Newsu Tamil
cinema சரியா? தவறா? தமிழ்நாடு செய்திகள்

கோயில்கள் வேண்டாம் என பேசினாரா ஜோதிகா?

காலை எழுந்து பல் துலக்குவது முதல் இரவு தூங்கும் வரை சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்கள் மீது சமூக வலைதளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்யாமல் சங்கிகள் திருப்தி அடையமாட்டார்கள். பேஸ்புக் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே இந்நிலை தொடர்கிறது.

இவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக அண்மையில் அரபிகள் கொதித்து எழுந்து வளைகுடாவில் பணிபுரியும் சங்கிகளின் வேலையை பறித்ததால் இந்தியாவில் உள்ள சங்கிகளும் அடக்கி வாசித்தனர். நாராயணன், எஸ்.வி.சேகர் போன்றோர் ஒரு படி மேலே சென்று இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசத் தொடங்கினர்.

இந்த நிலையில், வேறு யாரை சீண்டலாம் என யோசித்துக் கொண்டிருந்த சங்கிகளிடம் சிக்கிக் கொண்டார் நடிகை ஜோதிகா. அண்மையில் வைரலான JFW விருது வழங்கும் விழாவின் வீடியோ தான் இதற்கு காரணம். அதில் ஜோதிகா கோயில்களுக்கு எதிராக பேசிவிட்டதாக பொங்குகிறார்கள். சரி என்ன வீடியோ என நாம் தேடிப்பார்த்தோம்.

அதில் பேசிய ஜோதிகா,

“பிரகதீஸ்வரர் கோயில், அது அவ்வளவு அழகாக இருக்கும். அதை பார்க்காமல் போகாதீர்கள் என்றார்கள் நான் அதை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அவ்வளவு அழகாக இருக்கும். உதய்பூர் அரண்மனை போல் அது இருக்கும். அந்த அளவுக்கு அதை பராமரித்து வருகின்றனர். அடுத்த நாள் மருத்துவமனையில் எனக்கு சூட்டிங் இருந்தது. அங்கு சென்றபோது அது மிக மோசமாக பராமரிக்கப்பட்டு இருந்தது. நான் பார்த்ததை எல்லாம் அதை என் வாயால் சொல்ல முடியாது. நான் ராட்சசியின் கூட இதை சொல்லி இருக்கிறேன். கோயிலுக்காக அவ்வளவு காசு கொடுக்கிறார்கள், அவ்வளவு செலவு செய்கிறீர்கள். பெயிண்ட் அடிக்கிறீர்கள், நன்றாக பராமரிக்கிறீர்கள், கோயில் உண்டியலில் அவ்வளவு காசு போடுகிறீர்கள். அதே காசை பள்ளிகளுக்கு கொடுங்கள், மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். அது ரொம்ப முக்கியம் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அந்த மருத்துவமனையை பார்த்த பிறகு நான் அந்த கோயிலுக்கு செல்ல வில்லை. மருத்துவமனைகளும் பள்ளிகளும் மிகவும் முக்கியமானவை அதற்கும் உதவி செய்வோம்.” என்றார்.

ஜோதிகாவின் இந்த பேச்சில் கோயில்களுக்கு எதிராக எதுவுமே இல்லை. கோவில்களை போல் மருத்துவமனைகள், பள்ளிகளை பராமரியுங்கள். கோயில்களைப் போல் மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் உதவுங்கள் என சொன்னது தவறா? என்ற கேள்வி எழுகிறது. குவாரண்டைன் காலத்தில் வீட்டில் வெட்டியாக அமர்ந்திருப்பவர்கள் நேரத்தை கழிப்பதற்காக வேண்டுமென்றே இதுபோன்று ஒருவர் பேசியதை திரித்து அவர் மீது வெறுப்பை தூண்ட நினைக்கிறார்கள்.