PoliticssocietyTamilnadu

நல்லக்கண்ணுவை வீட்டிலிருந்து வெளியேற்றிய தமிழக அரசு

சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு அரசின் சார்பாக வாடகைக்கு வீடு வழங்கப்பட்டிருந்தது. இதேபோல நந்தனம் பகுதியில் முன்னாள் அமைச்சர் கக்கன் மற்றும் அவரின் குடும்பத்தினர் வாழ்ந்து கொள்வதற்காக அரசின் சார்பாக இலவச வீடு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த பகுதியில் இருக்கக்கூடிய வீடுகள் அனைத்தும் பழுதடைந்த காரணத்தினாலும் அந்த பகுதியில் வீட்டு வசதி வாரியம் சார்பாக வேறு ஒரு திட்டத்தை அமல்படுத்த உள்ள நிலையில், அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளையும் இடிப்பதற்கு தமிழக அரசின் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது இந்நிலையில், நேற்று நல்லகண்ணு தனது வீட்டை காலி செய்தார்.

அவரது வீடு மற்றும் அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் இடிக்கப்பட்டு வருகிறது. மேலும் கக்கன் குடும்பத்தினர் வாழ்ந்து வரும் வீட்டையும் காலி செய்ய தமிழக அரசு வற்புறுத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும் மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளை காலி செய்ய வைப்பது கண்டனத்துக்கு உரியது என்றும், இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் உடனடியாக இவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து வீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆர் வீடு வழங்கினார் என்றும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு விற்கு கருணாநிதி வீடு வழங்கினார் என்றும், இவ்வாறு முன்னாள் முதலமைச்சர் களால் வழங்கப்பட்ட வீடுகள் தற்போது மீண்டும் அரசால் எடுத்துக் கொள்ளப்படுவது உள்நோக்கம் கொண்ட செயல் எனவும் தெரிவித்தார்.

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கூறுகையில், “கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த தமிழகத்தின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு அவர்களை உடனடியாக காலி செய்யும்படி ஆணையிடப்பட்டு அவரும் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்திருக்கிறார்.94 வயதான முதிர்ந்த தலைவரை அவருடைய தியாகம் தொண்டு ஆகியவற்றை எண்ணிப் பார்க்காமல் அவரை வெளியேற்றி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.தமிழக முதலமைச்சர் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு அவருக்கு அரசு வீடு ஒன்றினை உடனடியாக வழங்க முன் வருமாறு வேண்டிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.