Newsu Tamil
Headlines

இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி!

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாபர் மசூதி நில வழக்கின் தீர்ப்பை கடந்த 9-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு வெளியிட்டது. ராம் லல்லா தரப்பிடம் அயோத்தி நிலம் தங்களுக்கு தான் சொந்தம் என எந்த ஆவணங்களும் இல்லாத சூழலில் நம்பிக்கை, புராண கதைகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், சன்னி தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், இந்த தீர்ப்பை பாஜக, ஆர்.எஸ்.எஸ். கூட்டணி கட்சிகள், சங்க்பரிவார் அமைப்புகள் இருகரம் கூப்பி வரவேற்றனர். பாபர் மசூதியை வைத்தே அரசியல் செய்தவர்கள் அதை வரவேற்காமல் இருப்பார்களா என்ன? ஆனால், இதை கடுமையாக எதிர்ப்பார்கள் என நம்பப்பட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளும் இந்த தீர்ப்பை வரவேற்றது தான் பலருக்கும் அதிர்ச்சி.

அவர்களின் கருத்துக்களை தற்போது காண்போம்:

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: “நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்த பிரச்சனைக்கு, உச்ச நீதிமன்றம் ஒரு தீர்வு கண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே, தீர்ப்பு வழங்கிய பின், அதை எந்தவித விருப்பு, வெறுப்புக்கு உட்படுத்தாமல், அனைத்து தரப்பினரும், சமமான சிந்தனையுடன் ஏற்க வேண்டும். மத நல்லிணக்கத்தை போற்றி, நாட்டின் பன்முகத் தன்மைக்கு, எவ்வித சேதாரமும் ஏற்பட்டு விடாமல், எச்சரிக்கை உணர்வுடன், முன்னெடுத்து செல்ல வேண்டும்.”

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: “அயோத்தி வழக்கின் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தால் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுாறு ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்கிறது. அந்த தீர்வை, தமிழக காங்கிரஸ் கட்சி, தலைவணங்கி ஏற்கிறது. தேசியக் கொடிக்கு, நாம் மரியாதை செலுத்துவது போல, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், மரியாதை செலுத்த வேண்டும். அவரவர் வணங்கும் கடவுளின் பெயரால், இந்த தீர்ப்பை முழுமையாக ஏற்று, மிகவும் மகிழ்ச்சியான ஒரு சமுதாயமாக, இந்திய சமுதாயம் திகழ வேண்டும்.

இஸ்லாமியர்களின் பாதுகாவலர்கள் நாங்கள் தான், பாஜகவுக்கு வாக்களித்தால் இஸ்லாமியர்களை அழித்துவிடுவார்கள் என மேடைக்குமேடை பேசி வாக்கு சேகரித்த திமுக காங்கிரஸ் தலைவர்கள் இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.”

இவர்கள் இப்படியென்றால் இஸ்லாமியர்களின் பிரதிநிதியாக தன்னை அடையாளப்படுத்திகொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீனோ அதற்கும் மேல் தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்: “பாபர் மஸ்ஜித் – ராமஜென்ம பூமி இடம் சம்பந்தமான, நீண்ட நாள் வழக்கிற்கு, உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்து விட்டது. ஐந்து நீதிபதிகளும், ஒரே விதமான தீர்ப்பை அளித்துள்ளனர். இந்திய ஜனநாயகத்தில், சட்டப் பிரச்னைக்கு, இறுதி முடிவு அளிக்கும் அதிகாரம், உச்ச நீதிமன்றத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது இறுதியானது. தீர்ப்பில் இடம் பெற்றிருக்கும், ஒவ்வொரு அம்சம் குறித்த வாதப் பிரதிவாதம், இன்றைய தேவை இல்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதும், அதை ஏற்பதும், அதை நடைமுறைப்படுத்த, எல்லாரும் உடன்பட்டு ஒத்துழைப்பதும், இன்றைய காலத்தின் கட்டாய தேவை. இந்திய மக்கள் அனைவரும், இதயப்பூர்வமாக இணைந்து வாழும், சமூக சுமுகத்தை உருவாக்கப் பாடுபடுவதே, எல்லாருடைய தேசிய கடமையாக கொள்ள வேண்டும்.

இந்த கூட்டணியிலேயே சற்று நியாயமாக கருத்து தெரிவித்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மட்டும் தான்: ஹிந்துக்களின் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக வைத்து, மொத்த இடத்தையும், அவர்களுக்கே வழங்கியிருப்பது, அரசியல் தலையீட்டின் வெளிப்பாடாகவே தெரிகிறது. ராமர் கோவிலை கட்ட, மத்திய அரசு அறக்கட்டளை நிறுவ வேண்டும் என்பதைப் போல, பாபர் மசூதியை கட்டவும், ஏன் அறக்கட்டளை நிறுவக் கூடாது? இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

தீர்ப்பு 10:30 மணி வாசிக்கப்படுகிறது என்றால் இவர்களின் அறிக்கைகள் 11 மணிக்கெல்லாம் ஊடகங்களின் ஒளிபரப்பாகிறது. அரைமணி நேரத்துக்குள் சுமார் 1,500 பக்க தீர்ப்பை இவர்கள் வாசித்துவிட்டு தான் இந்த அறிக்கை தயார் செய்தார்களா அல்லது எந்த வகையில் தீர்ப்பு வெளியானாலும் வரவேற்கிறோம் என சொல்லிவிடலாம் என அறிக்கை தயாரித்தார்களா, அல்லது பெரும்பான்மை இந்து மக்களின் வாக்குகளுக்காகவே என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

மேலும், தலைவர்களின் இந்த அறிக்கை நீதிமன்ற அவமதிப்புக்கு வழக்குக்கு அஞ்சியா அல்லது மத்திய பாஜக அரசு இவர்கள் மீது வைத்துள்ள வழக்குகளுக்கு அஞ்சியா என்பதும் புரியவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கோ, நீதிபதிகள் மீதோ உள்நோக்கம் கற்பித்தல், அவதூறு பரப்புதல் தான் சட்டத்துக்கு புறம்பானதே தவிர நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது, ஜனநாயக உரிமை. நீதிமன்ற தீர்ப்பின் மீது விமர்சிப்பதை, மாற்றுக்கருத்தை இந்திய ஜனநாயகம் அனுமதிப்பதால் தான், தீர்ப்புக்கு மேல்முறையீடு, மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யும் நடைமுறைகள் உள்ளன.

உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தால் வழக்கு பாயும் என மிரட்டும் இதே பாஜகவினர் தான் சபரிமலை தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் வெளியானபோது அதற்கு எதிராக கேரளாவில் மிகப்பெரிய போராட்டத்த்அஇ நடத்தியதுடன், தீர்ப்பை அமல்படுத்த பெண் பக்தர்கள் கோவிலுக்குள் செல்வதை தடுத்து வன்முறையில் ஈடுபட்டனர். இவர்களில் எத்தனை பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்தது.