fact checkPoliticsTamilnadu

திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்ததா காங்கிரஸ்… உண்மை என்ன?

மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. இந்த சூழலில் திமுகவுடன் பாஜக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக அண்மையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேசியது பரப்பரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கூட்டணியில் திமுக உள்ள நிலையில், காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி அமைக்க முயற்சித்து வரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதும் கூட்டணி கட்சியினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நேற்று முந்தினம் செய்தியாளர் சந்திப்பில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ஸ்டாலின் மறுப்பு தெரிவிக்காமல், ஆம் என்றும் சொல்லாமல் தேர்தல் முடிவுக்கு பிறகு சொல்கிறேன் என்று கூறியதும் சர்ச்சைக்குள்ளானது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டதாக ஒரு படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதை திமுக, காங்கிரஸ் அடிமட்ட தொண்டர்களும் நம்ப தொடங்கியுள்ளனர். ஆனால், இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி எந்த ஊடகத்துக்கும் அறிக்கை வெளியிடவில்லை. மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதுபோன்ற எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. காங்கிரஸின் பழைய அறிக்கையின் படத்தில் உள்ள கருத்துப்பகுதியை அழித்துவிட்டு இவ்வாறு எழுதியுள்ளனர். மேலும் இதயம் என்பதற்கு பதில் பிழையாக இதையம் என எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் இது பொய்யான அறிக்கை என்பது உறுதியாகியுள்ளது.

இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, கே. எஸ். அழகிரி பெயரில் போலியாக பரப்பப்பட்டதற்கு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.