BackgroundPoliticsTamilnadu

தயாநிதிமாறனுக்கு நெருக்கடி தரும் தெஹ்லான் பாகவி… மத்திய சென்னையில் ஸ்கோர் செய்யும் SDPI

தினகரனின் அமமுக கூட்டணியில் உள்ள SDPI கட்சி மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறது. அங்கு அக்கட்சியின் தேசிய துணைதலைவர் தெஹ்லான் பாகவி போட்டியிடுகிறார். தற்போது தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சார பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மத்திய சென்னையில் பொருத்தவரை திமுகவின் ஸ்டார் வேட்பாளராக கருதப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் களமிறங்கியுள்ளார். இதேபோல் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக சாம் பால் போட்டியிடுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி இருப்பதாக கூறப்பட்டாலும் SDPI வேட்பாளர் தெஹ்லான் பாகவி தேர்தல் பணிகளில் பம்பரம் போல் சுழன்று மக்களின் ஆதரவை பெற்று வருகிறார்.

தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளையும் வார்டு வாரியாக கணக்கெடுத்து தற்போதே பூத் கமிட்டி உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் SDPI முடித்துள்ளது. மற்ற கட்சிகள் நடத்தும் பிரச்சார கூட்டங்களால் நெரிசல் மிகுந்த மத்திய சென்னை தொகுதியில் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால், பிரச்சாரத்தில் ஈடுபடும் போது SDPI கட்சியினர் பொதுமக்களுக்கு சிறிதும் இடையூறு இல்லாமல் செயல்பட்டு வருகின்றனர்.

போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதிகளில் பிரச்சாரத்தின் போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்த SDPI க சேர்ந்த தொண்டர்கள் சாலையில் களமிறங்குகின்றனர். இதன்மூலம் போக்குவரத்து காவலர்களின் வேலை மிச்சமாவதுடன் நெரிசல் ஏற்படாமல் வாகன ஓட்டிகள் அந்த இடத்தை கடந்து செல்கின்றனர். சென்னை வெள்ளம், வர்தா புயல் போன்ற பேரிடர் காலங்களில் சென்னை மக்களுக்கு பேருதவி புரிந்த SDPI தொண்டர்களை இன்னும் மக்கள் நினைவில் வைத்திருப்பதுடன் தற்போதைய கண்ணியமான பிரச்சார அணுகுமுறைகளால் மக்களை கவர்ந்துள்ளனர்.

SDPI கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து மத்திய சென்னையில் குவிந்து தெஹ்லான் பாகவிக்காக அனைத்து தரப்பு மக்களையும் நேரில் சென்று சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதால் மத்திய சென்னையில் இஸ்லாமியர்களின் வாக்கு மட்டுமின்றி கட்சி சார்பற்ற சாமானிய மக்களின் வாக்குகளும் தெஹ்லான் பாகவிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வழக்கும் போல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ள மத்திய சென்னையில் களமிறங்கிய தயாநிதி மாறனுக்கு தெஹ்லான் பாகவி தலைவலியாக மாறியுள்ளார்.

கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதற்கு அப்போது ஆதரவு தெரிவித்திருந்த SDPI கட்சி மேற்கொண்ட களப்பணிகள் முக்கிய காரணம் என தினகரன் கூறியுள்ளார். இந்த சூழலில் மத்திய சென்னையில் SDPI கட்சியே போட்டியிடுவதால் அங்கு அவர்களின் தேர்தல் செயல்பாடுகளை திமுக உற்று நோக்கி வருகிறது.