hiddensocietyTamilnadu

அந்த சாதிக்காரன் என்னையே எதிர்த்து பேசுறியா? தலித் மாணவன் முதுகை வெட்டிய 9-ம் வகுப்பு மாணவன்!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேடு அருகே மறவப்பட்டி காலனியை சேர்ந்த சரவணகுமார் என்ற மாணவர் பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 11-ம் தேதி அதே வகுப்பில் படிக்கும், மோகன்ராஜ் என்ற மாணவனின் பள்ளி பையை மற்றொரு மாணவன் மறைத்து வைத்துள்ளார். தனது பள்ளி பையை கொடுத்துவிடுமாறு மோகன்ராஜ் தனது நண்பன் சரவணகுமாருடன் சேர்ந்துகொண்டு அந்த மாணவனிடம் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், சரவணகுமாரின் சாதியை சுட்டிக்காட்டி கொச்சை வார்த்தைகளால் திட்டி நீயெல்லாம் என்னை எதிர்த்து பேசுவியா? என்று கூறி பிளேடால் சரவணகுமாரின் முதுகில் கிளித்துள்ளான். ப்ளேடால் வெட்டப்பட்ட சரவணகுமாரின் முதுகின் நடுப்பகுதியில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை உலுக்கியுள்ளது.

பாடப்புத்தகங்களின் பின்னால் உள்ள “தீண்டாமை ஒரு பாவச் செயல்” என்ற வரியின் விளக்கத்தையும், அதன் வீரியத்தையும் ஆசிரியர்கள் முதலில் மாணவர்களுக்கு பாடம் எடுத்தாலே இதுபோன்ற குற்றங்களை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். ஆனால், இங்கு பள்ளி மாணவர்கள் சாதிக்கொரு நிறத்தில் கயிறு கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருவதும், அங்கன்வாடியில் தலித் பெண்கள் பணியாற்றக்கூடாது என பெற்றோர்களே எதிர்ப்பு தெரிவிப்பதும், ஆசிரியர்களே மாணவர்கள் மத்தியில் சாதிப்பிரிவினையை தூண்டி விடுவதும் சகஜமாக நடந்தேறி வருகிறது. இதுபோன்றவற்றை தடுக்மாதவரை தீண்டாமை கொல்ல முடியாது விஷ ஜந்துவாக என்றும் வளர்ந்துகொண்டிருக்கும்.