Newsu Tamil
Media Critics தலையங்கம் பின்னணி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அதிர வைக்கும் உண்மை பின்னணி

நாட்டில் நடக்கும் ஆயிரக்கணக்கான பிரச்சனைகள், தத்தமது வீடுகளில் உள்ள பல பிரச்சனைகளை விட விஜய் டிவியில் காட்டப்படும் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கே இன்றைய தமிழ் மக்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளே இன்றைய தமிழ் யூடியூப் பக்கங்களில் நிரம்பி வழிகின்றன. மக்கள் பிக் பாஸை விட நினைத்தாலும், பிக் பாஸ் மக்களை விடுவதாக இல்லை. அந்த அளவுக்கு திரும்பும் திசையெல்லாம் பிக் பாஸ் பேச்சுக்கள், விளம்பரங்கள் தென்படுகின்றன.

இந்த பிக் பாஸின் பின்னணி என்ன? பிக் பாஸ் போட்டியாளர்களை வழிநடத்துவதாக கூறப்படும் நடிகர் கமல்ஹாசனை இயக்குவது யார்? பிக்பாஸை திரையிடும் விஜய் டிவிக்கு பின்னால் இருக்கும் நிஜ பிக்பாஸ் யார்? என்ற கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் காண்போம்.

கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துவது விஜய் டிவி என்றே பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. ஒவ்வொரு நாள் பிக் பாஸ் எபிசோடின் முடிவிலும் ENDEMOL SHINE INDIA என்ற திரை காட்டப்படும். அந்த நிறுவனமே உண்மையான பிக்பாஸ். விஜய் டிவி என்பது பிக்பாஸை மக்கள் முன் காட்டுவதற்கான ஒரு கருவி மட்டுமே. பிக் பாஸ் போட்டியின் விதிமுறைகள் அனைத்தையும் வகுத்து இப்படி ஒரு நிகழ்ச்சியை உலகுக்கு அறிமுகம் செய்ததே ENDEMOL நிறுவனம் தான்.

என்ன, உலகுக்கு அறிமுகம் செய்தது என்கிறீர்கள், அப்படியெனில் இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் மட்டும் நடக்கவில்லையா? என்ற சந்தேகமும் உங்களுக்கு எழலாம்.

கடந்த 1994-ம் ஆண்டு நெதர்லாந்தை சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களான Joop van den Ende மற்றும் John de Mol ஆகியோர் இணைந்து தங்கள் இருவர் பெயரின் இரண்டாம் பகுதியை சேர்த்து ENDEMOL என்ற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். இவர்கள் நெதர்லாந்தில் அறிமுகம் செய்த “பிக் பிரதர்” நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பால் ENDEMOL நிறுவனம் கிடுகிடுவென வளர்ந்தது. பிக் பிரதர் நிகழ்ச்சி அடுத்தடுத்து அமெரிக்கா, கனடா, பிரேசில், அப்பிரிக்க நாடுகள், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அர்ஜெண்டினா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் நடத்தப்பட்டு மக்களின் வரவேற்பை பெற்றது. தொடக்கத்தில் இந்த பிக் பிரதர் நிகழ்ச்சியில் பிரபலமற்ற சாமானிய மக்கள் கலந்துகொண்டார்கள். ஆனால், இந்தியாவின் நிலைக்கு ஏற்ப சினிமா பிரபலங்களை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சி முதன் முதலில் இந்தியில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் மராத்தி, பெங்காலி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என 7 மொழிகளில் வெவ்வேறு சேனல்களில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்தந்த மாநில மக்களின் மனநிலைக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.

எண்டெமால் நிறுவனம் பிக் பாஸ் நிகழ்ச்சி மட்டுமின்றி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி போட்டிகளை 75 நாடுகளில் நடத்தி வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான “டீலா நோ டீலா” என்ற நிகழ்ச்சியும் இந்த நிறுவனத்துடையது தான். பிக் பிரதர், பிக் பாஸ் நிகழ்ச்சிகளுக்கு அடுத்தபடியாக எண்டெமால் நிறுவனத்தின் அதிக பிரபலமான நிகழ்ச்சி டீலா நோ டீலா தான்.

இப்போது இந்த எண்டெமால் நிறுவனத்தை அதே நெதர்லாந்து நிறுவனம் தான் நடத்துவதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், 2000-ம் ஆண்டிலேயே இந்த நிறுவனத்தை அதன் நிறுவனர்கள் ஸ்பெயினை சேர்ந்த டெலிபோனிகா நிறுவனத்திடம் 550 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டனர். 2007ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் 75% பங்குகளை இத்தாலியின் முன்னாள் பிரதமர் Silvio Berlusconi குடும்பத்துக்கு சொந்தமான கன்சார்டியம் நிறுவனம் வாங்கியது. சில மாதங்கள் கழித்து 99.54% பங்குகளையும் இந்நிறுவனம் வாங்கி எண்டெமாலை தனதாக்கியது. இதனை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களுக்கு கைமாறிய எண்டெமால் நிறுவன பங்குகளில் 50 சதவீதத்தை அமெரிக்க நிறுவனமான APOLLO GLOBAL MANAGEMENT மற்றும் அமெரிக்க தொலைக்காட்சியான 21’st century FOX நிறுவனத்தின் கிளை நிறுவனமான SHINE உம் வாங்கின.

இதன் காரணமாக ENDEMOL SHINE GROUP என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் 2019 ஆண்டில் கார்டூன் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னே 21’st century FOX நிறுவனத்தை வாங்கியதால் ENDEMOL SHINE பங்குகள் டிஸ்னே வசம் சென்றுள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சி கலாச்சரத்தை சீரழிக்கிறது, முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புகிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவற்றை விட இந்நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மிக முக்கியமான எதிர்பார்ப்பது மக்களின் மனநிலையை கணிப்பது தான். பிக் பாஸ், பிக் பிரதர் நிகழ்ச்சிகள் மூலம், மனிதர்கள் பல நாடுகள், பல மொழிகள், பல இன மக்களின் பொதுக்கருத்து என்னவென்பதை இந்த பன்னாட்டு நிறுவனங்கள் கண்டறிகின்றன.

முதல் சீசனுக்கு முன் ஆண்களும் பெண்கள் ஒரே வீடில் இருப்பார்கள் என்பதையே பலர் ஏற்கவில்லை. அதில் ஆண்கள், பெண்களுக்கு சுவர் தடுப்புடன் தனித்தனி அறைகள் இருந்தன. அதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இரண்டாவது சீசனில் ஆண்கள் பெண்கள் அரைக்கு இடையில் கண்ணாடி தடுப்பு மட்டும் வைக்கப்பட்டது. அதையும் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். 3-வது சீசனில் இரு அரைகளுக்கும் குறுக்கே எந்த தடுப்பும் இல்லை. அதையும் மக்கள் பார்த்து தினசரி வாக்களித்து வருகிறார்கள். முதல் சீசனில் மக்களால் நேசிக்கப்பட்ட ஓவியாவை ஏமாற்றியவர் என மக்களால் வெறுக்கப்பட்ட ஆரவை தான் அதே மக்கள் வெற்றியாளராக மாற்றினார்கள். 2வது சீசனில் யாரிடம் சரியாக பேசுவதில்லை என குற்றம்சாட்டப்பட்ட ரித்விகாவை தான் மக்கள் இறுதியில் வெற்றிபெற செய்தனர். அந்த சீசனில் மக்களால் தொடக்கத்தில் இருந்து நேசிக்கப்பட்ட மும்தாஜை அதே மக்கள் வெளியேற்றினர்.

3-வது சீசனில் ஆண்கள் பெண்கள் நெருக்கமாக இருப்பதை முதலிலேயே கண்டித்த மதுமிதாவை அனைவரும் எதிர்த்தனர். ஆனால், இப்போது ஆண்கள் பெண்கள் நெருக்கமாக இருப்பதை போட்டியாளர்கள் மட்டுமின்றி கமல்ஹாசனும் கூட கண்டிக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முன்பே தொகுக்கப்பட்டது. அனைத்தும் பொய் என பலர் கூறுகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பாதங்களை அறிந்துகொண்டு எப்படி தூண்டிவிட்டால் அவர்கள் உனர்வுகள் வெளிபடும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப டாஸ்குகளை வழங்குகிறார்கள். அப்படியும் பிரச்சனை எழாவிட்டால் சனி, ஞாயிறு கிழமைகளில் கமல்ஹாசன் கேட்கும் கேள்விகளில் பிரச்சனை முளைத்து எழும். அந்த வாரம் பேசித்தீர்க்கப்படும் பிரச்சனைகளை கிளறி சம்பந்தப்பட்ட போட்டியாளர்களின் உணர்வுகளை தூண்டிவிடும் கமல்ஹாசனின் வேலை.

மக்கள் எந்தெந்த தருணத்தில் எப்படி சிந்திக்கிறார்கள்? மக்கள் எதன் அடிப்படையில் தேர்தல் நேரத்தில் வாக்குகளை அளிக்கிறார்கள்?
காலம் காலமாக மக்களால் வெறுக்கப்பட்டவர் வெகு சில நாட்களில் மக்களை எப்படி கவருகிறார்கள்? என்ற தகவலை இந்த பன்னாட்டு நிறுவனங்கள் சேகரிக்கின்றன. இது தேர்தல் அரசியலுக்கும், வர்த்தக லாபத்துக்கும் அதிகம் பயன்படுகிறது. ஏன், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அரசியல்வாதி கமல்ஹாசனுக்கு கூட பயன்படும். இதை பல முறை அவரே மேடையில் கூறியுள்ளார்.

பிக்பாஸ் முதல் சீசனுக்கும் பிக் பாஸ் 3-வது சீசனுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை ஆராய்ந்தால் இது நன்கு விளங்கும். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலதனம் பணமோ, பிரபலமோ அல்ல. மனித உணர்வுகளே அதன் மூலதனம்.
மக்களாகிய நாம் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள 15 பேரை மட்டும் போட்டியாளர்கள் என நினைக்கிறோம். ஆனால், அதை நடத்தும் எண்டமால் நிறுவனம் மக்களிடமே விளையாடி வருகிறது. பிக்பாஸ் என்ற தூண்டிலை போட்டு மனித உணர்வுகள் எனப்படும் திமிங்கலத்தையே பிடித்து வருகிறது என்பதே உண்மை.