Newsu Tamil
அரசியல் இந்திய செய்திகள் மறைக்கப்பட்டவை

பிரதமர் மோடிக்கும் பெண் புரோக்கர் மாடி சர்மாவுக்கும் என்ன தொடர்பு? வெளியான அதிர்ச்சி தகவல்

காஷ்மீர் பிரச்னையில் பாஜக எடுத்த நிலைப்பாடுதான் சரி என தொடர்ந்து நிறுவ முயல்கிறார் இந்திய தலைமை அமைச்சர் மோடி. அதற்காக என்ன என்ன உத்திகள் இருக்கிறதோ அத்தனையையும் கையாள ஆரம்பித்து விட்டார்.

உள்நாட்டில் யாரும் பாஜகவை நம்பவில்லை என்பதை புரிந்து கொண்ட மோடி இப்போது வெளிநாட்டிலிருந்து ஆள் பிடித்து நம்பவைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதற்கான வேலைகளை ‘புரோக்கர்’ மாடி சர்மா செய்து வருகிறார். (இவருடைய ‘டிவிட்டர்’பக்கத்தில் தன்னை சர்வதேச வணிக புரோக்கர் என்றே குறிப்பிட்டுள்ளார்)

அது சரி, இந்த புரோக்கருக்கும் நம் மோடிக்கும் என்ன தொடர்பு?

‘WESTT-வெஸ்ட்’என்னும் என்ஜிஓவை நடத்தி வருபவர் தான் இந்த மாடி சர்மா. இவர் கடந்த அக்டோபர்7, 2019 அன்று ஐரோப்பிய எம்பிக்களுக்கு கடிதம் ஓன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் “பிரதமர் மோடி உங்களை சந்திக்க விரும்புவதாகவும். இந்திய பயணம் விஐபி தரத்தில் இருக்கும்” என்று சொல்லிவிட்டு 29 ஆம்தேதி காஷ்மீருக்கு சென்று சுற்றிய பிறகு
30 ஆம் தேதி பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ‘ஏற்பாட்டின்’அடிப்படையில் தான் பிரதமர் மோடியை கடந்த 28.10.2019 அன்று ஐரோப்பிய யூனியனை சார்ந்த 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து ஆலோசனை பெற்றனர். சர்மா சொன்னது போல ராஜ வரவேற்பு. மோடி சந்திப்புக்கு பின் காஷ்மீர் பயணித்தனர். காஷ்மீர் பிரச்சனை இந்தியப் பிரச்சனை தான். இதில் மூன்றாம் நாடுகள் தலையிடக்கூடாது என்று தொடர்ந்து பாஜக சொல்லி வந்தது.

இந்த சூழலில் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளை காஷ்மீரத்துக்கு அனுப்புவதன் பின்னணி என்ன? இவர்கள் யார்? இவர்களின் பின்னணி என்ன?
பிரான்ஸ், போலந்து,இங்கிலாந்து, இத்தாலி,ஜெர்மனி,செக் குடியரசு ,பெல்ஜியம், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளிலிருந்து 27 உறுப்பினர்கள் மோடியை சந்தித்தனர். இவர்களில் 22 பேர் மோடியின் கொள்கையை ஏற்கும் வலது சாரி சிந்தனையாளர்களாவர்.

கடந்த செப்டம்பர் 17 அன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைப்பெற்ற விவாதமொன்றில் பங்கேற்று பேசிய போலந்து எம்.பி.யான சார் நெக்கி மற்றும் இத்தாலியின் புல்வியோ இருவரும் காஷ்மீர் பிரச்சனையில் பாஜக மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆதரித்து பேசியுள்ளார்கள். மற்ற உறுப்பினர்கள் இசுலாமிய வெறுப்பையும் அகதிகள் மீதான வெறுப்பையும் அரசியலாக்கி வருபவர்கள்.

இந்த குழுவில் இங்கிலாந்தின் ‘லிபரல் டெமாக்ரசி கட்சி எம்பிக்களான கிறிஸ் டேவிஸ்,
ஜரினா ஜான் ஆகியோர் இடம்பெற அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் காஷ்மீருக்கு சர்வதேச ஊடகவியளாருடன் சுதந்திரமாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்று “வெஸ்ட்” அமைப்பின் ஒருங்கினைப்பாளர் மாடி சர்மாவிடம் கோரினர். அதனால் இவர்களின் வருகை மறுக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக ஐ.நாவின் மனித உரிமை கவுன்சிலின் சிறப்பு அதிகாரிகளும் தில்லி வெளிநாட்டு தூதுவர்களும் காஷ்மீருக்குள் செல்ல அனுமதி கேட்டபோது நிலமை சரியில்லை என்று தடுக்கப்பட்டார்கள். ஊடகங்கள் இன்னும் முயற்சித்து வருகின்றனர். ஆனாலும் காஷ்மீருக்குள் நுழைந்த பாடில்லை. இத்தகைய சூழலில், சர்வதேச வணிக புரோக்கரான மாடி சர்மாவின் ஒருங்கிணைப்பில், காஷ்மீர் பயணத்துக்கான அவசியம் வந்ததை மோடி விளக்குவாரா?

இந்தியாவின் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவராக செயல்படும் ராகுல்காந்தி தலைமையில் நாடளுமன்ற உறுப்பினர்கள் காஷ்மீருக்குள் நுழைய முயன்றபோது தடுத்து கைது செய்யப்பட்டனர். அதுவும் காஷ்மீர் மாநில ஆளுநர் அழைப்பின் பேரில் தான் பயணப்பட்டனர். அப்படி போனவர்களை திருப்பி அனுப்பியது பாஜக அரசு.

ஆனால் இந்த ஐரோப்பிய குழுவை மட்டும் காஷ்மீருக்குள் அனுப்பியதின் அவசியம் என்ன? ஒரு என்.ஜி.ஓ. அதுவும் வணிகரீதியான புரோக்கரை வைத்துக்கொண்டு காஷ்மீருக்குள் என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறார் மோடி? இந்த பயணம் இந்திய மக்களை ஏமாற்றவா? உலகை ஏமாற்றவா?

– வன்னி அரசு