fact checkfarmersPoliticsTamilnadu

தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளித்தாரா அய்யாக்கண்ணு?

பரவும் செய்தி:

விவசாயிகள் கோரிக்கையை ஏற்காததால் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்த அய்யாக்கண்ணு அமித்ஷாவை சந்தித்த பின் அந்த முடிவை கைவிட்டார். நதிகள் இணைப்பு தொடர்பான கோரிக்கையை பாஜக தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதாக அமித்ஷா உறுதியளித்ததாலும், அவருக்கு வாரிய தலைவர் பதவி தருவதாக உறுதியளிக்கப்பட்டதாலும் அய்யக்கண்ணு பாஜகவுக்கு தேர்தலில் ஆதரவு அளித்துள்ளார்.

செய்தியின் நிலை: மிகைப்படுத்தப்பட்டது.

உண்மை செய்தி:

நதிநீர் இணைப்பு, விவசாய கடன் தள்ளுபடி என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகளை வழிநடத்தி பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி கவனத்தை ஈர்த்தவர் அய்யாக்கண்ணு.
கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த முறை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்பதால் பிரதமர் மோடி நிற்கும் தொகுதியில் அவரை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்வார்கள் என்று கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுடன், மோடிக்கு எதிராக 111 விவசாயிகள் ஒரே தொகுதியில் போட்டியிட்டால் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும் என்பதால் பாஜக தலைவர் அமித்ஷா அய்யக்கண்ணுவை அழைத்து பேசினார்.

இது குறித்து இந்து நாளிதழுக்கு பேட்டியளித்த அய்யாக்கண்ணு “இதுகுறித்து அய்யாக்கண்ணு, “டெல்லியில் 141 நாட்கள் போராட்டம் நடத்தியும் பிரதமர் மோடிஎங்களைக் கண்டுகொள்ளவில்லை என்பதால் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தோம். இந்நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் என்னைத் தொடர்புகொண்டு, கடன் தள்ளுபடி தவிர எஞ்சிய 5 கோரிக்கைகளை ஏற்பதாகவும், தேர்தலுக்குப் பிறகு கடன் தள்ளுபடி கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் கூறினார். எங்கள் சங்க நிர்வாகிகள் 9 பேரை பாஜகவினர் டெல்லியில் அமித்ஷா இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழ்நாடு அமைச்சர் தங்கமணி ஆகியோரும் இருந்தனர். எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதால் தேர்தலில் போட்டியிடுவதை கைவிட்டோம்.

ஆனால், அமித்ஷாவிடம் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாகவோ அல்லது வாக்களிப்பதாகவோ எந்த வாக்குறுதியையும் நாங்கள் அளிக்கவில்லை” என்றார்.

நியூசு பார்வை:

இதன் மூலம் அய்யக்கண்ணு பாஜகவை. தேர்தலில் ஆதரிக்கிறார் என்ற செய்தி பொய் என்பதை நாம் உறுதிபடுத்தியுள்ளோம். ஆனால், அதே சமயத்தில் அய்யக்கண்ணுவின் இந்த முடிவு நமக்கு பல விதமான சந்தேகங்களை எழுப்புகிறது. அய்யக்கண்ணு பல்வேறு செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் சரி, அண்மையில் தேர்தலில் போட்டியிடுவதை அறிவிக்க திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் சரி “கடந்த முறை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி ஏற்கவில்லை” என கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது இந்த தேர்தலில் அய்யக்கண்ணு அமித்ஷா அளித்த வாக்குறுதிகளை எந்த அடிப்படையில் ஏற்றுக்கொண்டார் என தெரியவில்லை. இவரது இந்த தீடீர் மாற்றத்திற்கு பின்னால் பணம் கைமாறியதா? அல்லது பதவி வழங்குவதாக பாஜக வாக்குறுதி வழங்கியதா? அல்லது அய்யக்கண்ணு மிரட்டப்பட்டாரா? என்ற கேள்விகளும் இங்கு எழுகின்றன. ஆனால், அய்யக்கண்ணுவின் முடிவை பெருவாரியான விவசாயிகள் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. அய்யக்கண்ணு ஏமாற்றிவிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.