articlefact checkPolitics

நோட்டாவுக்கு ஓட்டு போட்டு ஏப்ரல் FOOL ஆகிடாதீங்க மக்கா…

NOTA-வுக்கு டாட்டா

None of the above என்பது தான் NOTA. அதாவது ஒரு தொகுதியில் நிற்கும் எல்லா கட்சிகளையும் & வேட்பாளர்களையும் உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் இவர்கள் யாருமே உங்களுக்கு வேண்டாம் என்று நோட்டாவுக்கு வாக்களிப்பதன் மூலம் நீங்கள் நிராகரிக்கலாம் என்று அர்த்தம்.சரி, நிராகரிக்கிறீர்கள்!

அப்போ என்ன ஆகும்?
ஒன்றுமே ஆகாது!ஆமாம் ஒன்றுமே ஆகாது, அது தான் 100% உண்மை.வாக்கு சீட்டு இருந்த காலத்தில் செல்லாத ஓட்டுக்கள் என ஒன்று இருந்தது அல்லவா, அது தான் EVM காலத்தில் NOTA-வாக மாற்றம் பெற்றிருக்கிறது.என்ன சிவா இப்படி சொல்லுறே என்று கேட்பவர்களாக நீங்கள் இருந்தால்….

உங்களுக்கு என் பதில் இது தான்:

இந்த அரசு, அரசியல் சாசன சட்டம், அதன் வழி நடக்கும் உச்சநீதிமன்றம் (Supreme Court) எல்லாம் சேர்ந்து உங்களை ஏமாற்றுகிறது என்று தெரியாமலேயே நீங்கள் இதற்கு முன்னால் நடந்த தேர்தல்களில் NOTA-வுக்கு வாக்களித்து விட்டு, ஏதோ இந்த நாட்டின் மீட்சிக்கு பகத் சிங்கிற்கு ஒப்பான புரட்சியை செய்துவிட்டது போல மிதப்பில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.அப்போ NOTA-வுக்கு ஒருவர் ஓட்டு போடுவதால் ஒன்றுமே ஆகாதா?

ஒரு ஹைகோர்ட்டும் நடக்காது என்பது தான் கசப்பான உண்மை. பாகுபலி படத்தில் வரும் கதாப்பாத்திரங்களை வைத்து இன்னும் விளக்கமாக சொல்கிறேன்…

நம்ம மகிழ்மதியில் ஒரு தேர்தல் நடைபெறுவதாக வைத்துக்கொள்வோம்.
பல்வால் தேவன் ஆட்சியில் இருக்கிறான். தேர்தலில் அவன் வீழ்த்தப்பட வேண்டும்.நான் பல்வால் தேவனுக்கு ஓட்டு கேட்க,
நீங்கள் பாகுபலிக்கு ஓட்டு கேட்கிறீர்கள்
இடையில் ஒரு கூட்டம் இவர்கள் இருவரும் வேண்டாம் என்று NOTA-வுக்கு ஓட்டு கேட்கிறது.மொத்தம் 10,000 ஓட்டு என்று வைத்துக்கொள்வோம்.

தேர்தலில் பதிவான வாக்குகள் 4000 (6000 பேர் வாக்களிக்கவில்லை)

இதில் பல்வால் தேவன் – 1600 வாக்குகள்
பாகுபலி – 1500 வாக்குகள்
NOTA – 900 வாக்குகள்
வாங்கியிருக்கின்றன. இதனால் என்ன ஆகும்? ஒன்றுமே ஆகாது. பாகுபலியை விட 100 ஓட்டு அதிகம் பெற்ற பல்வால் தேவன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். பாகுபலியும் வேண்டாம், பல்வால் தேவனும் வேண்டாம் என்று நிராகரித்த புரட்சியாளன் நான் என்ற வறட்டு பெருமிதத்துடன் நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டியது தான்.

மகிழ்மதியில் மட்டுமல்ல, இந்தியா, தமிழ்நாடு என எல்லா இடத்திலும் NOTA-வுக்கு போட்டா இது தான் நிலைமை. எதுவுமே மாறாது!இது தான் இந்திய அரசியல் சாசன சட்டம் வகுத்து கொடுத்துள்ள தேர்தல் முறை. NOTA-விற்கான உண்மையான மரியாதையும் இது தான்.

வளர்ச்சிக்காக இந்தியாவே மோடிக்கு வாக்களித்தது என்று பாஜகவினர் உளறிக்கொண்டிருக்கும் 2014 தேர்தலை எடுத்துக்கொள்ளுங்கள்.

மொத்த வாக்குக்கள் – 65%
வாக்களிக்காதவர்கள் – 35%
பாஜக – 32%
காங்கிரஸ் – 20%
அதிமுக – 4%
மம்தா – 4%
மற்றவை – 5%

இதெல்லாம் குத்துமதிப்பான கணக்கு தான். ஆக சதவீத கணக்குப்படி பார்த்தால்

32% பேர் பாஜகவிற்கு ஆதரவாகவும்,

மீதி 68% பேர் பாஜகவிற்கு எதிராகவும் உள்ளார்கள் என்று நாம் எடுத்துக்கொண்டால் அது முட்டாள்தனமில்லையா?

ஏன் அது முட்டாள்தனம்? 68% மக்களுக்கு பாஜகவை பிடிக்கவில்லை என்பது உண்மை என்றே நாம் எடுத்துக்கொண்டால் கூட, 32% வாக்குகள் பெற்ற பாஜக தான் 282 மக்களவை உறுப்பினர்களை பெற்றது.

அரசியல் சாசன சட்டத்தின் படி அவர்களே நம்மை ஆண்டார்கள். அடுத்து திரிபுராவை எடுத்துக்கொள்வோம்பாஜக அமோக வெற்றிபெற்று முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. கம்யூனிசமே வீழ்ந்துவிட்டது என்று பாஜகவின் ஒலக்கூச்சல் எல்லாம் கேட்டீர்கள் தானே!உண்மை நிலை என்ன தெரியுமா?

பாஜக 999,093 ஓட்டுக்களை பெற்று 35 எம்எல்ஏக்களை பெற்றது.சி.பி.எம் 992,575 ஓட்டுக்களை பெற்று வெறும் 16 எம்எல்ஏக்களை பெற்றது.

உங்க எல்லாருக்கும் கணக்கு தெரியும் இல்லே?கூடி கழிச்சு பாருங்க…

மொத்தம் வெறும் 6518 ஓட்டுகளில் சி.பி.எம் கட்சி 19 எம்எல்ஏக்களை இழந்து ஆட்சியை பறிக்கொடுத்திருக்கிறது. அதாவது (999093-992575 = 6518)

அந்த 6518 ஓட்டுகள் தான் பாஜகவை அமோக வெற்றிபெற செய்திருக்கிறது. அதே சமயத்தில் NOTA-விற்கு தேர்தல் நடந்த 59 தொகுதிகளில் ஒரு வோட்டு கூட விழவில்லை. தமிழ்நாட்டை விட திரிபுரா மட்டமான மாநிலம் என்ற நினைப்பு நமக்கெல்லாம் உண்டு தானே. ஆனால் அந்த மாநிலத்து மக்களில் ஒருவர் கூட நோட்டாவுக்கு வாக்களித்த முட்டாள் இல்லை. போட்டி நடந்தது பாஜகவுக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும். அந்த மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டி இவ்விருவருக்கு இடையே மட்டுமே இருந்துள்ளது. நல்லவேளை, திரிபுராவில் எந்த படித்த கிறுக்கனும் இல்லை. அந்த மாநிலத்தில் ஒரு கிறுக்கன் இருந்து அவன் எல்லாரையும் NOTA-விற்கு ஓட்டுப்போட சொல்லியிருந்தால் தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கும். சி.பி.எம் கட்சி நடத்திய ஆட்சி மீதான Anti-Incumbency Votes சிதறி மீண்டும் சி.பி.எம் கட்சியே அமைந்திருந்தாலும் ஆச்சரியம் இல்லை.

ஏன் ஆச்சரியம் இல்லை?

அது தான் சென்ற 2016 தேர்தலில் தமிழ்நாட்டில் நடந்தது.

அதிமுக – 1,76,17,060 (41%)
திமுக – 1,67,58,394 (40%)
ம.ந.கூ – 26,18,250 (3.69%)
NOTA – 5,61,244 (1.31%)

அதிமுக ஆட்சிக்கு எதிரான Anti-Incumbency Votes, இந்த மாநிலத்திலேயே மாற்று வலிமையான கட்சியான திமுகவை தான் வந்து சேர்ந்திருக்க வேண்டும். அது மூன்றாவது அணி, NOTA என்று மடைமாற்றம் செய்யப்பட்டதால் மீண்டும் அதிமுக தான் ஆட்சிக்கு வந்துவிட்டது. 2016 தேர்தலில் மொத்தமே 26000 வாக்குகளில் 21 தொகுதியை இழந்த திமுக, ஆட்சியை அதிமுகவிடம் பறிகொடுத்தது. இதே தான் திமுக ஆட்சியில் இருந்தாலும் நடக்கும்.திமுக ஆட்சிக்கு எதிரான Anti-Incumbency Votes, இந்த மாநிலத்திலேயே மாற்று வலிமையான கட்சியான அதிமுகவை தான் சென்று சேர வேண்டும்.

அது மூன்றாவது அணி, NOTA என்று மடைமாற்றம் செய்யப்பட்டால் மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும்.ஒட்டுமொத்த மாநில அளவில் மட்டுமல்ல, தொகுதி அளவிலும் இது தான் நிலை.

திருமாவளவன் சென்ற முறை போட்டியிட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியை உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.

அதிமுக – 48450

திருமா – 48363

NOTA – 1025

நோட்டாவுக்கு 1000 வாக்குகளுக்கு மேல் விழ, வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் திருமாவை வெற்றிகொள்கிறார்.

அது மட்டுமா? மாயாவதி கட்சி வேட்பாளர் இத்தொகுதியில் 380 வாக்குகள் வாங்குகிறார். அதாவது, நேரடி போட்டியாளர்களின் வெற்றி தோல்வியை அந்தந்த வேட்பாளரின் ஆதரவு & எதிர்ப்பு ஓட்டுகள் மட்டும் முடிவு செய்வதில்லை. இது மாதிரி திசை மாற்றப்படும் ஓட்டுகளும் முடிவு செய்கின்றன. இதை கவனத்தில் கொண்டே நாம் ஒவ்வொரு முறையும் ஓட்டளிக்க வேண்டும். இதை இப்போ அப்படியே மத்திய பாஜக ஆட்சிக்கும் பொருத்தி பார்க்கலாம். இந்த 2019 மக்களவை தேர்தலில் உங்களுக்கு மோடி ஆட்சி தான் வேண்டும் என்றால் சிக்கலே இல்லை. நீங்கள் பாஜகவிற்கு நேரடியாக வாக்களித்து விடலாம்.

ஒரு வேளை நீங்கள் மத்தியில் பாஜக ஆட்சி வேண்டாம் என்று நினைக்கிறீர்களா? அப்ப நீங்க உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட, கண்டிப்பாக திமுக+காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு தான் வாக்களிக்க வேண்டும். அப்பொழுது தான் பாஜக தோல்வியடைந்து ஆட்சி மாற்றம் ஏற்படும்…

எவன் பேச்சையாவது கேட்டு, நீங்க NOTA-விற்கோ, வேறு உதிரி கட்சிகளுக்கோ வாக்களித்தால், அந்தோ பரிதாபம்! பாஜக தான் உங்கள் எதிர்ப்பையும், எதிர்பார்ப்பையும் மீறி ஆட்சிக்கு வரும். இதெல்லாம் எதுவுமே தெரியாதவர்கள்,
தேர்தல் அரசியலில் நேரடி பங்களிப்போ, அனுபவமோ, அறிவோ இல்லாதவர்கள்,
இந்த மண்ணிற்கும், மாநிலத்திற்கும், நாட்டிற்கும் தொடர்பில்லாதவர்கள்
அரசியல் தாண்டி வேறு மறைமுக சதித்திட்டம் வைத்திருப்பவர்கள் மட்டுமே… இங்கு இருப்பவர்கள் யாருமே வேண்டாம். எல்லாம் மோசம். புதுசா ஒருத்தன் வானில் இருந்து குதிச்சு வருவான். தேர்தலில் வெற்றிபெற்று நம்மை அப்படியே சொர்க்கத்திற்கு கூட்டிக்கொண்டு போவான் என்று கதை அளப்பார்கள்.

இந்த கதையை நீங்கள் காதுக்கொடுத்து நம்பி கேட்பீர்களானால், உங்கள் வாழ்க்கையில் செக்கு மாடு சுற்றிவருவது போல ஒரே இடத்தில சுற்றி வரவேண்டியிருக்குமே தவிர, உங்கள் ஓட்டால் எந்த ஒரு மாறுதலும் இந்தியாவில் வரவே வராது.அவர்களுக்கு நீங்கள் காது கொடுத்தால் உங்கள் குடும்பத்தின் கதை மட்டுமல்லாது, நம் மொத்த மாநிலத்தின்/நாட்டின் கதையும் முடிந்து விடும்.

இவர்களும் சரி, இவர்கள் ஆலோசனைகளும் சரி ஒரு நாளும் நம்மை எந்தவித முன்னேற்றப்பாதைக்கும் அழைத்து செல்லாது. நோட்டாவுக்கு ஓட்டளிப்பதை விட சும்மாவே இருக்கலாம்.