Newsu Tamil
FOOD இந்திய செய்திகள்

சமையல் ஹீரோ GRANDPA KITCHEN யூடியூப் சேனலின் சமையல் தாத்தா மரணமடைந்தார்

அன்பு, அரவணைப்பு, பகிர்தல் என்ற தாரக மந்திரத்தோடு தனது சமையல் கலையை கிராண்ட் பா கிட்சன் என்கிற புகழ்பெற்ற You Tube சானலில் மூலம் வெளிப்படுத்தி வந்த நாரயண ரெட்டி அகா தாத்தா காலமானார்.

கடந்த அக்.27-ம் தேதி நாரயண ரெட்டி அவர்கள் இயற்கை எய்தியதாக கிராண்ட்பா கிட்சன் YOUTUBE சேனல் புகழஞ்சலி வீடியோவை பதிவேற்றி உள்ளது. நாரயணரெட்டி தாத்தாவின் திடீர் மறைவினால் கிராண்ட்பா கிட்சன் சேனல் குழுவினர் மட்டுமல்லாமல் பார்வையாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் ரசிகர்கள் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால், ஒரு சமையல் கலை வல்லுநருக்கு எண்ணிலடங்க லட்சக் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கிராண்ட்பா கிட்சன் சேனலில் இயற்கை சார்ந்த வயல் வெளியில் சமைத்துக் கொண்டிருந்த நாரயண ரெட்டி தாத்தா நாவோடு சேர்த்து நம் கண்களுக்கும் விருந்தளித்தார் என்றால் மிகையாகாது.

தள்ளாத வயதிலும் கூட தனது சமையல் கலைக்கு உலகின் எந்த உணவும் விதிவிலக்கல்ல என்று சவால் விடும் வகையில், செட்டிநாட்டு மீன் குழம்பு முதல் அமெரிக்காவின் கே.எஃப்.சி. சிக்கன் வரை சமைத்து அசத்தியவர் நாரயண ரெட்டி.

ஒவ்வொரு முறையும் மிகப்பெரிய அளவில் சமையல் செய்து அதை தனது கிராமத்திற்கு அருகிலுள்ள முதியோர் இல்லங்களுக்கும், அநாதை இல்லங்களுக்கும் வழங்கி ஆனந்தமடைந்த நாரயண ரெட்டி தாத்தாவுக்கு 2 ஆண்டுகளில் 60 லட்சம் சந்தாதாரர்கள் ரசிகர்களானார்கள் என்பதில் வியப்பதற்கு எதுவுமில்லை.

2 வருடங்களாக விதவிதமான உணவுகள் மூலம் விருந்துபடைத்து வந்த நாரயண ரெட்டி தாத்தாவுக்கு பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்களது இரங்லையும், பிரார்த்தனைகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.