BackgroundPoliticsTamilnadu

எங்கள யாராலயும் தடுக்க முடியாது – 8 வழிச்சாலை குறித்து பொன்னார் பேச்சு

சென்னை – சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை அமைய, மக்கள் விரும்பினால், யார் தடுத்தாலும், அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

கிருஷ்ணன்கோவில் பகுதியில் வீதி வீதியாகச் சென்று வாக்குசேகரித்த போது பேசிய அவர், சிலரின் தூண்டுதலால் 8 வழிச்சாலை திட்டத்தை மக்கள் எதிர்ப்பதாக கூறினார். மேலும், கன்னியாகுமரியில் துறைமுகம் அமைந்தால் மீனவர்கள் உட்பட 20 லட்சம் மக்களின் வாழ்வு மேம்படும் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நியூசு விமர்சனம்:

பொன்.ராதாகிருஷ்ணனின் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ம.கவோ 8 வழிச்சாலைக்கு எதிராக உள்ளது. அண்மையில் 8 வழிச்சாலைக்கு எதிராக வந்த தீர்ப்புக்கு நாங்கள் தான் காரணம் என வட மாவட்டங்களில் பாமகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மறுபுறம் அதே கூட்டணியில் உள்ள அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ 8 வழிச்சாலைக்கு எதிரான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்கிறார். இவர்கள் கூட்டணி ஆட்சியமைத்தால் என்ன ஆகும் என்பது கேள்குறியாகவே உள்ளது.