BackgroundPoliticsTamilnadu

பாஜகவுக்கு ஆதரவாக தினகரன் தேர்தல் பிரச்சாரம்

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் மக்களிடையே தங்களுக்குள்ள செல்வாக்கை அதிகப்படுத்த பல வழிகளை கையாண்டு வருகின்றன என்பது யாம் அறிந்ததே. செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் ஒரு காலத்தில் பார்க்க முடிந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் இப்போது முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் ஆக்கிரமிக்ஷ்க்க தொடங்கிவிட்டன.

ஆளும் கட்சியாக இருந்தால் அரசின் சாதனைகளாக தாங்கள் செய்ததை மக்களிடையே விளம்பரம் மூலம் பிரபலப்படுத்துவார்கள். செய்யாத வேலைகளையும் திரித்துக் கூறி சமூக வலைதளங்களில் பகிரச் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் வீதிகளில் குறைந்து சமூக வலைதளங்களிலும், செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் அதிகரித்துவிட்டன. குறிப்பாக தேர்தல் நேரத்தில் ஊடகங்களை அதிகம் உற்று நோக்கும் மக்களுக்கு காசுக்காக வெளியிடப்படும் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் குழப்பத்தை விளைவிக்கின்றன.

குறிப்பாக கொள்கை சார்ந்த, கட்சி ஆதரவு ஊடகங்கள் கூட தங்கள் கொள்கைக்கு எதிரான, கட்சிக்கு எதிரான கட்சிகளின் பிரச்சார விளம்பரங்களை காசுக்காக வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தின் முன்னணி நாளிதழ்களில் தினகரன் கடந்த 2 நாட்களாக தனது முதல் பக்கத்தில் பாஜகவுக்கு வாக்களிக்கக்கோரி விளம்பரம் வெளியிட்டுள்ளது. மேலுள்ள தினகரன் பத்திரிகையின் முதல் பக்கத்தில் மோடி விளம்பரத்தை வெளியிட்டுவிட்டு முதல் செய்தியாக மோடி தேனி, ராமநாதபுரத்தில் பிரச்சாரம் செய்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதே நாளில் ராகுல் காந்தி தமிழகத்தில் பிரச்சாரம் செய்த செய்தி 6 வது பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நாளிதழை நடத்தும் சன் குழுமத்தை சேர்ந்த தயாநிதிமாறன் திமுக சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் நினைத்திருந்தால் திமுக அதரவு விளம்பரத்தை இலவசமாக வெளியிட்டு பிரச்சாரம் செய்திருக்கலாம். ஆனால், பணத்துக்காக பாஜக விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். மதசார்பற்ற கூட்டணி என்ற பெயரில் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் ஆதரவு நாளிதழில் மதவாத பாஜக கட்சியின் பிரச்சார விளம்பரத்தை வெளியிட்டிருப்பது திமுக தொண்டர்கள் மத்தியிலும் கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.