Newsu Tamil
இந்திய செய்திகள் உலக செய்திகள்

மோடி அரசை வெளுத்து வாங்கிய இங்கிலாந்து எம்.பி..! : அம்பலமானது பாஜக-வின் காஷ்மீர் நாடகம்..!

கடந்த திங்கள்கிழமை ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் காஷ்மீரின் நிலைமையைப் பார்வையிடுவதற்காக இந்தியா வந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால், இவர்களின் வருகைக்குப் பின்னால் பொதுமக்களின் பார்வைக்குத் தெரியாமல் மறைக்கப்பட்ட செய்தி ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐரோப்பிய யூனியனில் அங்கமாக உள்ள இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலை ஜனநாயகக் கட்சியின் பிரநிதியுமான கிரிஸ் டேவிஸ்ஸின் காஷ்மீர் வருகைக்கான அனுமதி நிராகரிக்கப்பட்டது தான் பரபரப்புக்குக் காரணம்.

இது குறித்து கிரிஸ் டேவிஸ் கூறும்போது கடந்த அக்டோபர் 8-ம் தேதி வெஸ்ட்(WESTT) அமைப்பிடம் இருந்து காஷ்மீரைப் பார்வையிடுவதற்காக வந்த அழைப்பை தான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகவும், சில நிபந்தனைகளுடன் காஷ்மீரைப் பார்வையிட விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்குள் பாதுகாப்பு அதிகாரிகளோடு அல்லாமல் பத்தரிக்கையாளர்களுடன் செல்ல விரும்புவதாகவும், உண்மை நிலவரத்தை அறிய அங்குள்ள பொது மக்களுடன் தன்னை சகஜமாக பேச அனுமதிக்க வேண்டும் என்றும் நிபந்தனை அவர் வித்தித்துள்ளார்.

இந்த சாதரண நிபந்தனைகளைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் கிரிஸ் டேவிஸின் காஷ்மீர் பயணத்துக்கான அனுமதி மறுக்கப்படுவதாக அக்.10-ம் தேதி காலையில் அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது குறித்து பேசிய கிரிஸ் டேவிஸ் “மறைக்கும் அளவுக்கு காஷ்மீருக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்திய அரசு அரசியல்வாதிகளையும், பத்திரிக்கையாளர்களையும் காஷ்மீரைச் சேர்ந்த உள்ளூர் மக்களுடன் கலந்துரையாட அனுமதி மறுப்பது ஏன்? என்றும் கேட்டுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஏராளமான காஷ்மீரிகள் வசிப்பதாகவும் அவர்கள் அனைவரும் காஷ்மீரில் வசிக்கும் தங்களுடைய உறவினர்களுடன் பேசுவதற்கு ஏங்குவதாகவும் அவர் கூறி உள்ளார். இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் காஷ்மீரிகளின் பிரதிநிதியான தனக்கு இந்தியா அனுமதி மறுப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

கிரிஸ் டேவிஸ் வருகைக்கான அனுமதி மறுப்பும் அவரது நியாயமான நிபந்தனகள் நிராகரிக்கப்பட்டதும் ஐரோப்பிய கூட்டமைப்பின் எம்.பி.க்களின் காஷ்மீர் வருகை ஒரு நாடகம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முஹம்மது குரேஷி விடுத்த சவாலுக்கு பதில் கூறவே இந்தியா இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருப்பதும் பட்டவர்த்தனமாகிவிட்டதாக கருதப்படுகிறது.

கடந்த மாதம் ஐ.நா. சபையில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சர்வதேச குழுவை, பத்திரிக்கையாளர்களை அனுமதிக்கத் தயார் என்றும் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சர்வதேச குழுக்களை அனுமதிக்க இந்தியா தயாரா” என்றும் கேள்வி எழுப்பினார்.

அப்போது “இது உள்நாட்டு விவகாரம், இதித் அயல்நாடுகள் தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை என்றும், உலக நாடுகள் இந்தியாவின் இறையான்மையை மதிக்க வேண்டும் என்றும் ” பதிலளித்தது இந்தியா தரப்பு.

ஆனால், தற்போது ஐரோப்பிய எம்.பி.க்களின் வெளிநாட்டுக்குழு வருகையால் கடந்த மாதம் வரை பா.ஜ.க. அரசால் உள்நாட்டு விவகாரமாக கருதப்பட்டு வந்த காஷ்மீர் விவகாரம் ஐரோப்பிய எம்.பி.க்கள் தலையிடும் அளவுக்கு சர்வதேச பிரச்சனையாக மாறியது எப்போது என்ற கேள்வி அனைவருக்கும் எழுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர்களையே காஷ்மீருக்குள் அனுமதிக்காத பாதிய ஜனதா கட்சியின் இந்த திடீர் நடவடிக்கை ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் காஷ்மீர் குறித்து சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் எழுப்பிவரும் தொடர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க பா.ஜ.க. அரசு நடத்திய நாடகமோ என எதிர் கட்சிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.