hiddenIndiaPolitics

பகுஜன் சமாஜுக்கு போட்ட ஓட்டு பாஜகவுக்கு விழுந்ததால் பரபரப்பு

-File image

நேற்று மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைப்பெற்றது. அப்போது உத்தர பிரதேசத்தில் உள்ள மீரட் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தஸ்லீம் அஹமது என்ற வாக்காளர் ஒருவர் பகுஜன் சமாஜ் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யானை சின்னத்திற்கான பட்டனை அவர் அழுத்தியுள்ளார். ஆனால், ஒப்புகைச்சீட்டில் பாஜகவின் தாமரை சின்னத்திற்கு வாக்குப்பதிவானதாக கூறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர், வாக்குச்சாவடியில் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். இருப்பினும் ஒரு மணி நேரமாகியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு வந்த பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சியினர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்ற வேண்டும் என முழக்கமிட்டனர். இதனை தொடர்ந்து புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அங்கு வைக்கப்பட்டது. இது குறித்து பேசிய பகுஜன் சமாஜ் முன்னாள் எம்.எல்.ஏ யோகேஷ் வெர்மா, “இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் பாஜக வெற்றி பெற வாய்ப்பே இல்லை. பகுஜன் சமாஜுக்கு இப்பகுதியில் அதிக ஆதரவு உள்ளது. எனவே இங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்து வெற்றி பெற பாஜக முயல்கிறது” என்றார்.

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக யாரும் எதிர்பார்க்காத விதமாக வெற்றிபெற்றதன் பின்னணியில் வாக்குப்பதிவு இயந்திர மோசடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக ஆக்ராவின் கௌதம் நகர் பகுதியில் உள்ள 69வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்குகள் விழுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.