Newsu Tamil
அரசியல் தமிழ்நாடு செய்திகள் பின்னணி

கறி, மீன் கடைகளுக்கு தடை… அசைவத்துக்கு எதிராக போர் செய்யும் அரசு

டாஸ்மாக்கும், கோயம்பேடும்:

தமிழகத்தில் தற்போது கொரோனா சமூகப்பரவலாகி தினந்தோறும் 40-க்கும் மேலானாவர்கள் உயிரிழந்து வருகிறார்கள். இந்த அளவுக்கு கொரோனா பரவ மிக முக்கிய காரணம் டாஸ்மாக்கும், திடீர் முழுநாள் ஊரடங்கால் கோயம்பேடு காய்கறி சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் தான் என்ற செய்தி ஊர் அறிந்த ஒன்று. அங்கு வந்த வியாபாரிகள் மூலம் பிற மாவட்டங்களுக்கும் கொரோனா பரவியது. இருப்பினும் காய்கறி சந்தைகளை மூட அரசு உத்தரவிடவில்லை. அதில் நாம் குறை காண முடியாததற்கு காரணம், காய்கறிகள் அத்தியாவசிய பொருட்கள் என்று…

கறிக்கடைகளுக்கு குறி:

அதே போல் கறி, மீனும் அத்தியாவசியம் என்பதை அரசு உணர மறுக்கிறது. எனவே தான், சம்பந்தமே இல்லாமல் ஊரடங்கில் ஆடு, மாடு, கோழிக்கறி கடைகளையும் மீன் சந்தைகளையும் மூட அரசு உத்தரவிட்டது. இந்த ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கறிக்கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், மீண்டும் நேற்று முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதில்… எவ்வித கொரோனா தொற்றும் ஏற்படாத கறிக்கடைகள் மீது அரசு மீண்டும் தடை விதித்து உள்ளது. தமிழகத்தில் 90%க்கும் மேற்பட்டோர் அசைவ பிரியர்களே… இதில் பெரும்பாலானோரால் அசைவம் இல்லாமல் சாப்பிடவே முடியாது. அந்த அளவுக்கு அவர்களின் உடலும் மனதும் அசைவத்துடன் பழகிவிட்டது.

கறி, மீன் அத்தியாவசியம் அற்றதா?

அவர்களுக்கு கறி, மீன் அத்தியாவசியமான ஒன்று தான். மேலும் கறி, மீன் போன்ற ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், மிகக் குறைந்த சதவீதமே உள்ள சைவ விரும்பிகளை திருப்திபடுத்த அசைவத்தை அத்தியாவசியம் அற்றதாக மாற்றி இருக்கிறது தமிழக அரசு.

சரி இந்த கடைகளை மூடிவிட்டால் அந்த வியாபாரிகள் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வார்கள்? ஏற்கனவே வருமானம் இன்றி தவிக்கும் மீனவர்கள் நிலை என்னவாகும்? என்பதை தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

சிறுபாண்மை தலித்துகளுக்கு எதிரான அரசியல்?

இதில் இன்னும் ஒரு அரசியல் உள்ளது. தமிழகத்தில் மீன்பிடித்தொழிலில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் கறிக்கடைகளை இஸ்லாமியர்கள் நடத்தி வருகின்றனர். மாட்டுக்கறி என்பது இஸ்லாமியர்கள் மற்று தலித்துகளின் முக்கிய உணவாக இருக்கிறது. இந்த சூழலில் சிறுபாண்மையின மக்களின் வியாபாரத்தை கெடுக்கவும், தலித்துகளின் முக்கிய உணவு விற்பனையை தடுக்கவும் திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு அரசு துணைபோகிறதா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

வருவாயை முடக்க திட்டம்:

ஏற்கனவே கொரோனா பரவலின் தொடக்க காலத்தில் கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வரும் என்ற வதந்தியை பரப்பி கடும் நஷ்டத்தை ஏற்படுத்தினார்கள். அதற்கு முன்னதாக அரசு துணையுடன் ஆட்டுக்கறியில் நாய் கறி கலக்கப்படுவதாக ஊடகங்களில் பொய்யான தகவலை கொடுத்து ஆட்டுக்கறி வியாபாரத்தை அழிக்க நினைத்தனர். மாடு வெட்டுவதை செய்யக்கோரி போராடுவதும், மாட்டுக்கறி சாப்பிடுபவரை அடிப்பதும் வடமாநிலங்களில் கொலை செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில், கடல் வளத்தை அளிக்க கடலோர என்னற்ற அழிவுத்திட்டங்களை, தனியார் நிறுவனங்களை கொண்டு வருவது என பட்டியல் நீளுகிறது.

இப்படி தனித்தனியாக இடையூறு செய்துகொண்டிருந்த அரசு, மொத்தமாக இடையூறு செய்ய இந்த ஊரடங்கை பயன்படுத்திக் கொள்கிறதோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.