crimehiddenIndiaPolitics

பாஜகவின் தொப்பி அணியாததால் மாணவிக்கு பாலியல் தொல்லை… புகாரளித்ததால் கல்லூரியிலிருந்து இடைநீக்கம்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து ஆக்ராவுக்கு கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி, 55 மாணவர்கள் 4 ஆசிரியர்கள் என மொத்தம் 59 பேர் கல்வி சுற்றுலா சென்றிருக்கின்றனர். இதில் பேருந்தில் பயணித்த ஒரேயொரு முஸ்லிம் மாணவியை சக மாணவர்கள் பா.ஜ.க படம் பொறிக்கப்பட்ட தொப்பியை அணியுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

மாணவி மறுக்கவே, அவளிடம் மது போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் சில்மிஷத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனைக்கண்டு நடுங்கிப் போன மாணவி, தனது பாதுகாப்பிற்காக வந்த 4 ஆசிரியர்களும் தனது நேர்ந்த கொடுமையை கண்டும் காணாத இருந்ததை கண்டு கூடுதல் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஒரு வழியாக அவர்களிடம் இருந்து தப்பித்த அந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவருக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் ஆறுதல் தெரிவித்து கொண்டிருக்க, மத துவேஷத்தை பரப்பும் சில விஷக் கிருமிகள் பாதிக்கப்பட்ட மாணவி குறித்து தவறான போட்டோஷாப் பதிவுகளை பரப்பிவிடவும் தவறவில்லை. பேருந்தில் காட்டுமிராண்டிகளாக நடந்து கொண்ட சக மாணவர்கள் குறித்தும் மாணவி தரப்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த புகாரை திரும்பப் பெறுமாறு தொடர்ந்து மாணவிக்கு நெருக்கடி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் மேலும் கொடுமை என்னவென்றால், பாதிக்கப்பட்ட மாணவிக்கு துணை நிற்கவேண்டிய அவரது கல்லூரி மாணவியை இடைநீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறது. சில்மிஷத்தில் ஈடுபட்ட பலரை விட்டுவிட்டு கண்துடைப்பிற்கு 2 மாணவர்களை மட்டும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

இந்த அநீதியை நேரில் கண்ட பாதிக்கப்பட்ட மாணவியின் நண்பர்களும் மிரட்டல் மற்றும் வேறு சில காரணங்கள் அது போன்ற ஒரு நிகழ்வு பேருந்தில் நடக்கவே இல்லை என பொய் சாட்சிகளை கட்டவிழ்த்துள்ளனர்.

சக மானவர்களின் பொய் சாட்சிகளை வைத்துக் கொண்டு இடைநீக்கம் செய்யப்பட்ட 2 மாணவர்களுக்கு ஆதரவாக கல்லூரி நிர்வாகத்திற்கு பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்த் பரிஷத் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்புகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

காஷ்மீரில் சிறுமி ஆசிஃபாவை கோவிலில் கொடூரமாக வன்புணர்வு செய்து கொலை செயத கொடும்பாவிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்திய பாஜக அமைச்சர்க போன்ற கயவர்கள் தான் ஓடும் பேருந்தில் மாணவியை சில்மிஷம் செய்தவர்களுக்கு ஆதரவாகவும் களம் இறங்கியுள்ளனர்.