைப் படித்துப் பார்க்காமல் அவர்களை ரிமாண்ட் செய்த குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்களின் கவனக்குறைவு மிகப்பெரிய இயற்கை நீதிப் பிழை.

மேலும் புகாரில் அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் எந்த வகையில் ஏற்பட்டது என்பதை விளக்கி வாசகம் உள்ளதை கவனியுங்கள். கலைந்து போகச் சொன்ன போது அவர்கள் கலைந்து செல்லாமல் தரையில் புரண்டு உருண்டர்களாம். அதில் காயம் ஏற்பட்டதாம்.

இதையும் சரி என்று ஏற்று ஒரு நீதித்துறை நடுவர் கைதினை ஏற்று இருக்கிறார் என்றால் அவரெல்லாம் நீதித்துறைக்கு அவமானம்.

இவர் மட்டுமல்ல பெரும்பான்மையான குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் இவ்வாறு தான் கண் மூடித்தனமாக இருக்கிறார்கள்.

மேற்படி இருவரின் மரணத்திற்கு நீதித்துறையும் தார்மீக பொறுப்பேற்க வேண்டும். காவல்துறையினர் தாக்கியிருந்தாலும் கூட அதை தகுந்த முறையில் சட்ட நடவடிக்கை எடுக்க அவர்கள் உயிரைக் காக்கும் வகையில், உரிய நேரத்தில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரை செய்து இருக்கலாம்.

அதற்கும் அப்பால் அவர்களை சிறைக்கு அனுப்புவதற்கு தகுந்த உடல் தகுதியோடு இருக்கிறார்கள் என்ற மருத்துவ சான்று அளித்த மருத்துவரின் கடமை உணர்ச்சியும் வியக்க வைக்கிறது. அப்போது கூட அவர் உரிய முறையில் பரிசோதித்து இருந்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து இருந்தால் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்.

இறந்த இந்த இரண்டு உயிர்களுக்கும் என்ன பதில் சொல்லி இயற்கை நீதியையும், இன்னமும் கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையுடன் நீதிமன்றங்களை நம்பிக் கொண்டிருக்கும் சாமானியர்கள் நம்பிக்கையைக் காக்கப் போகிறது நீதித்துறை..