hiddenIndiasports

இந்திய கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வதாக கூறி மோசடி… பயிற்சியாளர்களுக்கு தொடர்பு!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு தருவதாக கூறி கிரிக்கெட் வீரர்களிடம் பயிற்சியாளர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பண மோசடி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர் நுழைவு வாயிலாக கருதப்படுகிறது. இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த தொடரில் வீரர்கள் சாதி மற்றும் பணத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனை மெய்பிக்கும் வகையில் ரஞ்சிக்கோப்பையில் விளையாட வாய்ப்பு தருவதாக கூறி 80 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட கனிஷ்க் கவுர், கிஷன் அட்ரி, ஷிவம் ஆகிய 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பிசிசிஐ அளித்த புகாரின் பேரில் டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நாகாலாந்து, மணிப்பூர், ஜார்கண்ட் மாநில அணிகளில் விளையாட வாய்ப்பு வழங்குவதாக கூறி போலி சான்றிதழ்களை வழங்கி மோசடி நடைபெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கிரிக்கெட் பயிற்சியாளர்கள், மாநில கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் உள்ளிட்ட 10 பேருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும், இதில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்று இருக்கலாம் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.