Newsu Tamil
அரசியல் பணம் பின்னணி

இதுக்கு பேரு நிவாரணமா? செம்ம போங்கா இருக்கே…

எல்லையில் ராணுவ வீரர்கள் எவ்வளவு சிரமத்தில் பணிபுரிகிறார்கள் என்றும் இந்த நேரத்தில் நாம் அரசுக்கு துணை நிற்க வேண்டும். மாறாக, அரசை விமர்சிப்பது கூடாது என்பது போன்ற பல ‘நடுநிலை’ கருத்துக்கள் அவ்வபோது வந்து விழுவதைப் பார்க்க முடிகிறது.

மேலோட்டமாகப் பார்த்தால் இவைகள் எல்லாம் நியாயமானவை என்றே தோன்றும். ஆனால், இத்தகைய கருத்துக்களை யார் முன்வைக்கிறார்கள் என்று தொடர்ச்சியாக கவனித்தால் இது ஒரு அரசையோ, அரசின் பொறுப்பில் உள்ளவர்களையோ, அவர்களின் தவறுகளிலிருந்து காப்பாற்றுவதற்காக சொல்லப்படும் வார்த்தைகளே. இன்னும் சொல்லப்போனால், முன்வைக்கப்படும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாதபோது உணர்ச்சிகளை முன்னிறுத்தி சிந்தனையை பின்னுக்குத்தள்ளும் தந்திரம் அதற்குள் உள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை இன்றுவரை எழச் செய்ய முடியாமல் போன நடவடிக்கைகளில் ஒன்றான பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போதுதான் வங்கி வாசல்களிலும் ஏடிஎம் வாசல்களிலும் இப்படி காத்துக்கிடக்க வேண்டுமா? என்ற கேள்விக்கு இந்தப் பதிலை வலதுசாரிகள் வலுவாக முன்வைத்தார்கள். கருப்பு பணத்தையே அந்த ஒரே நடவடிக்கையின் மூலமாக இல்லாமல் செய்து விடுவது போலவும், தீவிரவாதத்தை பூண்டோடு அந்த நடவடிக்கை ஒழித்துவிடும் என்பது போல பசப்பித் திரிந்தார்கள். உண்மையில் அவர்களுக்கு அப்போதே இந்தத் திட்டம் தோல்வியடைந்துவிடும் என்பது தெரிந்தே முன்வைத்தார்கள்.

தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு எடுக்கும், அல்லது எடுக்கத் தவறிய நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்களை வைத்தால், ஒரு இக்கட்டான சூழலில் அரசின் மீது விமர்சனம் வைக்கலாமா என்று தங்களால் எதிர்கொள்ள முடியாத விமர்சனத்தை இப்படி எதிர்கொள்கிறார்கள். இந்த விமர்சனங்கள் இக்கட்டிலிருந்து வெளியே வருவதற்கான ஆலோசனைகள்தான் என்பதை அவர்கள் மறைக்க விரும்புகிறார்கள்.

உதாரணமாக, கேரள அரசு 20000 கோடி ரூபாய்க்கு கொரோனாவை எதிர்கொள்வதற்கான நிதி அறிவிப்புகளை செய்தபோது, தமிழகத்தின் ஆளும் கட்சியும் மத்திய ஆளும் கட்சியும் அதை துச்சமாகவும் கேலியாகவும் பேசித் திரிந்தார்கள். இன்னும் சொல்லப்போனால், மத்திய பணியில் வருவாய்த்துறை செயலாளராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் ஒரு தொலைக்காட்சியில் ஒரு மாநிலத்திற்கு எதற்கு 20000 கோடி? இந்தியா முழுவதற்குமே 30000 கோடி போதும் என்று பேசிவிட்டுப் போனார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே எல்லா மாநில அரசுகளும் மத்திய அரசும் கூட கூடுதலாகவோ குறைவாகவோ ஒரு நிதியுதவி அறிவிப்பைச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

மத்திய அரசு 1.71 லட்சம் கோடிக்கு உதவிகள் செய்வதாக தன்னைத்தானே கொண்டாடிக் கொண்டது. ஆனால், அதன் இரண்டே இரண்டு அம்சங்களை மட்டும் பகுத்துப் பார்த்தால் அது எவ்வளவு பெரிய மோசடி என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

முதலாவதாக, தொழிலாளர்கள் குறித்து மூன்று அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டார்.

1. வருங்கால வைப்பு நிதி – வருங்கால வைப்பு நிதியில் தங்கள் கணக்கிலுள்ள மொத்த பணத்தில் 75% தொழிலாளிகள் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார். அதாவது, இந்தப் பிரிவினருக்கு அரசாங்கம் ஏதும் கொடுக்கப் போவதில்லை. மாறாக, ஓய்வு பெறும்போது அவர்கள் பாதுகாப்பிற்காக இருக்கக் கூடிய தொகையில் முக்கால் பங்கை இப்போதே எடுத்துக் கொள்ளலாம். எனவே, இதில் அரசின் பங்கு எதுவும் இல்லை.

2. மாதந்தோறும் தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தில் 12% மற்றும் நிர்வாகம் அதற்கு ஈடான தொகையும் தொழிலாளர்கள் வைப்பு நிதியில் செலுத்துவார்கள். இந்த 24% அடுத்த 3 மாதத்திற்கு அரசு தானே செலுத்திவிடுவதாகச் சொன்னது. இது பெரிய சலுகைபோல தோன்றும். ஆனால், அதற்கடுத்து ஒரு நிபந்தனை போட்டார். அந்த நிபந்தனை இந்த சலுகை 100 பேருக்கு கீழே பணிபுரியும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றார். 100 பேருக்கு கீழ் பணிபுரியும் நிறுவனங்களுக்கும் பொருந்தாது, 20 பேருக்கு கீழ் பணிபுரியும் நிறுவனங்களுக்கு சட்டப்படியே பொருந்தாது.

அதற்கடுத்து ஒரு நிபந்தனை விதித்தார். இந்த நிறுவனங்களில் உள்ள தொழிலாளிகளில் 90%க்கு மேல் 15000 ரூபாய்க்கு குறைவாக சம்பளம் பெற்றால் மட்டுமே அந்த நிறுவனங்களுக்கு இது பொருந்தும் என்றார். அதாவது, 100 பேர் பணிபுரிகிற ஒரு தொழிற்சாலையில் 10 பேர் கூட 15000 ரூபாய் சம்பளம் வாங்காமல் இருக்க வேண்டும். அதாவது, அந்த நிறுவனத்தின் உயர் பொறுப்பிலிருந்து மேற்பார்வையாளர்களாக இருக்கும் யாரும் சராசரியாக ஒரு நாளைக்கு 500 ரூபாய் கூட சம்பளம் வாங்கக் கூடாது. இதனால் எத்தனை பேருக்கு லாபம் கிடைக்கும்.

இரண்டாவது கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கட்டுமான வாரியங்களிலுள்ள ரூ 31000 கோடியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். இந்தப் பணம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லை, மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லை. அந்தந்த மாநிலங்களிலுள்ள நலவாரியங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, இதற்கும் மத்திய அரசு இதற்கும் ஒரு நையா பைசா கூட ஒதுக்கப்போவதில்லை. ஆனால், இந்தப் பணத்திற்கு வரும் வட்டியில்தான் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நலவாரியப் பலன்கள் முழுவதும் வழங்கப்படுகின்றன. இந்தத் தொகையை அப்படி எடுத்து செலவழிக்க ஆரம்பித்தால் நலவாரியங்களே காணாமல் போகும்.

எனவே, மத்திய அரசு தொழிலாளர்களுக்கு என்று கொரோனா நிவாரணத்திற்காக எந்தத்துரும்பையும் கிள்ளிப் போடவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், இமயமலையையே இழுத்துக் கொண்டு வந்திருப்பதாக தம்பட்டம் அடிப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களின் வாதம். விருப்பம். எந்த பகுத்தறிவு உள்ள ஒரு மனிதனும் இதை ஏற்றுக் கொள்ளமாட்டான். அதை விமர்சிக்காமல் இருப்பதுதான் மக்கள் விரோதம்.

விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் கூட இதேபோன்ற அல்வா கொடுக்கும் வேலையைத்தான் அமைச்சர் செய்திருக்கிறார்.

இப்படிச் சொல்பவர்கள் கொரோனா காலத்தில்

1. டெல்லியில் ராஜபாதை மற்றும் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அமைப்பதற்கு 20000 கோடி ஒதுக்கலாமா?

2. பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் வாடும் நிலையில் கூட பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் கூடுதல் கலால் வரியை இன்னும் 8 ரூபாய் விலையேற்றிக் கொள்ள அனுமதிக்க சட்டம் இயற்றலாமா?

3. ஊரடங்கு முழுமையாக விலக்கிக் கொள்ளும் முன்பே ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்கனவே உயர்ந்திருக்கும் நிலையில் இன்னும் உயர்வதற்கு வாய்ப்பளிக்கும் முறையில் சுங்கக்கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்கலாமா? அதை உயர்த்திக் கொள்ள அனுமதிக்கலாமா?

4. நாடே கொரோனாவை எதிர்த்தப் போராட்டத்தில் நிற்கும்போது மின்சார வாரியத்தின் மின்விநியோகத்தை தனியாருக்கு கொடுப்பதற்கு ஒரு வரைவுச் சட்டத்தை அரசின் இணையதளத்தில் போட்டு அதற்கு பொதுமக்களின் கருத்தை கேட்கிறேன் பேர்வழி என்று சொல்வது அநியாயமில்லையா?

என்றெல்லாம் கேட்கமாட்டார்கள்.

ஏனென்றால், விமர்சனமும் அரசியல்தான். விமர்சனம் கூடாது என்பதும் அரசியல்தான். யாருக்கான அரசியல் என்பதுதான் முக்கியம். மக்களுக்கான அரசியலை முன்னெடுப்போர் மக்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் அவர்களிடமுள்ள வலுவான ஆயுதம் விமர்சனமே. அதை எப்போதும் கைவிட்டுவிடக் கூடாது.

-கனகராஜ் கருப்பையா