articlesociety

LIFE SETTLE – ஒரு மாயை

LIFE SETTLE என்ற ஒன்று இல்லவே இல்லை.

ஏழை வறுமையை தகர்க்க ஓடிக்கொண்டிருக்கிறார்.

நடுத்தர நபர் பணக்காரனாக ஓடிக்கொண்டிருக்கிறார்.

பணக்காரர் இருக்கும் பணத்தை இரட்டிப்பாக்க ஓடிக்கொண்டிருக்கிறார்.

மொத்தத்தில் இவ்வுலகத்தில் யாருமே SETTLE இல்லை. உழைப்பதில் தவறே இல்லை. எவ்வளவு பணம் இருந்தாலும் தொடர்ந்து உழைக்கலாம். பிறரை ஏமாற்றாமல், யார் காலையும் வாரிவிடாமல் எவ்வளவு வேண்டுமானாலும் பொருள் ஈட்டலாம். ஆனால், அந்த பொருள் நம் வாழ்வை வளமாக்க பயன்படலாம். பிறர் வாழ்வை மேம்படுத்த பயன்படலாம். ஆனால், அந்த பொருள் பிறரை அடிமைப்படுத்த, சிறுமைப்படுத்த, நமது அதிகாரத்தை காட்டுவதற்கு பயன்படக்கூடாது.

LIFE SETTLE ஆனவுடன் திருமணம் செய்துகொள்வேன் என பலர் என்னிடம் கூறியது உண்டு. ஆனால் பலருக்கு அதற்கான விளக்கத்தை கொடுக்க முடியவில்லை. கார் வாங்கனும், பெருசா வீடு வாங்கனும், ஐ போன் வாங்கனும் என்பதையெல்லாம் சிலர் SETTLE பட்டியலில் வைத்திருக்கின்றனர். ஆடம்பரங்களை அத்தியாவசியமாக்கி கொண்டதன் விளைவு தான் இந்த வார்த்தைகள்.

இவர்களின் கணக்குப்படி பார்த்தால் ஏழைகள் யாரும் திருமணமே செய்துகொள்ள கூடாது என்றே பொருள்படும். பொருளாதார விசயத்தில் நம்மை விட குறைவாக உள்ளவர்களை ஒப்பிட்டு நாம் திருப்தியடைய வேண்டுமே தவிர நமக்கு மேலே இருப்பவர்களை கண்டு பொறாமை அடைந்தால் வாழ்க்கையே குழம்பிவிடும். பொருளாதாரத்தை எப்படி ஈட்ட வேண்டும் என்று சொல்லிக்கொடுத்த கல்வி முறை, பொருளாதாரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும், பொருளாதார மேலாண்மை, வாழ்க்கை முறை குறித்து சரியாக கற்பிக்கவில்லை.

இங்கு இருப்பது முழுவதும் Professional Education மட்டுமே. Life studies மிகக்குறைவு.