Newsu Tamil
இந்திய செய்திகள் சரியா? தவறா?

டெல்லி மசூதிகளில் பாங்கு சொல்ல தடையா? #FACT_CHECK

இஸ்லாத்தில், முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழுகைக்காக பாங்கு வழியாக அழைக்கப்படுகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, கூட்டு பிரார்த்தனை இடைநிறுத்தப்பட்டு, வீட்டில் தொழுதுகொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியின் துணை நிலை ஆளுநர் மசூதிகளில் பாங்கு சொல்ல தடை செய்ய உத்தரவு பிறப்பித்ததாக பொய்யாகக் கூறிய ஒரு போலீஸ்காரரின் வீடியோ முஸ்லிம் சமூகத்தினரிடையே பீதியை பரப்பியுள்ளது.

அந்த வீடியோவில் போலீஸ் காண்டபிள் இருவர், ‘அஸான்’ இருக்காது. இது டெல்லி ஆளுநரின் உத்தரவு என்றும், நீங்கள் ரோஹின் நகர் காவல் நிலையத்திற்குச் சென்று உத்தரவைப் பாருங்கள்” என்று போலீஸ்காரர்கள் சொல்வதைக் கேட்கலாம்.

டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சபா நக்வி அந்த வீடியோவை வெளியிட்டார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்தபாபாத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவை இப்போது அவர் நீக்கிவிட்டாலும், பலர் அதை டவுன்லோட் செய்து பகிர்ந்து வருகிறார்கள். ரம்ஜானின் போது டெல்லியில் பாங்கு சொல்ல அனுமதி இல்லையா? என அவர் கேட்டு உள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, “பாங்கு சொல்ல எந்தத் தடையும் இல்லை. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட இடத்திலோ, மசூதிகளிலோ அல்லது வேறு எந்த மத இடங்களிலோ பிரார்த்தனைக்காக மக்களை ஒன்று சேர்ப்பதற்கு முழுமையான தடை உள்ளது” என்று கூறினார்.

டெல்லி போலீஸ் வெளியிள்ள அறிவிப்பில், “பிரார்த்தனைகளை கடைபிடிக்கும்போது மக்கள் ஊரடங்கு விதிகளை பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். என்.ஜி.டி. வழிகாட்டுதல்களின்படி மசூதிகளில் பாங்கு சொல்லலாம்” என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் டெல்லியில் பாங்கு சொல்ல தடை இல்லை என்பது உறுதியாகிறது. அப்படி இருக்க போலீஸ் அதிகாரி எதற்காக பாங்கு சொல்ல தடை என சொன்னார்? அந்த வீடியோ உண்மையா என ஆராய்ந்தபோது, அது உண்மையான வீடியோ என்பதை அறிய முடிந்தது.

இதுகுறித்து பி.பி.சி. இந்திக்கு விளக்கமளித்துள்ள அப்பகுதியின் துணை காவல் கண்காணிப்பாளர் எஸ்.டி.மிஸ்ரா, “நான் இன்று காலை வீடியோவைப் பார்த்தேன். உண்மையில், பாங்கிற்கும் தொழுகைக்கும் உள்ள வித்தியாசத்தை அன்த போலீஸ் கான்ஸ்டபிள் புரிந்து கொள்ளவில்லாமல் தவறான தகவலை கூறினார். சமூக விலகல் [விதிமுறைகள்] காரணமாக, மசூதிகளில் தொழுகை நடத்த தடைசெய்யப்பட்டுள்ளது, ஆனால் பாங்கு சொல்ல எந்த தடையும் இல்லை. தவறான தகவல்களை பரப்பியதற்காக போலீஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அலுவலகத்தில் இருந்து அத்தகைய உத்தரவு எதுவும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள அனைத்து மசூதிகளின், மௌலவிகளுக்கும் நாங்கள் தகவல் அளித்துள்ளோம்.” என்றார்.