Newsu Tamil
தமிழ்நாடு செய்திகள் தலையங்கம் பின்னணி

மருத்துவர் போராட்டம் மக்கள் நலனுக்கு என புரியாமல் திட்டும் பேஸ்புக் போராளிகள்..!

இத படிக்கும் போதே சுர்ர்ர் ன்னு…கோவம் தலைக்கேறி….”ச்ச.. நோயாளிகள் எவ்ளோ கஷ்டப்படுவாங்க !! இந்த டாக்டருங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா”-ன்னு நினைக்கும் நபர் நீங்களாயின்

இதோ…
1.அவசர சிகிச்சை பிரிவு
2.மகப்பேறு மற்றும் சிசு மருத்துவம்
3.காய்ச்சல் பிரிவு

ஆகிய மூன்றும் இந்த நொடி வரை, தங்கு தடையின்றி,போராட்டம் முழு வீச்சில் இருக்கும் பொழுதும் எவ்வித பாதிப்பும் இன்றி இயங்கிக் கொண்டே இருக்கின்றன….இந்த 3 பிரிவுகளும் உயிர் காக்கும் பிரிவுகள் என்பதாலும்,மருத்துவர்கள் சினிமாவில் காமிக்கும் அளவிற்கு மனித நேயம் அற்றவர்கள் இல்லை என்பதாலும் எங்கள் பணி இந்த பகுதிகளில் என்றும் போல 100% சிறப்பாக செயல்பட்டே வருகிறது.

சோ,கோவம் போய்டுச்சா….இன்னும் கொஞ்சம் இருந்தாலும் பரவால்ல…வாங்க..கடைசி வரி படிக்குறப்ப போய்டும்.

எதுக்கு டாக்டர் Strike லாம் ?? இவ்ளோ சம்பளம் வாங்குற நீங்களே strike பண்ணா தினக்கூலி க்கு மார் அடிக்கிறவன் லாம் எங்க போய் அழுவான் ??

அதாவது தலைவா….எங்க போராட்டத்தில் 3 முக்கிய கோரிக்கைகள் உண்டு.

கோரிக்கை 1:

அரசு மருத்துவர்களுக்கு முதுகலை(M.D/M.S) படிப்பிற்க்கான 50% இடஒதுக்கீடு மீண்டும் வேண்டும் என்றே.

2016 இல் NEET வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் இது இருந்துச்சு…அப்படின்னா என்ன டாக்டர்??

அதாவது ஒரு டாக்டர் 5 1/2 வருஷம் கஷ்டப்பட்டு MBBS படிச்சு முடிக்கிறார் ன்னு வெச்சிக்குவோம்…அவர் மேற்கொண்டு M.D/M.S படிக்க குறைந்த பட்சம் 2 வருடமாவது அதற்க்காக அவரை ஆயத்தம் செய்து கொள்ள வேண்டும்…எல்லாராலும் 2 வருஷம் வேலைக்கு போகாம உக்காந்து படிக்க முடியுமா ?? வீட்டு கஷ்டம்,தம்பி படிப்பு,அக்கா கல்யாணம் ன்னு பல வித குடும்ப சிக்கல்கள் காரணமா அவர் வேலைக்கு செல்ல வேண்டும்…அதனால அவங்க எல்லாரும் முதுகலை படிப்பு செய்ய அரசு ஒரு திட்டம் கொண்டு வந்துச்சு….என்னன்னா 2 வருஷம் உங்க பகுதியில நீங்க அரசாங்க மருத்துவரா வேலை செய்ங்க….2 வருஷம் முடிஞ்சதும் நீங்க முதுகலை படிப்பு படிக்க 50% இட ஒதுக்கீடு செய்து தரப்படும் அப்டின்றது தான்.

இதனால தன்னோட ஊருக்கே நிறைய மருத்துவர்கள் பணிக்கு செல்ல ஆரம்பிச்சாங்க,தான் சின்ன புள்ளையா இருக்கும் போது தன்னை தூக்கி வளத்த பாட்டியை அவன் வளர்க்க ஆரம்பிச்சான்….தன் பகுதி மக்களுக்கு என்னென்ன தேவை ன்னு சின்ன வயசுல இருந்தே பாத்த அனுபவம் இருந்ததால்,மருத்துவத்தோட சேர்ந்து அவன் போடும் ஊசியில் அன்பும் குருதியில் கலந்தது…

NEET வந்ததுக்கு அப்புறம் இந்த இடஒதுக்கீடு இல்லை…சோ,சொல்லுங்க…இனி எந்த டாக்டர் அரசாங்க உத்தியோகம் வருவான்…தாத்தா பாட்டிக்கு யார் அரவணைப்பா ஊசி போடுவாங்க ? இதுல மருத்துவன விட மக்களுக்கு தானே பாதிப்பு அதிகம்.!

கோரிக்கை 2:

சம்பள உயர்வு கேட்டு மருத்துவர்கள் போராடுவதா நிறைய பேர் தப்பா புரிஞ்சு வெச்சுருக்காங்க…நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

ஐய் டாக்டர்…இந்த கப்சா தான வேணாம்ன்றது !! அப்டி என்ன உங்களுக்கு நியாயமா சம்பளம் குடுக்கல சொல்லுங்க பாப்போம்.

அதாவது தலைவா…மத்திய அரசு(CENTRAL) கீழ் வேலை செய்யும் மருத்துவருக்கு வேலைக்கு சேர்ந்த 14 வருஷம் கழிச்சு 1.21 லட்சம்…ஆனால் தமிழக மருத்துவர் இதை எட்ட 7 ஆண்டு காலம் மேலும் காத்திருக்கணும்…அதாவது 21 வது வருடத்தில் தான் இவருக்கு 1.21 லட்சம் சம்பளம்…அந்த காலத்துக்கு அது வெறும் 20000 மதிப்பு மட்டுமே இருக்கும் என்பது இன்னொரு கொடுமை…இவங்க ரெண்டு பேருமே வேலைக்கு சேரும் பொழுது அவர்களின் சம்பளம் 56100 ரூபாய்.

சரி டாக்டர்…நீங்க 56100 ரூபாய் கம்மி ன்னு சொல்லுறதெல்லாம் உங்களுக்கு அநியாயமா தெரிலையா??

தலைவா…நீதிபதியின் கீழ் பணியாற்றும் எழுத்தரின் சம்பளம் எங்களின் சம்பளத்தை விட அதிகம்…அதுக்காக,அவர் செய்யும் தொழில் கம்மி ன்னு சொல்ல மாட்டேன்…எந்த விதத்துல நாங்க அதைக் கூட வாங்க முடியாத அளவுக்கு தாழ்ந்து போய்ட்டோம் ன்னு தான் கேக்குறேன்.

Mbbs 5 1/2 வருடம்…PG க்கு ஆயத்தம் 2 வருஷம்…PG 2 வருஷம்…இதெல்லாம் செஞ்சு ஏதோ ஒரு மூலையில் வேலைக்கு அமர்த்தப்படும் மருத்துவரின் சம்பளம் 56100 மட்டுமே.

ஆனா,எங்கள் படிப்பு தகுதிக்கு இணையான சப் கலெக்டர்,கமிஷனர் இவர்களின் ஆரம்ப சம்பளம் 85000 தாண்டி….இதில் அவங்களுக்கு சொந்த வீடு,சொந்த கார்,சகல வசதிகள் உண்டு.

நாங்க அதையா கேக்குறோம்..?? அவ்ளோ நோயாளிகளை பாத்துட்டு வீட்டுக்கு மன நிறைவா போகணும்…நம்ம செஞ்ச பணிக்கு தகுந்த ஊதியம் இந்த அரசாங்கம் குடுத்திருக்கு ன்னு ஒரு மன நிறைவு வேணும்…அதுக்கு தான் இந்த போராட்டம்.

கோரிக்கை 3:

இந்த டாக்டருங்க எல்லாரும் உங்களுக்காகவே போராடுறீங்களே ?? என்னைக்காச்சு மக்கள் எங்களுக்காக போராடுறீங்களா?

வெல்கம் தலைவா….கோரிக்கை 3…இதோ …எங்களை கண்டபடி Tv க்கு முன்னாடி உட்கார்ந்து கொண்டு திட்டிக்கொண்டிருக்கும் என் மக்களுக்காக.

நோயாளிகளின் வருகையை பொறுத்து மருத்துவர்களையும், செவிலியர்களையும் நியமிக்க வேண்டும் என்பது தான் கோரிக்கை நம்பர் 3.

ஒரு மாவட்ட மருத்துவமனை போல் இன்னொரு மாவட்ட தலைமை மருத்துவமனை இருக்காது….சென்னை மாநகர மக்கள்தொகைக்கும்,ஒரு சிறிய மாவட்ட மருத்துவமனைக்கும் ஒரே அளவில் மருத்துவர்களை நியமிக்கும் அபத்ததிற்கு எதிரான போராட்டம் இது…மக்களின் போராட்டம்.

எங்கள் எல்லாருக்கும் இருக்கும் ஆசை.

எல்லா நோயாளிகளிடமும் 10 நிமிடம் பேச வேண்டும்.

நோய் பற்றி,அவன் குடும்பம் பற்றி,அவன் விருப்பங்கள் பற்றி.

நோயுடன் சேர்த்து நல்மனதையும் நல்குபவனே மருத்துவன்…

ஆனால் ஒரே ஒரு மருத்துவன் தினமும் 400 மக்களை சந்திக்க வேண்டும் என்னும் நிலை ஏற்படும் பொழுது,இவை நடக்குமா என்ன ??

மருத்துவருக்கும்-மக்களுக்குமான நல்ல உறவை மேம்படுத்த வேண்டும் என்பதும் இந்த போராட்டத்தின் கோரிக்கை.

இதெல்லாம் நியாயம் தானே ??

இதெல்லாம் கேட்டா பணி நீக்கமாம் !!
நாங்க எடுத்த உடன் போராட்டம் செய்யல…இதெல்லாம் எங்கள் குறை ன்னு சொன்னதும்,அரசு 6 வார காலம் அவகாசம் கேட்டு,அதன் பின்பும் ஒன்றும் செய்யவில்லை என்ற ஆற்றாமையின் வெளிப்பாடு தான் இந்த போராட்டம்…இந்த பிரச்சனை போராட்டமாக மாற எடுத்துக்கொண்ட காலக்கட்டம் 2 வருடங்கள்.

தனியார் லாம் மோசம் ன்னு சொல்லுற நீங்க,நியாயமா உங்களுக்கும் சேர்த்து போராடும் அரசு மருத்துவனை சாடுவது ஏன் ?

ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்.

கத்தி பிடிக்கும் கைகளுக்கு நிதானம் மிக முக்கியம்….அவன் கத்தி அறுவை சிகிச்சையின் அற்புதம் செய்ய சீரிய மன நிலை அவசியம்…அந்த மன நிலையை அரசாங்கம் நல்குவதும் கூட ஒரு வித மக்கள் குறை தீர்வு முறையே.

எங்களுக்கு போராட்டம் வேண்டாம்…டெங்கு நோயாளி வருவான்…அவனை சரி செய்யத்தான் போராட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவரின் மனமும் ஏங்கும்.

குறைகளை நிவர்த்தி செய்யவும்…இல்லையேல் அரசு மருத்துவர்கள் என்பவர்கள் டைனோசர் போல அழிந்து விடும் உயிரினமாக மாற வாய்ப்புகள் உண்டு…அரசு மருத்துவமனைகள் என்பவை கரையான் படிந்த அருங்காட்சியமாக மாறிப்போகும்.

மக்கள் முக்கியம் அரசே !!

ரொம்ப சிம்பிளா சொல்லப்போனா,எங்க வேலையை ‘நிம்மதியா’ செய்ய விடுங்க என்பதே இந்த போராட்டம்

மக்களுக்காக போராடும் எங்களை சுயநலவாதிகள் போன்று மீடியா சித்தரித்தாலும்,இதை உங்களிடம் கொண்டு சேர்த்து விட்டேன்…இந்த போராட்டம் சுயநலமா பொதுநலமா என்பது உங்களுக்கு விளங்கி இருக்கும் என்றே நம்புகிறேன்.

இப்படிக்கு,

~அரசு பள்ளியில் படித்த அரசாங்க மருத்துவனாக மட்டுமே பணி நிறைவு செய்வேன் என்று சபதம் எடுத்த உங்களுள் ஒருவனான நான்.

நன்றி.

Dr.அரவிந்த ராஜ்.