Newsu Tamil
cinema தலையங்கம் பின்னணி

காருக்குள் கதறிய விஜய், பாவாடைக்குள் அஜித் – மானத்தை வாங்கும் ரசிகர்கள்

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் இனம், மதம், மொழி, நிறம் கடந்து தங்களது உதவியையும் ஆதரவையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு வருகின்றனர்.

ஆனால், இதுநாள் வரை பரம எதிரிகளாய் இருந்தவர்களையும் ஒன்று சேர்க்க முடிந்த கொரோனாவால் நம்ம ஊர் தல-தளபதி ரசிகர்களை ஒன்றிணைக்க முடியவில்லை என்பதுதான் நிஜம். கடந்த சில நாட்களாக ட்விட்டரில் நடிகர்கள் அஜித் மற்றும் விஜயின் ரசிகர்கள் மாறி மாறி வசைமாரி பொழிந்து வருவதுதான் அதற்கு சாட்சி.

பொது இடங்களிலும், மேடைகளிலும் அதிகம் பேசாமல் கண்ணியமாக நடந்துகொள்ளக்கூடிய நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். ஆனால், இவர்களின் தீவிர(?) ரசிகர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் ட்விட்டரில் உருவாக்கும் ஹாஸ்(#)டாக்குகளும், பதிவுகளும் முகம் சுழிக்கவைக்கின்றன.

உலகமே கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவுகளையும், ஹாஸ்(#)டாக்குகளையும் பகிர்ந்து கொண்டிருக்கும் போது, #மே1அஜித்துக்குபாடைகட்டு, #June22blackdayforvijay போன்ற கேவலமான ஹாஸ்டாக்குகளை உருவாக்கி தேசிய அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

திரைக்குப் பின்னால் நடிகர் விஜய்யும் அஜித்தும் நல்ல நண்பர்களாக இருக்கும்போதிலும் அவர்களது ரசிகர்கள் ஒருவரை ஒருவர் ஆமைக் குஞ்சு எனவும் அணில் குட்டி எனவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் இவர்கள் பகிரும் ஹாஸ்டாக்குகளும் பதிவுகளும் சில நேரங்களில் தனி மனிதர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன. கடந்த வருடம் ஜூலை மாதம் தல-தளபதி ரசிகர்களுக்கிடையில் ட்விட்டரில் ஏற்பட்ட மோதல் காரணமாக ரோஷன் என்பவர் (விஜய் ரசிகர்) உமா சங்கர் (அஜித் ரசிகர்) என்பவரால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்தார்.

தல-தளபதி ரசிகர்களின் மோதல் போக்கை ஆளும்கட்சிகளின் ஐ.டி விங்குகளும் நன்றாக பயன்படுத்தி கொள்கின்றன. நாட்டில் நடக்கும் முக்கிய பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக இந்த ஐ.டி. விங்குகளின் போலி கணக்குகள் ரசிகர்களாக அரிதாரம் பூசிக்கொண்டு #பாவடைக்குள் அஜித் , #காருக்குள் கதறிய விஜய் என நாகரிகமற்ற ஹாஸ்டாக்குகளை உருவாக்கி பிரச்சனையை கிளப்பிவிடுகின்றனர்.

ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் ஒரு நாட்டின் தலைப்புச் செய்தியையே மாற்றும் அளவுக்கு வலிமை மிக்கதாக மாறி உள்ளன. குரலற்றவர்களின் குரலாக அதிகார மட்டத்தில் ஓங்கி ஒலிக்கும் ஆயுதமாக ட்விட்டர் மற்றும் முகநூல் ஹாஸ்டாக்குகள் மாறிவரும் நிலையில் அஜித்-விஜய் ரசிகர்கள் அவற்றை தவறாக பயன்படுத்துவதால் முக்கியமான பல பிரச்சனைகள் மக்களின் கவனத்தை ஈர்க்கத் தவறிவிடுகின்றன.

இந்தியாவுக்கே பகுத்தறிவை கற்றுக்கொடுத்த ஒரு மாநிலத்தின் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் நடிகர்களுக்காக சண்டையிடுவது மற்ற மாநில மக்களிடத்தில் தமிழர்கள் குறித்த தவறான அபிப்ராயம் உருவாக காரணமாகி விடுகின்றது.

ஊடகங்கள் மறந்த மற்றும் மறைக்க நினைக்கும் செய்திகளையும் இடித்துரைத்து எடுத்துரைக்க வைக்கும் சமூக வலைதளங்களை தல-தளபதி ரசிகர்கள் இனிமேலாவது ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு உபயோகப்படுத்த வேண்டும் என்பதே சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்களின் எதிர்பார்ப்பு.