PoliticsTamilnadu

பாலியல் குற்றம் பற்றிய பிரேமலதாவின் சர்ச்சை கருத்து – தேமுதிகவிலிருந்து 200 பெண்கள் விலகல்

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தேமுதிக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், ஒரு இடத்தில் பிரச்சாரம் செய்த அவர், “பெண்களின், தாய்குலங்களின் வாழ்க்கையை காக்க கூடிய கூட்டணி இந்த அதிமுக கூட்டணி. நான் சொல்வது என்னவென்றால், பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை. இந்த கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்” என்றார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, கோவை சிறுமி பாலியல் படுகொலை என தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளால் கொதிப்படைந்துள்ள மக்கள் பிரேமலதாவின் இந்த பேச்சை கேட்டு கொதிப்படைந்துள்ளனர்.

பிரேமலதாவின் இந்த பேச்சு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரேமலதா பெண்களை இழிவாக பேசியதை கண்டிக்கும் விதமாக தேனி மாவட்ட தேமுதிக மகளிரணி துணை செயலாளர் பூங்கோதை தலைமையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தேமுதிகவிலிருந்து கூட்டாக வெளியேறி டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுக கட்சியில் இணைந்தனர். தேர்தல் நேரத்தில் இவர்கள் இப்படி முடிவெடுத்து இருப்பது தேமுதிக கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.