article

ஒரு விசயம் பற்றி என்னவென்றே தெரியாமல் எதிர்ப்பவரா நீங்கள்?

நம்மில் பலர் பள்ளி, கல்லூரிகளில் கணிதம் படிக்கும்போது உடனே அது புரிந்திருக்காது. சிலருக்கு இரண்டு, மூன்று முறை ஆசிரியரிடம் கேட்ட பின் புரியும். சிலருக்கு மாதக்கணக்கில் செல்லும். சிலருக்கு கடைசி வரை புரியவே புரியாது. சிலருக்கு புரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்காது. நமக்கு புரியவில்லை என்பதற்காக அந்த கணக்கில் தீர்வு இல்லை என்று சொல்லி ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட முடியாது. புரியும் வரை ஆசிரியரிடம் பொறுமையாக சந்தேகங்களை கேட்டு தெளிவுபெறுவது தான் நமக்கு பயன்தரும்.

இதே போல் தான் கொள்கைகளும், திட்டங்களும், செயல்பாடுகள் பல நேரங்களில் வெளியிலிருந்து பார்க்கும்போது புரியாமல் இருக்கலாம். தவறாகவும் தோன்றலாம். நமது புரிதலில் பிழையை வைத்துக்கொண்டு கொள்கைகள், திட்டங்கள், செயல்பாடுகள் மீது விமர்சனத்தை முன்வைத்து வாக்குவாதங்களை நாம் முன் வைத்து வருகிறோம். குழப்பம் இருந்தால் அது சார்ந்தவர்களிடம் விளக்கம் கேட்டு தெளிவு பெற வேண்டுமே தவிர வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. ஒருவேளை அது சார்ந்தோரால் பதில் தரமுடியவில்லை, அதன் பின்னணியில் மோசமான சதி இருப்பதை நாம் உறுதி செய்தால் அதன் விபரீதம் பற்றி பிரச்சாரம் செய்யலாம்.

ஆனால், நம்மில் பலர் ஒரு விசயத்தை பற்றி என்வென்றே அறிந்துகொள்ளாமல் பொதுப்புத்தியை வைத்துக்கொண்டு எதிர்க்க தொடங்கி விடுகிறோம். மிகச்சிறந்த அறிவுஜீவிகளாக அறியப்படுபவர்கள் கூட இந்த விசயத்தில் முட்டாள்தனமாக நடந்துகொள்கிறார்கள். பேசுவதை நன்றாக கவனிப்பதும், வாசிப்பதும் அறிவை அதிகரிக்க செய்யும்.

இந்த பதிவின் நோக்கம் ஒன்றே ஒன்று தான். ஒரு விசயத்தை ஆதரிப்பதற்கும், எதிர்ப்பதற்கும் முன்பாக அது பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.