fact checkLawPolitics

சேலஞ் ஓட்டு’, ‘டென்டர் ஓட்டு’ குறித்து வாட்ஸ் அப்பில் பரவும் தகவல் – உண்மைத் தன்மை என்ன?

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுட்டிருந்தாலோ, அல்லது உங்களது வாக்கை வேறு ஒருவர் கள்ள ஓட்டாக போட்டிருந்தாலோ, அவற்றை சட்டப்படி எதிர் கொண்டு வாக்களிப்பது எப்படி என்பது குறித்த குறுஞ்செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த குறுஞ்செய்தியின் உண்மைத் தன்மையை மக்களுக்கு விளக்குகிறது இந்த செய்தி,

பகிரப்படும் குறுஞ்செய்தி:

1. வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையையோ அல்லது ஆதார் அட்டையையோ காண்பித்து தங்களது வாக்கை பதிவு செய்யலாம். இவ்வாறு பதிவு செய்யப்படும் ஓட்டு ‘சேலஞ்ச் ஓட்டு’ எனப்படுகிறது. இதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 49A அனுமதி அளிக்கிறது.

2. இதே போல உங்களது வாக்கு, வேறு ஒருவரால் கள்ள ஓட்டாக போடப் பட்டிருந்தால் சம்பந்தபட்ட வாக்காளர் ‘டென்டர் ஓட்டு’ க்கு உரிமை கோரலாம். இதன் மூலம் அந்த வாக்காளர் தனது வாக்கினை பதிவு செய்ய முடியும்.

3. மேலும், ஒரு வாக்குச் சாவடி மையத்தில் 14 சதவிகிதத்திற்கு மேல் டென்டர் ஓட்டுக்கள் பதிவாகியிருந்தால் அந்த வாக்குச் சாவடியில் மறு தேர்தல் நடத்தப்படும்.

செய்தியின் உண்மைத் தன்மை:

மேலே உள்ள குறுஞ்செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது போன்று இந்திய அரசியலமைப்பு சட்டம் 49A ல் எந்த இடத்திலும் ‘சேலஞ் ஓட்டு’ என்கிற வார்த்தை இடம் பெறவில்லை. மாறாக, அந்த பிரிவு முழுவதும் வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்முறைகள் மட்டுமே விளக்கப்பட்டுள்ளன.

அதே போல கள்ள ஓட்டிற்குப் பதிலாக சம்பந்தபட்ட வாக்காளர் ‘டென்டர் ஓட்டு’ க்கு உரிமை கோரி வாக்களிக்கலாம் என்பது உண்மை எனினும், 14 சதவிகிதத்திற்கு மேல் டென்டர் ஓட்டு பதிவானால் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்பது அடிப்படை ஆதாரமற்ற செய்தியாகும்.

டென்டர் ஓட்டுக்கள் குறித்து முன்னால் தலைமைத் தேர்தல் ஆணையர் குரைஷி கூறும்போது “14% மேல் டென்டர் ஓட்டு பதிவானால் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்பது பொய்யான தகவல்” என கூறினார். மேலும், “டென்டர் ஓட்டுக்களின் சதவிகிதம் அதிகமாகும்போது, அது முக்கியமான பிரச்சனை என கருதப்பட்டால் அந்த தருணத்தில் தேர்தல் ஆணையம் ஒன்று கூடி உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்” என்று அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் மேலே பகிரப்பட்டுள்ள குறுஞ்செய்தியில் கூறப்பட்டுள்ள மூன்று தகவல்களில் இரண்டு தவல்கள் பொய்யானவை என்பது உறுதியாகியுள்ளது.

இது போல முக்கியமான நேரங்களில் பகிரப்படும் செய்திகளில் உண்மையுடன், பொய்யும் கலந்து விடுவதால் உண்மைச் செய்திக்கான அங்கீகாரமும் கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே, இனிமேலாவது செய்திகளை பகிர்வதற்கு முன் அதன் உண்மைத் தன்மையை அறிந்து பகிருங்கள்.

– நியூசு செய்திக்குழு