India

வெள்ள அபாயம்… சந்திரபாபு வீட்டை காலி செய்ய நோட்டீஸ்

கிருஷ்ணா நதியில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக சந்திரபாபு நாயுடு தங்கியிருக்கக் கூடிய வீட்டிற்கு கிராம வருவாய் அலுவலர் காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு குண்டூர் மாவட்டம் உண்டவள்ளியில் கிருஷ்ணா நதிக் கரையை ஒட்டி கட்டப்பட்ட லிங்கமனேனி கெஸ்ட் ஹவுஸில் தங்கி வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் ஐதராபாத்தில் உள்ள வீட்டிற்கு சந்திரபாபு சென்றார்.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீசைலம், நாகார்ஜுன சாகர் அணைகள் நிரம்பி விஜயவாடாவில் உள்ள பிரகாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 8.21 லட்சம் கன அடி தண்ணீர் வந்ததை அப்படியே வெளியேற்றி வருகின்றனர். இதனால் சந்திரபாபு நாயுடு தங்கி இருக்கும் வீட்டில் சுற்றியுள்ள வாழை மற்றும் விவசாயப் பயிர்கள் நீரில் மூழ்கியது. மேலும் சந்திரபாபு நாயுடு தங்கியிருக்கும் வீட்டில் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில் நீர்மட்டம் சற்று அதிகரித்தாலும் சந்திரபாபு நாயுடு வீட்டில் தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஏற்கனவே கிருஷ்ணா நதிக் கரையை ஒட்டியுள்ள பொதுமக்களை புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில் இன்று உண்டவல்லி கிராமம் வருவாய் அலுவலர் சந்திரபாபு நாயுடு வீட்டிற்கும் அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கி நேரில் சென்று கிருஷ்ணா நதியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் வீட்டை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கினர். சந்திரபாபு நாயுடு வீட்டில் அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் நோட்டீஸ் வழங்கினர்.