hiddenPoliticsTamilnadu

காஷ்மீர் போல் உங்களையும் ஒதுக்கிவிடுவோம் – முஸ்லிம்களை மிரட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருவேலங்குளம் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில், கேசவநேரி என்ற கிராமத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள், தங்கள் ஊரில் ரேஷன் கடை அமைக்கக்கோரி மனு எழுதுக்கொண்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அணுகியுள்ளனர்.

அப்போது, அவர்களை கண்ட அமைச்சர், “முஸ்லிம்கள் தான் எங்களுக்கு ஓட்டுப்போட மாட்டீங்களே! அப்றம் ஏன் நாங்கள் உங்களுக்கு உதவனும். உங்க மனுவை போய் ஞானதிரவியம் (தி.மு.க. எம்.பி.) கிட்ட கொடுங்க. நீங்களும் கிறிஸ்தவர்களும் எங்களுக்கு ஓட்டுப்பாட மாட்டீங்க. பாஜகவோடு அதிமுக கூட்டணி வெச்சு இருக்கதால மோடி தமிழ்நாட்ல ஆட்சி செய்யுறதா நினைக்கிறீங்க. ஆனா எடப்பாடிதான் ஆட்சி பன்றாரு. நீங்க இப்படியே எங்கள புறக்கணிச்சா, காஷ்மீருல நடந்ததை போல் தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களையும் ஒதுக்கி வைத்துவிடுவோம். 5% மட்டும் இருக்கும் உங்களால் என்ன செய்திட முடியும்” என்று மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த முஸ்லிம்கள் “ஊருக்கு ரேஷன் கடை கேட்டு சென்ற எங்களை அமைச்சர் இந்த அளவுக்கு மிரட்டுவார் என எதிர்பார்க்கவில்லை. அவரது கண் முன்னே முனுவை கிழித்துவிட்டு வேதனையுடன் சென்றுவிட்டோம்” என மின்னம்பலம் இணைய இதழுக்கு கேசவனேரி ஜமாத் தலைவர் பைசல் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளும் வட மாநிலங்களில் மட்டுமே நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள், பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக ஆளும் தமிழகத்திலும் தலைதூக்கி இருக்கிறது. மோடியை டாடி என்று அழைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதுபோல் பேசியதில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்றாலும், நாகரீக அரசியல் போக்குடைய தமிழகத்தில், வட மாநில பாணியிலான மதவாத அரசியலை அதிமுக செய்கிறதோ என்ற அச்சம் இதன் மூலம் எழத்தொடங்கி உள்ளது.

Source: https://minnambalam.com/k/2019/10/17/100/minister-rajendrabalaji-denied-to-receive-petition-from-muslims