BackgroundPoliticsTamilnadu

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஊடக அறம் கடந்து விமர்சித்த தினமலர்

தினமலர் செய்தி:
கரூர் அருகே, க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் விஸ்வநாதபுரியில், காங்., வேட்பாளர் ஜோதிமணி, மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் செந்தில் பாலாஜியுடன் சென்று பிரசாரம் செய்தார். அப்போது, 10 ஆண்டுகளாக, எம்.பி.,யாக உள்ளவரின் பெயர் உங்களுக்கு தெரியுமா என, வேட்பாளர் ஜோதிமணி பொதுமக்களை பார்த்து கேட்டார். அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர், தம்பிதுரை என, பெயரை கூறினர். அதை எதிர்பாராத ஜோதிமணி, ‘நீங்கள் பரவாயில்லை. பல ஊர்களில், எம்.பி., யின் பெயர் கூட தெரியவில்லை’ எனக்கூறி சமாளித்தார்.பின்னர் அவர் பேசுகையில், ”க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் பகுதியில், குடிநீர் பிரச்னை உள்ளது. அதை தவிர்க்க, அமராவதி ஆற்றில் இருந்து உபரி நீரை தாதம்பாளையம் ஏரிக்கு கொண்டு வரணும்.

நியூசு விமர்சனம்:

ஜோதிமணி என்பவர் காங்கிரஸ் வேட்பாளர் என்பதை தாண்டி கட்சி சார்பின்றி ஒரு பெண்ணாக பல்வேறு களப்போராட்டங்களில் பங்கெடுத்தவர். தமிழகத்தின் உரிமைக்காக, மொழி உரிமைக்காக, சமத்துவத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கடந்த முறை சட்டசபை தேர்தலில் ஜோதிமணி வேட்பாளராக நிறுத்தப்படாததற்கு அவரது ஊர் மக்கள் கடந்து பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் கூட கண்டனம் தெரிவித்தனர். அந்த அளவுக்கு சமகாலத்தில் நாகரீக அரசியலை செய்து வருகிறார். அண்மையி உயர்சாதினருக்கான 10% இட ஒதுக்கீட்டுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தபோது சொந்த கட்சியையே எதிர்த்து பேசியவர் ஜோதிமணி. இந்த சூழலில் கரூர் மக்களவை தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஜோதிமணி தம்பிதுரைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். இப்படிப்பட்ட ஒருவரை விமர்சிக்க வேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்காக தினமலர் ஏதோ சொல்ல வேண்டும் என்று விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளது. தலைப்பை மட்டும் படித்து விட்டு செய்தியை பகிர்பவர்கள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில் அவர்களின் மனநிலை அறிந்த தினமலர் இதுபோன்ற செய்தியை வெளியிட்டுள்ளது. சரி அதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்திருப்பதாகவே வைத்துக்கொண்டாலும், அசடு வழிந்தது என்ற வார்த்தைகளை ஊடக அறம் கடந்து தினமலர் பயன்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்க இயலாது.