DefenceIndiaworld

விமானத்தை வீழ்த்தியதாக இந்தியா பொய் சொல்கிறது – பாகிஸ்தான்

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் எப்16 போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியதாக இந்திய பாதுகாப்புத்துறை கூறி வந்தது. இதனை பிரச்சாரத்திலும் பாஜகவினர் பெருமையாக பேசி வந்தனர். எப் 16 விமானங்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய ஏவுகணை உதிரிபாகங்கள் சிதறி கிடந்ததை ஆதாரமாக காண்பித்தது இந்திய ராணுவம். எப்16 விமானம், அமெரிக்காவால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டதாகும்.

இந்தியாவுக்கு எதிராக அதை பயன்படுத்த கூடாது என நிபந்தனையும் விதித்திருந்தது அமெரிக்கா. ஆனால், எப்16 விமானத்தை பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியதாகவும், அதை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகவும் இந்தியா அறிவித்தது அமெரிக்காவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தங்கள் நாட்டுக்கே வந்து எப் 16 விமானங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டுகொள்ளுமாறு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து அமெரிக்க பாதுகாப்புத் துறையின் 2 மூத்த அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு சென்று நேரில் ஆய்வு நடத்தியுள்ளனர். அதில், பாகிஸ்தானிடம் தாங்கள் வழங்கிய எப்16 விமானங்கள் அனைத்தும் பத்திரமாக இருப்பதாகவும், ஒன்றுமே குறையவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்த இந்தியா, பாகிஸ்தானின் F-16 போர்விமானம் சுடப்பட்டதற்கான ரேடார் புகைப்படங்களை நேற்று வெளியிட்டது. இந்த நிலையில்,

பாகிஸ்தானின் F-16 ரக போர்விமானத்தை சுட்டு வீழத்தியதாக இந்தியா வெளியிட்ட ரேடார் புகைப்படங்கள் போலியானவை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளின் செய்தித்தொடர்பாளர் அசிஃப் கஃபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் “ ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதால் அது உண்மையாகாது. F-16 விமானம் சுடப்பட்டதற்கு ஆதாரத்தை கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இந்தியா இன்னும் அதனை வழங்கவில்லை. உண்மை என்னவென்றால் பாகிஸ்தான் விமானப்படை தான் இந்திய விமானப்படையின் போர்விமானங்களை சுட்டு வீழ்த்தியது. அதனை அனைவருமே பார்த்தனர்” என்று தெரிவித்துள்ளார்.