BackgroundEconomyIndia

விவசாயிகளின் கோரிக்கையை ஒற்றை கருத்தில் ஓரம் கட்டிய வெங்கய்யா நாயுடு

டெல்லியில் நடைபெற்ற பஞ்சாப் நேஷனல் வங்கியின் 125வது நிறுவன தின விழாவில் பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், இந்தியா துணை குடியரசு தலைவருமான வெங்கய்யா நாயுடு கலந்துகொண்டார்.

அப்போது பேசிய விவசாயிகளின் பிரச்னைகளுக்கு, விவசாயிகள் பெற்ற பயிர்கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் போன்ற திட்டங்களால் நீண்ட கால தீர்வை தர முடியாது என்றார். மாறாக உள்கட்டமைப்பு மேம்பாடு, சிறப்பான சந்தை வாய்ப்பு, உரிய நேரத்தில், அதேசமயம் குறைவான வட்டியில் கிடைக்கும் கடன் ஆகியவைதான் நீண்ட கால தீர்வுகளாக அமையும் என அவர் தெரிவித்தார். வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்து வருவது, பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்த அவர், வாராக்கடன் அதிகரிப்புக்கு, நாட்டின் ஏற்றுமதியில் ஏற்படும் மந்த நிலை உள்பட சில வெளிப்புற காரணிகள் உள்ளது என்றார். இந்த பிரச்னைக்கு தீர்வு காண வங்கித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம் என அறிவுறுத்திய வெங்கய்யா நாயுடு, வங்கிக் கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல், மோசடியில் ஈடுபடும் நபர்கள் நீதியின் முன் விரைந்து நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

நியூசு விமர்சனம்:

வெங்கய்யா நாயுடு கலந்துகொண்ட நடத்திய பஞ்சாப் நேஷனல் வங்கியில் தான் உலக புகழ்பெற்ற ₹12 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் மோடிக்கு நெருக்கமானவரான நீரவ் மோடி மோசடி செய்து லண்டனுக்கு தப்பிச்சென்றார். இதுவரை அவர் நாடு கடத்தப்படவில்லை. அவரது வாராக்கடன்களுக்காக எந்த சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படவில்லை. இதே போல் விஜய் மல்லையா தனது கடன்கள் முழுவதையும் ஒப்படைப்பதாக தெரிவித்த பின்னரும் அவற்றை மத்திய அரசு பெறவில்லை. அவரும் இதுவரை இந்தியாவிற்கு நாடு கடத்தப்படவில்லை. இன்னும் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான கோடி கடன்களை பெற்ற பெரும் முதலாளிகள் தவணை முடிந்தும் அதனை திரும்ப செலுத்தாமல் கவுரவமாக சுற்றிக்கொண்டிருக்கின்றனர். இன்று வரை அவர்கள் பெற்ற கடன்கள் பெறப்படவில்லை.
இதுகுறித்து முன்பு ஒரு பேட்டியின் போது தெரிவித்த அகில இந்திய வங்கிகள் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாலசம், “2013 ஆம் ஆண்டு வங்கிகளின் வராக்கடன் 1,64,461 கோடிகள் மட்டுமே.! ஆனால் தற்போது 10 லட்சம் கோடிகளுக்கு மேல் வராக்கடனாக வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன்களில் பெருமளவு கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதானி, அம்பாணி, ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம், போன்றோர்களுக்கு மட்டுமே வாங்கிய கடனில் 41 ஆயிரம் கோடிகளுக்கு மேல், மத்திய அரசு 80% தள்ளுபடியாக வழங்கி உள்ளது. இதனால் நாட்டு மக்களுடைய பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. மக்களை சுரண்டி கார்பரேட் நிறுவனங்கள் வளர்வதற்கு மட்டுமே மத்திய அரசு உதவி புரிகிறது.” என்றார்.

ஆக பெரு முதலாளிகளிடம் இருந்து வாராக்கடன்களை பெற்றாலே நாட்டின் பொருளாதாரம் ஓரளவு மேம்படும் என்ற சூழலில் விவசாயிகள் பெற்ற சில ஆயிரம், சில லட்சம் வங்கிக்கடன்களை தள்ளுபடி செய்வது நிரந்தர தீர்வற்றது என வெங்கய்யா நாயுடு சொல்வது நியாயமானது தானா?