BackgroundPolitics

பேஸ்புக்கில் மக்கள் மனதை மாற்ற பாஜக சதி… ஆதாரங்களுடன் அம்பலம்!

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவு வளர்ந்து கொண்டிருக்க செல்போன்களும் இணைய வசதிகளும் ஆக்சிஜனைப் போல் தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது.

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் மக்களிடையே தங்களுக்குள்ள செல்வாக்கை அதிகப்படுத்த பல வழிகளை கையாண்டு வருகின்றன என்பது யாம் அறிந்த்தே.

செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் ஒரு காலத்தில் பார்க்க முடிந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் இப்போது முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டன.

ஆளும் கட்சியாக இருந்தால் அரசின் சாதனைகளாக தாங்கள் செய்ததை மக்களிடையே விளம்பரம் மூலம் பிரபலப்படுத்துவார்கள். செய்யாத வேலைகளையும் திரித்துக் கூறி சமூக வலைதளங்களில் பகிரச் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு ஆளும் பா.ஜ.க மோடி அரசு என்பதை உண்மை அறிந்தவர்கள் மறுக்க முடியாது.
போட்டோஷாப்களில் கைதேர்ந்தவர்களைக் கொண்டு எண்ணற்ற பித்தலாட்டங்கள் செய்யப்படுகிறது.

சமூக வலைத்தளங்களை கையாள்வதற்காகவே மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களை கையில் போட்டுக்கொண்டு விளம்ரங்கள் ஊடாக தங்கள் வாக்கு வங்கியை சேர்க்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது பா.ஜ.க. அதிலும் குறிப்பாக இளம் தலைமுறை வாக்காளர்களை தங்கள் கட்சியில் இணைப்பதற்கும் கட்சி குறித்த நல்லெண்ணங்களை விதைப்பதற்கும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக மிக மிக முக்கிய பங்காற்றுகிறது பா.ஜ.க

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளுவதற்காக பா.ஜ.க ஐடி விங் தனது வழக்கமான போட்டோஷாப் ஜாம்பவான்களைக் கொண்டு பல ஏமாற்று வித்தைகளை விளம்பரபடுத்தி மக்களை போலியாக கவரவும் தவறவில்லை..

இன்றைய காலத்தில் மொபைல் போன் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் குறைந்தது முகநூலில் கணக்கு இருக்கும்..
அந்த முகநூலில் இடையிடையே வரும் விளம்பரங்களையும் நாம் கவனித்திருப்போம்.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி 7 2019 முதல் மார்ச் 2 2019 வரை மட்டும் முகநூலில் வெளிவந்த விளம்பரம் குறித்தும் அதற்காக விளம்பரதாரர்கள் செலவிட்ட தொகையையும் தற்போது ஓர் ஆய்வறிக்கை மூலம் பட்டியலிட்டுள்ளது மார்க் சக்கர்பர்கின் முகநூல் நிறுவனம்.

அதன்படி பிப்ரவரி 7 – மார்ச் 2 வரை இந்தியாவில் வெறும் விளம்பரங்கள் மூலம் முகநூலுக்கு கிடைத்த மொத்த வருவாய் 4 கோடியே 10 லட்சம் ரூபாய். இதில் 70 சதவீத வருவாய் ஆளும் பா.ஜ.க அரசும் அதற்கு ஆதவரான சில இதர முகநூல் பக்கங்களும் பதிவிட்ட விளம்பரங்கள் ஊடாக கிடைத்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

பிப்ரவரி 7 2019 முதல் மார்ச் 2 2019 வரையான 25 நாட்களுக்கு மட்டும் முகநூலில் தங்களை குறித்து விளம்பரம் செய்வதற்காக மட்டும் பா.ஜ.க செலவழித்துள்ள மொத்த தொகை 2 கோடியே 70 லட்சம் ரூபாய்..! இதில் பா.ஜ.க ஆதரவாளர்களின் வெறும் 8 பக்கங்கள் மட்டும் 2.3 கோடி ரூபாய் விளம்பரத்திற்காக செலவிட்டுள்ளது.

விளம்பரத்திற்காக அதிகம் செலவழித்த 8 பக்கங்களில் முதலிடம் வகிப்பது “பாரத் கீ மான் கீ பாத்” என்ற முகநூல் பக்கம். இந்த பக்கம் தனது விளம்பரத்திற்காக மட்டும் முகநூலில் செலவு செய்த தொகை 1.2 கோடி..!

இது மட்டுமின்றி ‘Nation with Namo’, ‘MyGov India’ உள்ளிட்ட பா.ஜ.க வுக்கு ஆதரவான மற்ற 7 பக்கங்கள் செலவழித்த தொகை 1.1 கோடி ரூபாய்.

இதே போல் நேரடியாக பா.ஜ.க வை குறிக்காமல் சமூக சேவை செய்யும் அமைப்புகளாக (NGOக்களாக) தங்களை காட்டிக் கொண்டு பா.ஜ.க முகமூடிகளாக செயல்படும் 115 பக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்கள் செலவிடும் மொத்த தொகை 74 லட்சம் ரூபாய்!

இப்படியாக வெறும் விளம்பரங்களுக்கு மட்டும் 25 நாட்களுக்கு இவர்கள் செலவழித்துள்ள தொகை 2.7 கோடி. அப்படி என்றால் முகநூலில் விளம்பரம் செய்வதற்காக மட்டும் பா.ஜ.க ஒரு நாளைக்கு

செலவழிக்கும் தொகை 10.80 லட்சம் ரூபாய்

ஒரு வருடத்திற்கு 40 கோடி ரூபாய்..

முகநூலுக்கு மட்டும் 40 கோடி என்றால் இதர சமூக வலைதளங்களில் எத்தனை கோடிக்கு செலவு செய்திருப்பார்கள்..?

மக்களின் பணத்தை சுரண்டி மோசமான ஆட்சியை நடத்தினாலும் வெறும் விளம்பரம் ஊடாக பாமர மக்களுக்களையும் அரசியல் தெரியாத பட்டதாரிகளையும் வேகமாக தங்கள் வலையில் வீழ்த்த கண்கவர் விளம்பரங்களை இது போன்ற கோடிகளில் செலவழித்து பரப்பி வருகிறது பா.ஜ.க அரசு..!

வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே இத்தனை கோடி ரூபாய் செலவழிக்கும் பா.ஜ.க மோடி அரசு இந்த ஆர்வத்தை வேறு ஏதேனும் வளர்ச்சிப் பணியில் காட்டியிருந்தால் நாடு எவ்வளவோ முன்னேறி இருக்கும்.