history

historyTamilnadu

VOTER ID CARD-ஐ அறிமுகம் செய்த முன்னாள் தேர்தல் ஆணையர் சேசன் மரணமடைந்தார்

சென்னை ஆழ்வார்பேட்டை சென்மேரிஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்தது. 1990 முதல் 1996-வரையிலும் இந்தியாவின் 10-வது தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி வகித்தவர். இவருடைய காலக்கட்டத்தில் இந்தியாவில் முதல்முதலாக வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் தில்லுமுல்லுகளை கட்டுப்படுத்துவதில் எடுத்த முனைப்பான நடவடிக்கைகளால் பெரிதும் பாராட்டுகளை பெற்றவர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் டி.என்.சேசன்

வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் செலவு செய்ய வேண்டிய அதிகபட்ச தொகை குறித்த கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.மேலும் ராமன் மகசேசே விருது, மற்றும் அலகாபாத் பல்கலைக்கழகம் வழங்கிய எல்.எல்.டி. பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவரது உடல் இன்று மாலை சென்னை பெசன்ட் நகரிலுள்ள மின் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தார்.

fact checkhistoryTamilnadu

திருக்குறளில் இந்து கடவுள்கள் பெயர் இருப்பதாக பதிவிட்ட எச்.ராஜா.. உண்மை என்ன?

தமிழக பாஜக கட்சியின் டுவிட்டர் பக்கத்தில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக இணையத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தமிழக பாஜக திருவள்ளுவரை அவமானப்படுத்திவிட்டது. அவருக்கும் கூட மத சாயம் பூசிவிட்டது என்று குறிப்பிட்டு பலர் இணையத்தில் தமிழக பாஜகவிற்கு எதிராக டிவிட் செய்து வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சாணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பல்வேறு கட்சித்தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதற்கு பாஜகவே காரணம் என்ற குற்றச்சாட்டையும் அரசியல்வாதிகள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வைத்து வருகிறார்கள்.

இதற்கிடையே நேற்று டிவிட்டரில் கீழ்காணும் பதிவை பகிர்ந்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, திருக்குறளில் இந்து மத கடவுள்கள் பெயர் இருப்பதாக கூறினார்.

எச்.ராஜா பகிர்ந்துள்ள அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள குறள்களை நாம் நியூசு தரப்பில் வாசித்து அதன் பொருள் விளக்கத்தை ஆராய்ந்தோம். அதில் எச்.ராஜாவின் பதிவில் கூறியதை போல் எந்த இந்துமத கடவுள்களின் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்பது உறுதியாகிறது.

எச்.ராஜா குறிப்பிட்டுள்ள குறள்களையும் அதன் விளக்கத்தையும் தற்போது காண்போம்.

குறள் 610:

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு

பொருள்:

சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

குறள் 1103:

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு

பொருள்:
தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?.

குறள் 84:

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.

பொருள்:

மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.

குறள் 167:

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்.

பொருள்:

செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.

குறிப்பு: திருமகள் என இக்குறள்களில் செல்வத்தையே வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

குறள் 179:

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு

பொருள்:

பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.

குறள் 519:

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

நினைப்பானை நீங்கும் திரு

பொருள்:

எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்.

குறள் 617:
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.

பொருள்:
ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள். திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.

குறள் 920:
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு

பொருள்:
இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும்.

குறள் 1062:
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்

பொருள்:
பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.

குறள் 25:
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

பொருள்:
புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும்ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

குறள் 269:
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்

பொருள்:
எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.

குறள் 326:
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.

பொருள்:
கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.

குறள் 765:
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.

பொருள்:
உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்.

குறள் 1083:

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு

பொருள்:
கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை.

குறள் 1085:
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து

பொருள்:
உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே.

இத்தனை குரள்களிலும் திருமால், இந்திரன், எமன், ப்ரம்மதேவர் என்ற பெயர் ஒரு இடத்தில் கூட வரவில்லை. மரணம் குறித்து வரும் இடத்தில் எல்லாம் எமன், கூற்றுவன் என பொருளறிஞர்கள் விளக்கம் எழுதியுள்ளனர். ஆனால், வள்ளுவர் எமன் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லக். இந்து மதத்தினர் எமன் என்பதை போல், இஸ்லாமியர்கள் உயிர் எடுக்கவரும் வானவரை இஸ்ராயீல் என அழைக்கிறார்கள். அதே போல், சில இடங்களில் பொருளறிஞர்கள் கடவுள் குறித்து வரும் இடத்தில் திருமால், இந்திரன் என்னும் சொற்களை புரிதலுக்காக பயன்படுத்தியுள்ளார்கள். காரணம், இந்துக்கள் அதிகமுள்ள சமுதாயத்தில் அவர்களது தெய்வங்களை குறிப்பிட்டால் தான் புரியும் என்ற காரணத்தால் கூட இருக்கலாம். மேலும், பொருளறிஞர்களும் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களாக உள்ளதாலும், அதன் தாக்கம் இருந்திருக்கும். மாறாக வள்ளுவர் எழுதியுள்ள குறலில் எச்.ராஜா குறிப்பிட்டதை போல் எந்த மதத்தின் கடவுள் பெயரும் இல்லை என்பதே தெளிவாகிறது.

இந்து மத வேதங்கள் பலவும், பிறப்பின் அடிப்படையில் நால் வர்ண ஏற்றத்தாழ்வை முன்வைக்கின்றன. அப்படி இருக்கையில் எச்.ராஜா கூறுவதை போல், திருக்குறள் இந்துமத கருத்தை பிரதிபலிப்பதாக இருந்தால், அவர் பிறப்பால் அனைவரும் சமம் என்ற சமுத்துவ கருத்தை வலியுறுத்தும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளை எழுதி இருக்க மாட்டார்.

historyTamilnadu

இன்னைக்கு என்ன நாள் தெரியுமா..?

இன்றைய நாளான, இந்த நவம்பர் 1-ஆம் தேதியை, தமிழ்நாடு நாள் என முதல் முறையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தலைமைச் செயலகம் ஒளிரும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

1956-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் இருந்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மொழிவாரி அடிப்படையில் பிரிக்கப்பட்டன. இதனையடுத்து அந்த நாளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள், அம்மாநில தினமாக கொண்டாடி வருகின்றன.

மேலும் நவம்பர்-1 தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து நவம்பர் ஒன்றாம் தேதி, தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என கடந்த ஜூலை மாதம் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்நாளை கொண்டாட பத்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, கடந்த 21-ஆம் தேதி, அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதனையடுத்து தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டபேரவை, நுழைவாயில் முழுவதும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இந்நாளை கொண்டாடும் விதமாக, நவம்பர் 1-ஆம் தேதி அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் கவியரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

articlehistoryTamilnadu

99 வயதான பத்மஸ்ரீ விருதுபெற்ற யோகா பாட்டி கோவையில் உயிரிழந்தார்

இயலாமை என்பது முதுமையின் அடையாளம். ஆனால் தனது அடையாளத்தையே மாற்றி யோகா பயிற்சி மூலம் தன் மனதின் இளமையை உலகிற்கு வெளிச்சமிட்டவர் 99வயது மூதாட்டி நாநம்மாள்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ஆம் ஆண்டு பிறந்த நாநம்மாள், இளம் வயதிலேயே தனது தாத்தாவிடம் இருந்து யோகாவை பயின்றார். சிறு வயது முதலே நாள்தோறும் யோகா பயிற்சி செய்து வந்த நாநம்மாள் 50க்கும் மேற்பட்ட ஆசனங்களில் கைத்தேர்ந்தவர். மன வலிமைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் யோகா இன்றியமையாத ஒன்றாக திகழும் நிலையில், யோகா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் சென்றார் நாநம்மாள்.

யோகா மீதிருந்த அதீத ஆர்வத்தால், ஓசோன் பயிற்சி மையத்தை நிறுவி, நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு குருவாக திகழ்ந்தார். இவரிடம் யோகா பயின்ற 600க்கும் மேற்பட்டோர் தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் யோகா பயிற்சியாளர்களாக வலம் வருகின்றனர். இவரது குடும்பத்தில் மட்டும் 36 யோகா பயிற்சியாளர்கள் இவரைக் கொண்டு உருவாகியுள்ளனர். தான் பயின்ற யோகா கலையை கடந்த 45 ஆண்டுகளாக 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு கடத்தி இருக்கிறார் இந்த 99 வயது சாதனை மூதாட்டி…

எண்ணற்ற மாணவர்களுக்கு குருவாக திகழ்ந்த இந்த மூதாட்டி மாணவர்களுக்கு மத்தியில் யோகா பாட்டி என்றே செல்லமாக அழைக்கப்பட்டார். நாநம்மாளின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக கடந்த 2016ம் ஆண்டு சக்தி புரஷ்கார் விருது வழங்கி கவுரவித்தார் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி.

நாநம்மாளின் கலையை கண்டு வியந்த கர்நாடகா அரசு, அவருக்கு யோகா ரத்னா விருதையும் வழங்கியது. தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு நாட்டின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார் நாநம்மாள்..

பல்வேறு தேசிய அளவிலான தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் வென்ற நாநம்மாள், தள்ளாத வயதிலும் யோகா பயிற்சியில் ஈடுபட்டது உலகையே வியக்க வைத்தது. 40, 50 வயதுகளிலேயே மாத்திரை மனிதர்களாக வலம் வரும் இந்த காலத்தில், ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு யோகாவின் உதவியால் 90 வயதுகளை கடந்தும் பூரண நலத்துடன் வாழ்ந்து வந்தார் நாநம்மாள்.

இந்நிலையில் தனது மகன்களோடு கோவை கணபதி பகுதியில் வசித்து வந்த அவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்டிலில் இருந்து தவறி விழுந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நாநம்மாள் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி காலம் ஆனார்..!

99 வயதிலும் யோகாவை உயிர் மூச்சாக கருதிய நாநம்மாள் தனது கலையின் மூலம் காலம் கடந்தும் வாழ்வார் என்பதே நிதர்சனம்..!!

BackgroundhistoryPoliticsTamilnadu

ராஜீவ் காந்தியை கொல்லவில்லை என்ற பிரபாகரன்… கொன்றோம் என பேசிய சீமான்!

“ராஜீவ் காந்தி படுகொலை – எங்கள் மீது சுமத்தப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டு” என்றார் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன். அதேபோல் விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் பிரபாகரன் கருத்தையே முன்மொழிந்தார்.

ஆனால் (12.10.2019), விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொன்றோம்” என்கிறார். ‘நாங்கள்’ என்னும் போது அதில் யார் யார் அடக்கம்?

தமிழர்கள் சேர்ந்து ராஜீவ் காந்தியை கொன்றதாக கூறுகிறார். அந்த ‘தமிழர்கள்’ யார்? ராஜீவ் காந்தியை கொலை செய்தது விடுதலை புலிகள் தான் என்று அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைக்கும் பாஜகவின் சுப்ரமணியசாமி போல், சீமான் விடுதலை புலிகள் மீது மீண்டும் இக்குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

காணொளி: வீடியோ

தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ராஜீவ் காந்தி படுகொலையை குறித்து எதற்காக சீமான் வலிந்து பேசுகிறார்?

18.10.2019 முதல் 21.10.2019 ஆம் தேதி வரை விடுதலை புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமா? இல்லையா? இந்த அறிவிப்பை நீடிக்கச் செய்வதா? விலக்கு அளிப்பதா? என நீதிமன்றத்தில் விசாரணை நடக்க உள்ளது. இந்நிலையில் மீண்டும் இவ்வாறு பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் சீமான்.

ஏற்கனவே ஈழப்போரில் கொல்லப்பட்ட தமிழர்கள் குறித்து சர்வதேச விசாரணை நடைபெற்ற மன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகள் ஒருங்கிணைப்பாளராக இருந்த பால் நியூமன் சமர்ப்பித்த 41 பக்க அறிக்கைகளில் 40 வது பக்கத்தில், விடுதலை புலிகளின் எதிர்ப்பாளர்கள் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகளும் இருந்தன.

சிறுவர் சிறுமிகளை பெற்றோர்களிடம் இருந்து விடுதலை புலிகள் இயக்கம் பிரித்து கட்டாயமாக இயக்கத்தில் சேர்த்தனர் என்றும், பெண்களுக்கு கட்டாய கரு கலைப்பு செய்யப்பட்டு போருக்காக பயன்படுத்தப்பட்டனர் என்றும் அவ்வறிக்கை கூறியது. நாம் தமிழர் கட்சி கூறியிருந்த இந்த குற்றச்சாட்டு மேலும் அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால் சீமான், ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்று சமாளித்தார். தனது கட்சியில் இருந்த இளைஞர்களிடம், ‘அரசியல் எதிரிகள் நம்மை பிரிக்க கையாளும் சதி’ என்றார்.

நேற்று (12.10.2019) தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ‘நாங்கள் தான் ராஜீவ் காந்தியை கொன்றோம்’ என எதற்காக பேசினார்? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘தமிழர்கள் தான் ராஜீவ் காந்தியை கொன்றார்கள்’ என கூறி சர்வதேச அரசியல் படுகொலையை தமிழர்கள் மீது சீமான் திணிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

– தமிழச்சியின் முகநூல் பதிவின் ஒரு பகுதி

hiddenhistoryIndiaPolitics

குஜராத் படுகொலைக்கு அமைதி காத்த கலைஞர் – வைரலாகும் 2002 கட்டுரை

குஜராத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த நேரம், மோடி தலைமையில் இருந்த பாஜக அரசை குற்றம்சாட்டி உலகமே கண்டனம் தெரிவித்து கொண்டிருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தன. தி.மு.க. இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.

அன்றைய காலகட்டத்தில் பழம்பெரும் நடுநிலை கட்சி சார்பில்லாத “முஸ்லிம் முரசு” ஜுன் 2002 இதழின் தலையங்கத்தின் ஒரு பகுதியை காயிதே மில்லத் அவர்களின் பேரன் தாவூத் மியா கான் முகநூலில் பகிர்ந்துள்ளார்.

கலைஞரும் காதர்மைதீனும்

“குஜராத் கலவரம் பற்றி திமுக தலைவர் கலைஞர் அவர்களின் செயல்பாடு அவ்வளவு வரவேற்கத்தக்கதாக இல்லை. தன்னை சிறுபான்மையினரின் காவலர் என்று பட்டம் சூட்டிக் கொண்ட கலைஞரிடமிருந்து முஸ்லிம் சமுதாயம் அதிகமாக எதிர்பார்த்தது.

பொதுவாக அமெரிக்கா, ஐரோப்பிய அரசுகள் குஜராத் கொடூரத்தை கண்டித்து விறகு கட்டைகளைப் போல் முஸ்லிம்கள் எரிக்கப்படுவதை பகிங்கரமாகக் கண்டனம் தெரிவித்தன. ஆனால் முஸ்லிம்களுக்கு அனுசரணையாக இருக்க வேண்டிய கலைஞர்,தன் கண்டனத்தை எங்கு எப்படித் தெரிவித்தார்?

….பா.ஜ.க.வின் நிலைப் பாட்டைக் கண்டிக்கவில்லை மோடியை பதவி விலகச்செய்ய வேண்டும் என்று கூறவில்லை. பார்லிமெண்டில் மக்கள் சபை விவாதத்தில் உங்கள் கட்சியின் நிலை என்ன? என்று கேட்ட போது அது பற்றி தே.ஜ.கூட்டணி கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்று கூறினார். செ. குப்புசாமி மட்டும் பத்திரிக்கையாளர்களிடம் மோடி பதவி விலக வேண்டும் என்பதைக் குறிப்பிட்டார். ஆனால் அமைச்சர் மாறனோ அல்லது வேறு எந்த உறுப்பினரோ – கலைஞர் உட்பட வாய்மொழி மௌனியாக இருந்ததேன்? பா.ஜ.க. வின் நிலைப்பாட்டை ஆதரித்ததேன்? குறைந்த பட்சம் சந்திரபாபு நாயுடுக்கு இருக்கும் உணர்வு கூட கலைஞருக்கு இல்லாமல் போனது ஏன்? வாக்கெடுப்பில் பா.ஜ.க.வை ஆதரித்து வாக்களித்தன் மூலம் குஜராத்தில் பா.ஜ.க. அரசின் நடைமுறைகளை அரசு சார்பில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதை கலைஞர் ஏற்றுக்கொள்கிறாரா?

….குஜராத்தின் கொடூரங்களை தே.ஜ.கூட்டணியின் உறுப்பினர்கள் மணக்கசப்பைத் தெரிவித்ததோடு கடுமையான எதிர்ப்பையும் தெரிவிக்கிறதே? தமிழகத்தின் நிலைப்பாடு என்ன என்று கேட்டால் அந்தக் கட்சிகளின் மாநிலங்களுக்கு அருகில் குஜராத் இருப்பதால் அவர்கள் கண்டித்தனர் என்று கூறி நழுவி விட்டார். இப்படி கொடூரமான படுகொலைகளைக் கண்டிக்கக்கூட, குஜராத்திற்கு எவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும் என்றும் தூரத்தை கலைஞர் நிர்ணயித்துள்ளார். இதுதான் கலைஞரின் மனித உரிமை சட்டம் போலும். ஒவ்வொரு முஸ்லிம் விரோத சம்பவங்கள் நடக்கும் போது மௌனமாக இருப்பது தான் சாணக்கியம் என்று கலைஞர் கருதுகிறார்.

ஒரு சந்திரபாபு நாயுடு, ஒரு ராம்விலாஸ்பஸ்வான், ஒரு உமர் அப்துல்லா ஆகியோருக்கு இருந்த உளப்பபூர்வமான சிறுபான்மை ஆதரவு கலைஞரிடமிருந்து ஏன் வெளிப்படவில்லை? ஏதாவது ஏடாகூடாமாக அறிக்கை வெளியிட்டால் மாறனுக்கும், பாலுவுக்கும் பதவி பறிபோய்விடும்……

….காயிதே மில்லத்திற்கு பிறகு வந்த எந்த முஸ்லிம் தலைவரும், முஸ்லிம் சமுதாயத்திற்காக உழைத்தார்கள் என்று சொல்ல எந்தச் சுவடும் இல்லை.

….துரதிர்ஷ்டவசமாக காயிதே மில்லத்திற்குப் பிறகு நமக்கு வாய்த்த தலைமை நம் சமுதாயத்தைப்பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாதவர்கள் என்றால் மிகையாகாது.

யாராவது காயிதே மில்லத் காலத்திய முஸ்லிம் லீக்கை பார்த்தால்,அழைத்து நம் சமுதாயத்திடம் ஒப்படையுங்கள். இந்த சுயநல முஸ்லிம் அரசியல் வாதிகளிடமிருந்து தமிழக முஸ்லிம்களை எல்லாம் வல்ல இறைவன் காத்தருள்வானாக.”

நன்றி: முஸ்லிம் முரசு

historyPolitics

யார் இந்த திருமாவளவன்? அரசியல் பயணம்

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த சூழலில், திருமாவளவனின் அரசியல் பயணத்தை பின்நோக்கி சென்று பார்க்கலாம்.

1982ம் ஆண்டு அம்பேத்கரின் மனைவி சவீதா தமிழகத்தில் தலித் பாந்தர் இயக்கத்தை நிறுவியபோது அதில் தன்னை இணைத்துக்கொண்டார் திருமாவளவன்.

தலித் பாந்தர் அமைப்பின் தமிழக அமைப்பாளராக இருந்த மலைச்சாமி 1989ல் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த இயக்கத்தின் மாநில அமைப்பாளராக திருமாவளவன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் அந்த இயக்கத்தின் பெயரை விடுதலை சிறுத்தைகள் என மாற்றிய திருமாவளவன், மதவாதம், சாதியவாதத்திற்கு எதிராக போராடத் தொடங்கினார்.

1999ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவெடுத்த திருமாவளவன், அதற்காக தனது அரசுப்பணியை துறந்தார்.

அந்த தேர்தலில் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் அதில் தோல்வியை தழுவினார்.

பின்னர் 2001 சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பாக கடலூர் மாவட்டம் மங்கலூர் தொகுதியில் போட்டியிட்டு திருமாவளவன் வெற்றி பெற்றார்.

2004 மக்களவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட அவர், அதிலும் தோல்வியை தழுவினார்.

பின்னர், 2009 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில், அதே சிதம்பரம் தொகுதியில் களமிறங்கிய திருமாவளவன், இம்முறை பாமக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

அதனை தொடர்ந்து 2014 மக்களவை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட திருமாவளவன், அதிமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.

2016 சட்டப்பேரவை தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட அவர், வெறும் 83 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இந்த மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியை திமுகவிடம் கேட்டு போட்டியிடும் திருமாவளவன் 2வது முறையாக அந்த தொகுதியின் எம்.பியாக வெற்றிவாகை சூடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

HeadlineshistoryIndia

கோட்சே RSS அமைப்பை சேர்ந்தவரா? இல்லையா?

இன்று மகாத்மா காந்தியின் 71ஆம் ஆண்டு நினைவு நாள். அவரை கொலை செய்தவர் நாதுராம் கோட்சே. அவர் தனது கையில் இஸ்மாயில் என பெயரில் பச்சைக்குத்தி காந்தியை கொலை செய்தார்.

பாஜக-வினர் எப்போதும் கோட்சே RSS அமைப்பை சேர்ந்தவர் இல்லை என்று கூறுவதை பார்க்கலாம்.

ஆதவது அதன் உண்மை என்னவென்றால், நாதுராம் கோட்சேவுடைய தம்பியும்,காந்தியை கொலை செய்ய கோட்ஷே உடன் சதி செய்தவருமான ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்ஷே ஜனவரி 1994-ல் FRONTLINE இதழ் பேட்டியில் கூறியதாவது:

 “காந்தியின் கொலை வழக்கில் உள்ள  நான், நாதுராம், தட்டார்யா, கோவின்ந்  என எல்லோருமே RSS அமைப்பை சேர்ந்தவர்கள். நாங்கள் எங்கள் வீட்டில் வளர்ந்ததை விட அதிகமாக RSS-இல் தான் வளர்ந்தோம். RSS எங்களுக்கு குடும்பம் போன்றது. நாதுராம் கோட்சே பெரிய அறிவுமிக்கவராக இருந்தார். கோல்வார்க்கரும், RSS அமைப்பும் காந்தியின் கொலையால் நிறைய பிரச்சனைகள் உண்டாகக்கூடும் என்பதால் அவர் அமைப்பை விட்டு விலகுவதாக கூறினார். ஆனால் அவர் RSS-யை விட்டு விலகவே இல்லை.

இதற்கு முன்னதாக 1993ஆம் ஆண்டு ”நான் ஏன் காந்தியை கொன்றேன்” என்ற புத்தகத்தை எழுதி அவர் வெளியிட்டார். மேலும் RSS அமைப்புக்கும் காந்தியின் கொலைக்கும் தொடர்பு இல்லை என பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியதற்கு கோப்பால் கோட்சே அதற்கு மறுப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

articleHeadlineshistory

முல்லை பெரியாறு தெரியும்… பென்னிக்குவிக் தெரியுமா?

1876 களில் தமிழகம் கடும் வறட்சியில் வாடிய காலம். பஞ்சம் தலைவிரித்து ஆட லட்சக்கணக்கானோர் பசிக்கொடுமையால் மண்ணுக்கு இறையாயினர். சப்தமே இல்லாமல் நிகழ்ந்த மாபெரும் அழிவு. வறட்சி காலத்தில் ஒரு பக்கம் சாரை சாரையாக மக்கள் செத்து விழுந்து கொண்டிருக்க தென் மேற்கு பகுதிகளில் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய வௌள நீர் மக்களை மூழ்கடித்தது.
ஒரு பக்கம் வறட்சி இன்னொரு பக்கம் வௌளநீர். இது இரண்டையும் சமாளிக்க அப்போதைய பிரிடிஷ் அரசாங்கம் தீவிரமாக மண்டையை கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தது. தென்னிந்தியாவின் பிரச்சனைகள் லண்டன் பத்திரிக்கைகளை நிரப்பின. விமர்சனங்களால் செய்வதறியாது விக்கித் திணறியது ஆங்கிலேயே அரசு.
ஒரு வழியாக நீண்ட போராட்டத்திற்கு பின் 1882 ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலையில் அணை கட்ட முடிவெடுக்கப்பட்டது.
அணை கட்டும் பொறுப்பு பொறியாளர் ஜான் பென்னிக்குவிக்கிற்கு வழங்கப்பட்டது.
எழுத்துக்களால் விவரிக்க முடியாத ஓர் உச்ச கட்ட புராஜக்ட் அது. இன்றையை நவீன கால தொழில்நுட்பத்தை வைத்து கூட அதனை எளிதில் செய்து விட முடியாது..! ஆம் மேற்கு திசையில் ஓடி அரபிக் கடலில் வீணாக உப்புநீராக கலக்கும் அந்த ஆற்றை கிழக்கு பக்கமாக திருப்பி விட்டு வங்கக்கடலில் சேர்க்க வேண்டும்.. சேர்த்தால்..? சேர்த்தால் போதும்..! வழியில் இருக்கும் அத்தனை ஊர்களும் செழிக்கும்..
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என 5 மாவட்டங்கள் 244 கிலோ மீட்டர் ஓடி காலா காலத்துக்கும் பல கோடி மக்களின் தாகத்தை தீர்க்கும்..!
ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. நீர் வழித்தடம் இல்லாததால் மலைகளை குடய வேண்டும். மலைகளை குடைவது,அதுவும் அந்த காலத்தில் செய்யமுடியாத காரியம். பல கட்ட உழைப்புக்கு பின் ஒரு வழியாக மலையை குடைந்து பாதையும் அமைக்கப்பட்டது.  இன்று சொகுசாக தேக்கடியில் படகு சவாரி செய்ய காரணம் பென்னிகுவிக் அன்றைக்கு தண்ணீரை திருப்பிவிட்டது தான்..
நீண்ட திட்டமிடுத்தலுக்குப் பிறகு செப்டம்பர் 1887 பொறியாளர் பென்னிகுவிக் 3000 தொழிலாளர்களுடன்  அணை கட்ட களத்தில் இறங்கினார்.175 அடி உயரத்துக்கு அணை எழுப்ப வேண்டும். வெளி உலகத்துடன் மிக எளிதாக தொடர்பு கொள்ள முடியாது. அடர்ந்த வனம்,கடும் குளிர், சில நேரங்களில் தொடர் மழை, அதன் காரணமாக பரவிய காலரா, மலேரியா போன்ற நோய்கள். அது போக யானை, கரடி, புலி, பாம்பு உள்ளிட்ட உயிர் கொல்லிகள் என பெரும் சவால்களுக்கு மத்தியில் மும்முரமாக நடைபெற்றது அணை கட்டும் வேலை.
இக்கடும் சவால்களை சந்திக்க முடியாமல் பலர் இறந்து போயினர்.  ஒரு நாள் திடீரென ஏற்பட்ட மழை வெள்ளம் நிச்சயம் அங்குள்ளவர்களுக்கு நெஞ்சு வழியை ஏற்படுத்தியிருக்கக் கூடும். அதற்குக் காரணம் பாதி அளவு கட்டப்பட்ட அணை தரமட்டமாகி பென்னிக்குவிக்கின் தலையில் இடியாய் விழுந்தது. கொத்து கொத்தாக மக்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர்.   நீண்ட நாள் கனவு ஒரேயொரு மழையால் அடையாளமின்றி அழிக்கப்பட்டது.
செய்வதறியாது திகைத்து நின்றனர் தமிழர்கள்..
கடும் துயரத்திற்கு ஆளான பென்னிகுவிக்கின் இடத்தில் ஓர் சாமானியன் இருந்திருந்தால் தன்னை தானே நொந்துகொண்டு தூக்கில் தொங்கியிருப்பான். ஆனால் பென்னிக்குவிக் ஓர் அதிசயப் பிறவி. உடனே அவர் மெட்ராஸ் புறப்பட்டு வந்து தனது அதிகாரிகளிடம் நடந்ததை விவரித்தார். புரிந்து கொள்ளாத அதிகாரிகளுக்கு பென்னிக்குவிக் வில்லனாக தெரிந்தார். மீண்டும் நிதி வரவழைத்து அணை கட்ட முயற்சிப்போம் என பென்னிகுவிக் மனம் தளராமல் உதிர்த்த வார்த்தைகளை எள்ளி நகையாடி பைத்தியக்கார பட்டம் சூட்டினர் ஆங்கிலேயர்கள்.
கண்ணெதிரே உயிரை விட்ட பெயர் தெரியாத ஆயிரம் தமிழர்களுக்காக தலையை அடமானம் வைத்தாவது மீண்டும் கம்பீரத்துடன் அணையை எழுப்ப வேண்டும் என முடிவெடுத்தார் பென்னிக்குவிக். அதற்காகவே வேகமாக
இங்கிலாந்து பறந்தார். தன்னிடம் இருந்த சொத்துக்களை விற்றார். (ஒரு சில ஆய்வில் தனது படுக்கை மெத்தையையும் விற்றதாக உள்ளது) ஓரளவு பணம் தேரியதும் மீண்டும் அணையை கட்ட திட்டமிட தொடங்கினார். இந்த முறை இயற்கையிடம் தோற்று விட கூடாது என மனதில் தீராத வெறி இருந்தது. ஆம் உண்மையில் அது இயற்கைக்கும் பென்னிகுவிக்குமான பலப்பரீட்சை அது.!
பருவ மாற்றங்கள் அறிந்து வேலையை செய்யத்தொடங்கினார் பென்னிக்குவிக். அவரது போராட்ட குணம் வீரத்தமிழர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. படிக்காதவர்களாக இருந்தாலும் முடிந்தளவு உயிரை மாய்த்தாவது எதிர்கால சந்ததிகளுக்காக இரவு பகல் பாராமல் உழைப்பை கொட்டினார். கரம் கோர்த்து வேலை செய்தனர்.மெல்ல மெல்ல அணை எழும்பியது. இம்முறை வெள்ளம் வந்தால் மனித கேடயமாக மாறுவதற்கு கூட எம்மக்கள் தயங்கவில்லை.
8 வருட கால நீண்ட போராட்டத்திற்கு பின் ஒரு வழியாக 1895 ஆம் ஆண்டு கம்பீரமாக எழுந்து நின்றது முல்லைப் பெரியாறு அணை..! அதை பார்த்து பார்த்து தேம்பி அழுதார் பென்னிகுவிக்.. விடா முயற்சிக்கும் தீராத போராட்ட குணத்துக்கும் கிடைத்த ஓர் மாபெரும் வெற்றி.. தனது திட்டம் நிறைவேறி தமிழகம் செழிக்க வேண்டும் என்பதற்காக போராடிய அவரது முயற்சிக்கு வெகு விரைவிலேயே பலன் கிடைத்தது. இன்று வரை எண்ணிலடங்கா மக்கள் அவர் திருப்பிய தண்ணீரை அருந்தி விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். தேனி சுற்று வட்டார பகுதிகளில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல பேருடைய பெயர்கள் பென்னிகுவிக் என்று தான் சூட்டப்பட்டுள்ளது. ஆம் அணை கட்டிய அன்றில் இருந்து இன்று வரை பென்னிக்குவிக் தான் அவர்களின் மாபெரும் சரித்திர நாயகன்..!!
(ஜனவரி 15 நேற்று முன்தினம் அவரது 148 ஆவது பிறந்தநாள். தேனியில் அவரது பிறந்தநாளை விழா நடத்தி கொண்டாடியதாக செய்தி கிடைத்தது. அவரை தேட முயற்சித்தேன்.அவரது போராட்ட வாழ்வு கண்களில் நீரையே தேங்க வைத்து விட்டது. பென்னிக்குவிக் ஓர் inspiration..! )
~ அஷ்பாக் அஹமத்