Newsu Tamil
அரசியல் இந்திய செய்திகள் பின்னணி

மோடி தயங்கியதை செய்த ஜெகன்மோகன் ரெட்டி… இனி என்ன நடக்கும் ஆந்திராவில்?

கடந்த 2007ம் ஆண்டு ஆந்திர முதல்வராக இருந்த மறைந்த ராஜசேகர் ரெட்டி, ஊடகங்களில் அரசுக்கு எதிராக பொய் செய்திகள் பரவுவதை தடுக்க சட்டம் கொண்டு வந்தார். கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்ட நிலையில் தற்போது அவரது மகனான ஜெகன் மோகன், சில திருத்தங்களுடன் அந்த சட்டத்தை அமல்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அம்மாநில அரசு உத்தரவில், சில ஊடகங்கள் தவறான, ஆதாரமற்ற, அவதூறான செய்திகளை பரப்பி அரசின் பெயரை கெடுக்க முயற்சிப்பதாகவும், அவ்வாறு செய்தால் சம்பந்தப்பட்ட ஊடகங்களின் பதிப்பாளர், ஆசிரியர் ஆகியோருக்கு எதிராக, செய்திக்கு தொடர்பான அரசு துறையின் செயலாளர்கூட சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க முடியும்.
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் ஆந்திர மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. அதன்கீழ் டிவி 5, ஏ.பி.என் ஆந்திர ஜோதி ஆகிய 2 தொலைக்காட்சி செய்தி சேனல்களுக்கு அதிகாரப்பூர்வமற்ற தடை விதிக்கப்பட்டது.

ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியமைத்ததில் இருந்து அவரது உத்தரவுகள் ஒவ்வொன்றையும் தமிழக மக்கள் பலவாறு புகழ்ந்து வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவற்றில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், அவரது அரசியல் ஸ்டண்டுகளை கடந்து அவர் எடுக்கும் கொள்கை ரீதியிலான முடிவுகள் யாவும் எளிய மக்களுக்கு எதிரான வகையிலேயே உள்ளன. குறிப்பாக கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த முத்தலாக், NIA, UAPA, மோட்டார் வாகன திருத்தச்சட்டம், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் போன்ற எந்த மசோதாவுக்கு ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கக் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கொள்கை ரீதியாகவும் அந்த கட்சி எந்த முடிவும் எடுக்கவில்லை.

அந்த வகையில் தற்போது ஜனநாயகத்தின் 4-வது தூணாக கருதப்படும் ஊடகங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் ஜெகன்மோகன் ரெட்டி இத்தகைய சட்டத்தை கொண்டுவந்துள்ளார். காலம்காலமாக அவதூறுகளை வெளியிடும் ஊடகங்கள் மீது DEFAMATION எனப்படும் அவதூறு வழக்குகளும், மானநஷ்டம் போன்ற வழக்குகளும் பதியப்படுகின்றன. அவர்களுக்கு என்று தனிச்சலுகை எதுவும் இல்லை. இத்தகைய சூழலில் ஜெகன் கொண்டு வரும் இச்சட்டத்தால் அரசுக்கு எதிராக எந்தவொரு செய்தியையும் வெளியிட ஊடகங்கள் தயங்கும் நிலை உருவாகும். எந்த நல்ல ஆட்சியாளரும் அரசுக்கு எதிரான கருத்துக்களை கேட்டு திருத்திக்கொள்ள வேண்டும். அதை விடுத்து ஒடுக்க நினைப்பது சர்வாதிகார மனபான்மையாகும்.