fact checkPoliticsTamilnadu

ராமர் கோயிலை கட்டுவோம் என்றாரா தமிழக காங்கிரஸ் தலைவர்? உண்மை என்ன?

பகிரப்படும் செய்தி:

தமிழக காங்கிரஸ் தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், “400 ஆண்டுகளுக்கு முன் கோவிலை இடித்து பள்ளிவாசல் கட்டினார்கள் என்பதற்காக அந்த காட்டுமிராண்டி தனத்தை இப்போது செய்ய வேண்டுமா? என்றும், ராமர் கோயிலை பாஜக ஒருபோதும் கட்டாது நாங்கள் கட்டுவோம்” எனவும் பேசியதாக செய்திகள் பரவி வருகின்றன. இத்துடன் விகடன் பேஸ்புக் தளத்தில் இதுகுறித்து பகிரப்பட்ட செய்தியின் ஸ்க்ரீன் ஷாட்டும் வைரலாகி சமூக வலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளது.

செய்தியின் உண்மை நிலை: மிகைப்படுத்தப்பட்டது.

உண்மை செய்தி: நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “ராமர் நமக்கு கடவுள். அனைத்து இந்துக்களுக்கும் ராமனையும் பிடிக்கும், கிருஷ்ணனையும் பிடிக்கும். காந்தி ராமருக்கு தனது இதயத்தில் கோயில் கட்டினாரே தவிர, முஸ்லிம்களின் இடத்தில் கட்டவில்லை. 400 ஆண்டுக்கு முன்பு ஒரு காட்டுமிராண்டி கும்பல் ராமர்கோயிலை இடித்துவிட்டு முஸ்லிம் பள்ளி கட்டினார்கள் என்கிறார்கள். நாகரிகம் பெற்ற இந்தக் காலகட்டத்தில் அதே காட்டுமிராண்டித் தனத்தைப் போன்று பள்ளியை இடித்து கோயில் கட்டுவோம் என்பது என்ன நியாயம். ராமர்கோவில் கட்டினால் பா.ஜ.க. முடிந்துவிடும். எனவே பா.ஜ.க-வினர் ஒருபோதும் ராமர்கோயில் கட்டமாட்டார்கள். நாங்கள் பிரச்னைக்குரிய இடத்தில் அல்லாமல் பொது இடத்தில் ராமர்கோயில் கட்டுவோம். இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடாக இருக்கும் எனச் சொன்னவர் மகாத்மா காந்தி. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கூட்டம் ராமர் கோயிலைக் காட்டி இந்தியாவை பயமுறுத்துகிறது.” என்றார்.

நியூசு கருத்து:

கே.எஸ்.அழகிரி காட்டுமிராண்டி என பாபர் மசூதியை கட்டியவர்களை கூறினார் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அவர் காட்டுமிராண்டி என்றார்கள் என பாஜகவை தான் சுட்டிக்காட்டுகிறார். அதே போல் ராமர் கோயிலை பொது இடத்தில் கட்டுவோம் என்கிறாரே தவிர பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டுவோம் என சொல்லவில்லை. ஆனால், மதசார்பற்ற நாடாக கருதப்படும் இந்தியாவில் ஒரு அரசு குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டு தளத்தை அரசு செலவில் கட்டுவதற்கு அனுமதிக்கின்றதா? என்ற கேள்வி எழுகிறது. மேலும் பாபர் மசூதி என்பது அழகிரி சுட்டிக்காட்டிய பாஜகவினரின் கருத்தை போல் ராமர் கோயிலை இடித்துவிட்டு கட்டியதாக இதுவரை நடத்தப்பட்ட எந்த தொல்லியல் ஆராய்ச்சியிலும் உறுதி செய்யப்படவில்லை. எனவே ஒரு அரசின் தலையாய கடமை என்பது மத வெறியர்களால் பாபர் மசூதியை இழந்த முஸ்லிம்களுக்கு அதே இடத்தில் புதிய மசூதியை கட்டித்தருவது தானே தவிர பெரும்பான்மை சமுதாயத்தை திருப்திபடுத்துவதற்காக அவர்களின் வழிபாட்டு தளத்தை அரசு நிதியில் அமைப்பது அல்ல.