article

articleMedia Critics

OLD IS GOLD – தாக்கத்தை ஏற்படுத்தும் தாமத செய்திகள்!

ஒரு பதிவு வெளியிட்டால் உடனே பழைய செய்தி என கருத்திடும் அறிவு ஜீவிகளின் கவனத்திற்கு…

காஷ்மீர் சிறுமி ஆஷிபா பாலியல் படுகொலை செய்யப்பட்ட செய்தி 3 மாதங்களுக்கு பிறகு தான் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பானது. அந்த நேரத்தில் அதை பழைய செய்தி என கடந்துவிட முடியுமா?

நீட் ஆள்மாறாட்ட சம்பவம் நடந்து பல மாதங்களுக்கு பிறகு தான் அது வெளியாகி வைரலானது. அந்த பையன் கல்லூரியிலேயே சேர்ந்துட்டான். பழையத ஏன் பேசுறன்னு கடந்து சென்றிருந்தால் இன்று அப்படி ஒரு மோசடி பற்றி யாருக்கும் தெரியாமலே போயிருக்கும்…

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா நிறுவன படுகொலை செய்யப்பட்டது 9-ம் தேதி. அப்போது சிறிதாக செய்தி வெளியாகி கடந்துபோனது. ஆனால், 15-ம் தேதி அது மீண்டும் வைரலாகி நாட்டையே உலுக்கியது. அதை பழையது என்று கடந்து சென்றிருக்க முடியுமா?

சிரியாவில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து குழந்தைகள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனால், அது கடந்த ஆண்டு தான் தமிழகத்தில் பெரிய அளவில் விவாத பொருளானது. 7 வருட பழைய செய்தி என அதை கடந்திருக்கலாமா?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்து பல நாட்களுக்கு பின் சமூக வலைதளங்களில் வெளியாகி அதன் பிறகே தொலைக்காட்சி செய்திகளில் வந்தது. அது பழைய செய்தி என கடந்து சென்றுவிடலாமா?

அருப்புக்கோட்டையில் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து பல நாட்களுக்கு பிறகே அது நக்கீரனில் வெளியானது. அதற்கு சில நாட்கள் கழித்தே தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதை பழைய செய்தி என்று பெரிதுபடுத்தாமல் விட்டிருந்தால் அந்த சம்பவம் இந்த அளவு வெளியில் தெரிந்து இருக்குமா?

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கி ஒருவாரம் கழித்து தான் ஊடகங்களில் அது பேசு பொருளானது. அது பழைய செய்தியா?

மீத்தேன், ஹைட்ரோகார்பன் போராட்டங்களும் தொடங்கி பல நாட்கள் கழித்தே செய்தியாக்கப்பட்டன. அதை பழையது என விட்டுவிட முடியுமா?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடங்கி பல நாட்களுக்கு பிறகே ஊடகங்களில் அது தலைப்புச் செய்தியானது. அதை பழைய செய்தி என்று விட்டிருக்க முடியுமா?

ஒருவர் பழைய தகவல்களை நினைவூட்டலுக்காக பகிரலாம். அல்லது, பலருக்கும் தெரியாத ஒன்றை தெரியப்படுத்துவதற்காக இருக்கலாம். நடவடிக்கை எடுக்கப்படாத குற்ற சம்பவத்தை மீண்டும் வைரலாக்கி நெருக்கடி கொடுப்பதற்காக இருக்கலாம். அல்லது நடப்பில் பரபரப்பாக உள்ள ஒரு செய்திக்கு தொடர்புடைய பழைய செய்தி சில மாதங்கள், ஆண்டுகளுக்கு முன் வெளியாகி இருக்கலாம். அதன் பின்னணியை தெரியப்படுத்துவதற்காக பகிர்ந்து இருக்கலாம்.

எனவே ஒருவர் ஒரு பழைய தகவலை பகிர்ந்து இருந்தால், அவர் அதை பகிர்ந்ததற்கான நோக்கத்தை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். அல்லது பகிர்ந்தவரிடம் அது குறித்து கேளுங்கள். அதை விடுத்து சாதாரணமாக பழைய செய்தி என கமெண்ட் செய்து அந்த பதிவின் தரத்தை குறைத்துவிடாதீர்கள். உடனடியாக பூதாகரமாகும் செய்திகள் கூட அப்படியே அடங்கிவிடுகின்றன. ஆனால், தாமதமாக வெளியாகும் இதுபோன்ற செய்திகள் தான் விவாதப்பொருளாகி மக்கள் மனதில் பதிகின்றன.

எனவே, உங்கள் புத்திசாலித்தனத்தை காட்டும் இடம் இதுவல்ல.

articleBackgroundTamilnadu

மருத்துவர் போராட்டம் மக்கள் நலனுக்கு என புரியாமல் திட்டும் பேஸ்புக் போராளிகள்..!

இத படிக்கும் போதே சுர்ர்ர் ன்னு…கோவம் தலைக்கேறி….”ச்ச.. நோயாளிகள் எவ்ளோ கஷ்டப்படுவாங்க !! இந்த டாக்டருங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா”-ன்னு நினைக்கும் நபர் நீங்களாயின்

இதோ…
1.அவசர சிகிச்சை பிரிவு
2.மகப்பேறு மற்றும் சிசு மருத்துவம்
3.காய்ச்சல் பிரிவு

ஆகிய மூன்றும் இந்த நொடி வரை, தங்கு தடையின்றி,போராட்டம் முழு வீச்சில் இருக்கும் பொழுதும் எவ்வித பாதிப்பும் இன்றி இயங்கிக் கொண்டே இருக்கின்றன….இந்த 3 பிரிவுகளும் உயிர் காக்கும் பிரிவுகள் என்பதாலும்,மருத்துவர்கள் சினிமாவில் காமிக்கும் அளவிற்கு மனித நேயம் அற்றவர்கள் இல்லை என்பதாலும் எங்கள் பணி இந்த பகுதிகளில் என்றும் போல 100% சிறப்பாக செயல்பட்டே வருகிறது.

சோ,கோவம் போய்டுச்சா….இன்னும் கொஞ்சம் இருந்தாலும் பரவால்ல…வாங்க..கடைசி வரி படிக்குறப்ப போய்டும்.

எதுக்கு டாக்டர் Strike லாம் ?? இவ்ளோ சம்பளம் வாங்குற நீங்களே strike பண்ணா தினக்கூலி க்கு மார் அடிக்கிறவன் லாம் எங்க போய் அழுவான் ??

அதாவது தலைவா….எங்க போராட்டத்தில் 3 முக்கிய கோரிக்கைகள் உண்டு.

கோரிக்கை 1:

அரசு மருத்துவர்களுக்கு முதுகலை(M.D/M.S) படிப்பிற்க்கான 50% இடஒதுக்கீடு மீண்டும் வேண்டும் என்றே.

2016 இல் NEET வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் இது இருந்துச்சு…அப்படின்னா என்ன டாக்டர்??

அதாவது ஒரு டாக்டர் 5 1/2 வருஷம் கஷ்டப்பட்டு MBBS படிச்சு முடிக்கிறார் ன்னு வெச்சிக்குவோம்…அவர் மேற்கொண்டு M.D/M.S படிக்க குறைந்த பட்சம் 2 வருடமாவது அதற்க்காக அவரை ஆயத்தம் செய்து கொள்ள வேண்டும்…எல்லாராலும் 2 வருஷம் வேலைக்கு போகாம உக்காந்து படிக்க முடியுமா ?? வீட்டு கஷ்டம்,தம்பி படிப்பு,அக்கா கல்யாணம் ன்னு பல வித குடும்ப சிக்கல்கள் காரணமா அவர் வேலைக்கு செல்ல வேண்டும்…அதனால அவங்க எல்லாரும் முதுகலை படிப்பு செய்ய அரசு ஒரு திட்டம் கொண்டு வந்துச்சு….என்னன்னா 2 வருஷம் உங்க பகுதியில நீங்க அரசாங்க மருத்துவரா வேலை செய்ங்க….2 வருஷம் முடிஞ்சதும் நீங்க முதுகலை படிப்பு படிக்க 50% இட ஒதுக்கீடு செய்து தரப்படும் அப்டின்றது தான்.

இதனால தன்னோட ஊருக்கே நிறைய மருத்துவர்கள் பணிக்கு செல்ல ஆரம்பிச்சாங்க,தான் சின்ன புள்ளையா இருக்கும் போது தன்னை தூக்கி வளத்த பாட்டியை அவன் வளர்க்க ஆரம்பிச்சான்….தன் பகுதி மக்களுக்கு என்னென்ன தேவை ன்னு சின்ன வயசுல இருந்தே பாத்த அனுபவம் இருந்ததால்,மருத்துவத்தோட சேர்ந்து அவன் போடும் ஊசியில் அன்பும் குருதியில் கலந்தது…

NEET வந்ததுக்கு அப்புறம் இந்த இடஒதுக்கீடு இல்லை…சோ,சொல்லுங்க…இனி எந்த டாக்டர் அரசாங்க உத்தியோகம் வருவான்…தாத்தா பாட்டிக்கு யார் அரவணைப்பா ஊசி போடுவாங்க ? இதுல மருத்துவன விட மக்களுக்கு தானே பாதிப்பு அதிகம்.!

கோரிக்கை 2:

சம்பள உயர்வு கேட்டு மருத்துவர்கள் போராடுவதா நிறைய பேர் தப்பா புரிஞ்சு வெச்சுருக்காங்க…நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

ஐய் டாக்டர்…இந்த கப்சா தான வேணாம்ன்றது !! அப்டி என்ன உங்களுக்கு நியாயமா சம்பளம் குடுக்கல சொல்லுங்க பாப்போம்.

அதாவது தலைவா…மத்திய அரசு(CENTRAL) கீழ் வேலை செய்யும் மருத்துவருக்கு வேலைக்கு சேர்ந்த 14 வருஷம் கழிச்சு 1.21 லட்சம்…ஆனால் தமிழக மருத்துவர் இதை எட்ட 7 ஆண்டு காலம் மேலும் காத்திருக்கணும்…அதாவது 21 வது வருடத்தில் தான் இவருக்கு 1.21 லட்சம் சம்பளம்…அந்த காலத்துக்கு அது வெறும் 20000 மதிப்பு மட்டுமே இருக்கும் என்பது இன்னொரு கொடுமை…இவங்க ரெண்டு பேருமே வேலைக்கு சேரும் பொழுது அவர்களின் சம்பளம் 56100 ரூபாய்.

சரி டாக்டர்…நீங்க 56100 ரூபாய் கம்மி ன்னு சொல்லுறதெல்லாம் உங்களுக்கு அநியாயமா தெரிலையா??

தலைவா…நீதிபதியின் கீழ் பணியாற்றும் எழுத்தரின் சம்பளம் எங்களின் சம்பளத்தை விட அதிகம்…அதுக்காக,அவர் செய்யும் தொழில் கம்மி ன்னு சொல்ல மாட்டேன்…எந்த விதத்துல நாங்க அதைக் கூட வாங்க முடியாத அளவுக்கு தாழ்ந்து போய்ட்டோம் ன்னு தான் கேக்குறேன்.

Mbbs 5 1/2 வருடம்…PG க்கு ஆயத்தம் 2 வருஷம்…PG 2 வருஷம்…இதெல்லாம் செஞ்சு ஏதோ ஒரு மூலையில் வேலைக்கு அமர்த்தப்படும் மருத்துவரின் சம்பளம் 56100 மட்டுமே.

ஆனா,எங்கள் படிப்பு தகுதிக்கு இணையான சப் கலெக்டர்,கமிஷனர் இவர்களின் ஆரம்ப சம்பளம் 85000 தாண்டி….இதில் அவங்களுக்கு சொந்த வீடு,சொந்த கார்,சகல வசதிகள் உண்டு.

நாங்க அதையா கேக்குறோம்..?? அவ்ளோ நோயாளிகளை பாத்துட்டு வீட்டுக்கு மன நிறைவா போகணும்…நம்ம செஞ்ச பணிக்கு தகுந்த ஊதியம் இந்த அரசாங்கம் குடுத்திருக்கு ன்னு ஒரு மன நிறைவு வேணும்…அதுக்கு தான் இந்த போராட்டம்.

கோரிக்கை 3:

இந்த டாக்டருங்க எல்லாரும் உங்களுக்காகவே போராடுறீங்களே ?? என்னைக்காச்சு மக்கள் எங்களுக்காக போராடுறீங்களா?

வெல்கம் தலைவா….கோரிக்கை 3…இதோ …எங்களை கண்டபடி Tv க்கு முன்னாடி உட்கார்ந்து கொண்டு திட்டிக்கொண்டிருக்கும் என் மக்களுக்காக.

நோயாளிகளின் வருகையை பொறுத்து மருத்துவர்களையும், செவிலியர்களையும் நியமிக்க வேண்டும் என்பது தான் கோரிக்கை நம்பர் 3.

ஒரு மாவட்ட மருத்துவமனை போல் இன்னொரு மாவட்ட தலைமை மருத்துவமனை இருக்காது….சென்னை மாநகர மக்கள்தொகைக்கும்,ஒரு சிறிய மாவட்ட மருத்துவமனைக்கும் ஒரே அளவில் மருத்துவர்களை நியமிக்கும் அபத்ததிற்கு எதிரான போராட்டம் இது…மக்களின் போராட்டம்.

எங்கள் எல்லாருக்கும் இருக்கும் ஆசை.

எல்லா நோயாளிகளிடமும் 10 நிமிடம் பேச வேண்டும்.

நோய் பற்றி,அவன் குடும்பம் பற்றி,அவன் விருப்பங்கள் பற்றி.

நோயுடன் சேர்த்து நல்மனதையும் நல்குபவனே மருத்துவன்…

ஆனால் ஒரே ஒரு மருத்துவன் தினமும் 400 மக்களை சந்திக்க வேண்டும் என்னும் நிலை ஏற்படும் பொழுது,இவை நடக்குமா என்ன ??

மருத்துவருக்கும்-மக்களுக்குமான நல்ல உறவை மேம்படுத்த வேண்டும் என்பதும் இந்த போராட்டத்தின் கோரிக்கை.

இதெல்லாம் நியாயம் தானே ??

இதெல்லாம் கேட்டா பணி நீக்கமாம் !!
நாங்க எடுத்த உடன் போராட்டம் செய்யல…இதெல்லாம் எங்கள் குறை ன்னு சொன்னதும்,அரசு 6 வார காலம் அவகாசம் கேட்டு,அதன் பின்பும் ஒன்றும் செய்யவில்லை என்ற ஆற்றாமையின் வெளிப்பாடு தான் இந்த போராட்டம்…இந்த பிரச்சனை போராட்டமாக மாற எடுத்துக்கொண்ட காலக்கட்டம் 2 வருடங்கள்.

தனியார் லாம் மோசம் ன்னு சொல்லுற நீங்க,நியாயமா உங்களுக்கும் சேர்த்து போராடும் அரசு மருத்துவனை சாடுவது ஏன் ?

ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்.

கத்தி பிடிக்கும் கைகளுக்கு நிதானம் மிக முக்கியம்….அவன் கத்தி அறுவை சிகிச்சையின் அற்புதம் செய்ய சீரிய மன நிலை அவசியம்…அந்த மன நிலையை அரசாங்கம் நல்குவதும் கூட ஒரு வித மக்கள் குறை தீர்வு முறையே.

எங்களுக்கு போராட்டம் வேண்டாம்…டெங்கு நோயாளி வருவான்…அவனை சரி செய்யத்தான் போராட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவரின் மனமும் ஏங்கும்.

குறைகளை நிவர்த்தி செய்யவும்…இல்லையேல் அரசு மருத்துவர்கள் என்பவர்கள் டைனோசர் போல அழிந்து விடும் உயிரினமாக மாற வாய்ப்புகள் உண்டு…அரசு மருத்துவமனைகள் என்பவை கரையான் படிந்த அருங்காட்சியமாக மாறிப்போகும்.

மக்கள் முக்கியம் அரசே !!

ரொம்ப சிம்பிளா சொல்லப்போனா,எங்க வேலையை ‘நிம்மதியா’ செய்ய விடுங்க என்பதே இந்த போராட்டம்

மக்களுக்காக போராடும் எங்களை சுயநலவாதிகள் போன்று மீடியா சித்தரித்தாலும்,இதை உங்களிடம் கொண்டு சேர்த்து விட்டேன்…இந்த போராட்டம் சுயநலமா பொதுநலமா என்பது உங்களுக்கு விளங்கி இருக்கும் என்றே நம்புகிறேன்.

இப்படிக்கு,

~அரசு பள்ளியில் படித்த அரசாங்க மருத்துவனாக மட்டுமே பணி நிறைவு செய்வேன் என்று சபதம் எடுத்த உங்களுள் ஒருவனான நான்.

நன்றி.

Dr.அரவிந்த ராஜ்.

articleBackgroundTamilnadu

சுஜீத்தின் தந்தையை விமர்சனம் செய்யும் உத்தமர்களே… இதை படிங்க!

சில வாரங்களுக்கு முன்….

பேனர் விழுந்ததால் நிலைதடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழ பின்னால் வந்த லாரி சுபஸ்ரீ மீது ஏறியது. இரத்தம் வழிய சுபஸ்ரீ உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாள்.

மருத்துவமனை அருகில் தான் இருக்கிறது, ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவும் ஆம்புலன்ஸ் வர மிகவும் காலதாமதமாகிறது. அதனால் போக்குவரத்து காவலர் அங்கே காரில் சென்று கொண்டிருக்கும் உயர்நடுத்தர மற்றும் பணக்கார வர்க்கத்திடம் உதவி கேட்டு அலைகிறார். ஆனால் அப்பெண்ணை தன் வாகனத்தில் ஏற்றி செல்ல யாரும் தயாராக இல்லை. ஒதுங்கி ஓரமாக வேடிக்கை பார்த்தபடியே செல்கிறார்கள்.

அவ்வழியே வந்த அந்த பெண்ணின் சாதியை சேர்ந்தவர்கள் கூட அப்பெண்ணை தன் காரில் ஏற்ற தயாராக இல்லை. அப்போது அவ்வழியே லோடு ஆட்டோ ஓட்டி வந்த விளிம்புநிலை மனிதர் ஆட்டோவை நிறுத்துகிறார். அப்பெண்ணை தன் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனை செல்ல தயார் என்று கூறுகிறார்.

இப்போது அப்பெண்ணை தூக்கி லோடு ஆட்டோவில் வைக்க வேண்டும்,. இதற்காவது உயர்நடுத்த/பணக்கார வர்க்கத்தை சேர்ந்தவர்கள் யாராவது முன்வந்தார்களா என்றால் இல்லை.
அவ்வழியே வந்த அப்பெண்ணின் குலத்தை சேர்ந்தவர்களாவது முன்வந்தார்களா என்றால் அதுவும் இல்லை. அந்த பெண் வேலைபார்க்கும் துறை சேர்ந்த IT மக்களாவது முன்வந்தார்கள் என்றால் அதுவும் இல்லை.

இது போன்ற மனிதநேயம் அறவே இல்லாத சுயநலம் கொண்ட கொடுமதியாளர்களாகிய நீங்கள் தான் இன்று சுர்ஜீத்தின் தந்தையை குற்றம் சாட்டுகிறீர்கள்.

இறுதியில் அந்த சுபஸ்ரீக்கு யார் உதவினார்கள் தெரியுமா? சாமானிய மக்கள் தான் வந்தார்கள். அவர்கள் தான் அப்பெண்ணை தூக்கி லோடு ஆட்டோவில் வைத்து மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

இது போன்ற விளிம்புநிலை/சாமானிய மக்களால் தான் மனிதம் இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது. இவர்களால் தான் சாதி, மதம், மொழி, இனம் என்ற எல்லைகளை கடந்து மனிதநேயம் வாழ்கிறது.

சுஜித்தும் இது போன்ற சாமானியனின் வீட்டு பிள்ளை தான். தன் வீட்டு ஆழ்துளை கிணற்றை அவர் தந்தை மூடாமல் விடவில்லை, மூடியே இருந்தார். ஆனால் ஆழ்துளை கிணற்றை எவ்வாறு மூட வேண்டும் என்கிற விழிப்புணர்வு அவருக்கு இல்லாததால் தான் அந்த ஆழ்துளை கிணறு அந்த போர்வேல் போட்ட கம்பெனியால் நன்றாக மூடப்பட்டிருந்தாக தவறாக நினைத்தார்.

சாமானிய மக்களுக்கு போதுமான விழிப்புணர்வை கொடுக்க வேண்டியது, இதனை ஒழுங்காக மூடியிருக்கிறார்களா என்று ஆய்வு செய்ய வேண்டியது, இதில் விபத்து ஏற்பட்டால் எப்படி மீட்க வேண்டும் என்கிற வழிமுறைகளை ஏற்படுத்தி மீட்புகுழுவினருக்கு பயிற்சி அளிக்க வேண்டியது, இப்படி இதில் பொறுப்புகளும் கடமைகளும் இருப்பதும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வர்க்கத்திடம் தான்.

ஆட்சி செய்பவர்கள் யார்? தலைமைச்செயலாளர், துறையின் ஆலோசகர், ஐஎஏஸ் அதிகாரிகள், நீதிபதிகள் போன்ற அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் யார்? இவர்கள் தான் இதில் குற்றவாளிகள். இவர்கள் செய்த குற்றத்தை இவர்கள் செய்ய தவறிய கடமையை போதிய விழிப்புணர்வு இல்லாத விளிம்புநிலை/சாமானிய மக்களின் தலையில் கட்டுவது அநியாயம்.

இன்றும் களத்தில் நின்று சுஜித்தை காப்பாற்ற அயராது உழைப்பவர்கள் சாமானிய மனிதர்களே. இவர்களுக்கு சரியான மீட்கும் வழிமுறைகளை ஆட்சிஅதிகாரத்தில் இருப்பவர்கள் வகுத்து கூறியிருந்தால் இவர்கள் உயிரை பணயம் வைத்தாவது இந்நேரம் குழந்தையை மீட்டு வந்திருப்பார்கள்.

மீட்கும் வழிமுறையை வகுக்க வேண்டிய மேட்டுக்குடி ஆட்சி அதிகார வர்க்கம் அதனை செய்யாமல் தன் குற்றத்தை மறைக்க சாமானிய மனிதர்கள் மீது பழியை போடுகிறது.

– ஹசன் கவுஸ், முகநூல் கட்டுரை

articlehistoryTamilnadu

99 வயதான பத்மஸ்ரீ விருதுபெற்ற யோகா பாட்டி கோவையில் உயிரிழந்தார்

இயலாமை என்பது முதுமையின் அடையாளம். ஆனால் தனது அடையாளத்தையே மாற்றி யோகா பயிற்சி மூலம் தன் மனதின் இளமையை உலகிற்கு வெளிச்சமிட்டவர் 99வயது மூதாட்டி நாநம்மாள்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ஆம் ஆண்டு பிறந்த நாநம்மாள், இளம் வயதிலேயே தனது தாத்தாவிடம் இருந்து யோகாவை பயின்றார். சிறு வயது முதலே நாள்தோறும் யோகா பயிற்சி செய்து வந்த நாநம்மாள் 50க்கும் மேற்பட்ட ஆசனங்களில் கைத்தேர்ந்தவர். மன வலிமைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் யோகா இன்றியமையாத ஒன்றாக திகழும் நிலையில், யோகா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் சென்றார் நாநம்மாள்.

யோகா மீதிருந்த அதீத ஆர்வத்தால், ஓசோன் பயிற்சி மையத்தை நிறுவி, நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு குருவாக திகழ்ந்தார். இவரிடம் யோகா பயின்ற 600க்கும் மேற்பட்டோர் தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் யோகா பயிற்சியாளர்களாக வலம் வருகின்றனர். இவரது குடும்பத்தில் மட்டும் 36 யோகா பயிற்சியாளர்கள் இவரைக் கொண்டு உருவாகியுள்ளனர். தான் பயின்ற யோகா கலையை கடந்த 45 ஆண்டுகளாக 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு கடத்தி இருக்கிறார் இந்த 99 வயது சாதனை மூதாட்டி…

எண்ணற்ற மாணவர்களுக்கு குருவாக திகழ்ந்த இந்த மூதாட்டி மாணவர்களுக்கு மத்தியில் யோகா பாட்டி என்றே செல்லமாக அழைக்கப்பட்டார். நாநம்மாளின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக கடந்த 2016ம் ஆண்டு சக்தி புரஷ்கார் விருது வழங்கி கவுரவித்தார் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி.

நாநம்மாளின் கலையை கண்டு வியந்த கர்நாடகா அரசு, அவருக்கு யோகா ரத்னா விருதையும் வழங்கியது. தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு நாட்டின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார் நாநம்மாள்..

பல்வேறு தேசிய அளவிலான தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் வென்ற நாநம்மாள், தள்ளாத வயதிலும் யோகா பயிற்சியில் ஈடுபட்டது உலகையே வியக்க வைத்தது. 40, 50 வயதுகளிலேயே மாத்திரை மனிதர்களாக வலம் வரும் இந்த காலத்தில், ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு யோகாவின் உதவியால் 90 வயதுகளை கடந்தும் பூரண நலத்துடன் வாழ்ந்து வந்தார் நாநம்மாள்.

இந்நிலையில் தனது மகன்களோடு கோவை கணபதி பகுதியில் வசித்து வந்த அவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்டிலில் இருந்து தவறி விழுந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நாநம்மாள் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி காலம் ஆனார்..!

99 வயதிலும் யோகாவை உயிர் மூச்சாக கருதிய நாநம்மாள் தனது கலையின் மூலம் காலம் கடந்தும் வாழ்வார் என்பதே நிதர்சனம்..!!

articleBackgroundhiddenIndia

சுஜித் மட்டுமா? இந்தியாவில் 10 மாதங்களில் குழிக்குள் விழுந்த குழந்தைகள் மட்டும் 9 பேர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுநாயக்கப்பட்டியில் சுஜித் என்கிற 2 வயது குழந்தை ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிக் கொண்டது.

70 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை 24 மணி நேரத்திற்கு மேலாகியும் மீட்கமுடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது.

குழந்தை மீட்கப்பட வேண்டும் என ட்விட்டரிலும், முகநூலிலும் பிரார்த்தனை செய்து வரும் இணையவாசிகள் பலரும், இந்தியாவில் ஆழ்குழாய் கிணறுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் நவீன ஆயுதங்கள் இல்லாதது ஏன் என அரசியல்வாதிகளை வறுத்து எடுத்து வருகிறார்கள்.

இது ஏதோ இன்றும், நேற்றும் நடந்துவரும் நிகழ்வல்ல. 2019-ம் ஆண்டில் நாம் கடந்துவந்த இந்த 10 மாதங்களில் மட்டும் இந்தியா முழுவதிலும் 9 குழந்தைகள் சுஜித்தைப் போல ஆழ்குழாய்க் கிணறுகளில் விழுந்து பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த 9 விபத்துக்களுமே பத்திரிக்கையிலும், இணையத்திலும் வெளியானதால் நமக்குத் தெரியவந்துள்ளது. இன்னும் வெளி உலகத்திற்கு தெரியாமல் எத்தனை சம்பவங்கள் நிகழ்ந்ததோ…?

  1. கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிங்ரௌலி மாவட்டத்தில் கேரர் கிராமத்தில் தேஜ் பிரதாப் சிங் என்ற 2 வயது குழந்தை ஒன்று ஆழ்குழாய் கிணற்றுக்குள் தவறி விழுந்தது. 70 அடி குழிக்குள் 10 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட அந்த சிறுவனை 45 நிமிடத்தில் காப்பாற்றியது தீயணைப்புத் துறை.
  2. பிப்ரவரி மாதம் 20-ம் தேதி பூனேவில் டெஹ்ரில் மாவட்டத்தில் உள்ள அம்பிகான் கிராமத்தில் ரவி பில் என்ற 6 வயது சிறுவன் 200 அடி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்டான். 16 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் ரபி பில்லை உயிருடன் மீட்டு அவரின் பெற்றோருக்கு உயிர் அழித்தனர்.
  3. மார்ச் 20-ம் தேதி அரியானா மாநிலத்தில் கிசார் மாவட்டத்தில் உள்ள பல்சமந்த் கிராமத்தில் 18 மாத ஆண் குழந்தை ஒன்று ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக் கொண்டது. 60 அடி ஆழத்தில் சிக்கியிருந்த அந்த குழந்தை 2 நாள் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது. ஒன்றரை வயது குழந்தை 2 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டது அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.
  4. ஆனால் அதற்கு 10 நாட்களுக்கு முன்பு அதே அரியானாவில் 4 வயது குழந்தை ஆழ்குழாய்க் கிணற்றில் இறந்து போன சோகமும் அரங்கேறி இருந்தது.
  5. ஏப்ரல் 3-ம் தேதி உத்தரப் பிரதேசம் மாநிலம் பாருக்காபாத்தில் 5 வயது பெண் குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து சிக்கிக் கொண்டது. 60 அடி ஆழத்தில் விழுந்த அந்த குழந்தையை மீட்க 2 நாட்களாக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தது. கடைசியில் மீட்பு பணிகள் கைவிடப்பட்டதால் அந்த சிறுமி ஆழ்குழாய் கிணற்றிலே உயிரிழந்துவிட்டார்.
  6. மே 21-ல் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் 4 வது பெண்குழந்தை ஒன்று 400 அடி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்தது. நல்வாய்ப்பாக 13 மணி நேர போராட்டத்திற்குப் பின் அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
  7. ஜூன் 4-ம் தேதி பஞ்சாபில் நடந்த சம்பவத்திற்கு ஒட்டு மொத்த வட இந்தியாவுமே கொந்தளித்தது. பகவான் புராவில் உள்ள 7செ.மீ. அகலமே உள்ள ஆழ்குழாய் கிணற்றில் பத்வீர் சிங் என்கிற சிறுவன் சிக்கிக் கொண்டான். 150 அடி ஆழம்கொண்ட அந்த போர்வெல்லில் இருந்து பத்வீரை மீட்க 110 மணி நேரம் ஆனது. ஆனால் பத்வீர் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் பஞ்சாப் முதல்வர் அமரேந்தர் சிங் உடனடியாக பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூடவும், விதிகளை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
  8. இதன் பிறகு ஜூன் 15-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் பிரதீப் என்கிற 3-வயது சிறுவன் ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிக்கொண்டது. அண்டை வீட்டாரின் சமயோசித புத்தியினால் 25 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை 15 நிமிடத்தில் மீட்கப்பட்டது.
  9. தற்போது தமிழகத்தில் சுஜித்.

இப்படி தொடர்ந்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் குழந்தைகள் ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிக் கொண்டிருக்க தற்போது சுஜித்தின் நிலைமை ஒட்டு மொத்த தமிழகத்தின் தூக்கத்தை கெடுத்துள்ளது. சுஜித்துக்காக பிரார்த்தனைகள் தொடரும் அதே வேலையிவ் மற்றொரு சுஜித் மாட்டிக்கொள்ளாதபடி நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பயன்படுத்தப்படாத ஆழ்குழாய்க் கிணறுகளை முழுதாக மூடி அவை இருப்பதற்கான எச்சரிக்கையை வெளிகாட்ட வேண்டும். பயன்பாட்டில் உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளை முறையாக பராமரித்து, பாதுகாத்து குழந்தைகள் நெருங்காதவாறு தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

நீங்கள் கவனிப்பின்றி விடும் ஒவ்வொரு ஆழ்குழாயும் ஏதோ ஒரு அப்பாவி குழந்தையின் சவக்குழியாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

articlehiddenTamilnadu

அறம் படம் போல் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் முயற்சியில் மணிகண்டன்… யார் இவர்?

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி என்ற கிராமத்தில் 22 அடி ஆழத்திலுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் இன்று மாலை சுஜித் என்ற 2 வயது குழந்தை விழுந்தது. உயிருக்கு போராடி வரும் குழந்தையை மீட்க வட்டாட்சி வருவாய் அதிகாரிகள், போலீஸார், ஆட்சியர், மீட்புக் குழுவினர், ஊர்மக்கள் என அனைவரும் போராடி வருகின்றனர். குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் கையை அசைக்கும் காட்சி வெளியாகி காண்போரை கலங்கச் செய்தது. குழந்தையை எப்படியாவது மீட்க வேண்டும் என காண்போர் அனைவரும் பரிதவிக்கின்றனர்.

ஆனால் தமிழகத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை விழுவது இது ஒன்றும் புதிதல்ல. அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. இது ஒரு தொடர் சோகக் கதையாக இருக்கிறது. இதேபோன்று மதுரையில் உள்ள முத்துப்பட்டியில் சில ஆண்டுகளுக்கு முன்பு 3 வயது குழந்தை ஒன்று தவறி விழுந்தது. அதன் பெற்றோர் மற்றும் ஊர்மக்கள் பெரும் போராட்டத்திற்கு பின்னர் குழந்தையை மீட்டனர். அந்த குழந்தையின் தந்தை தான் மணிகண்டன். திருநெல்வேலியில் உள்ள ஐ.டி.ஐ கல்லூரி ஒன்றில் படித்த இவர், தனது குழந்தையும், தாங்களும் பெற்ற துயரத்தை யாரும் இனி பெறக்கூடாது என முடிவெடுத்தார்.

இதனால் ஆழ்துளையில் விழும் குழந்தைகளை மீட்பதற்காக பிரத்யேகமாக கருவி ஒன்றை 2003 இல் கண்டுபிடித்தார். அந்தக் கருவியை நவீனப்படுத்தும் விதமாக சிறிய கேமரா, மருத்துவ சோதனை செய்யும் கருவிகள், குழந்தையை லேசாக கைபிடித்து தூக்கும் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை இணைத்து வெற்றிகரமாக பரிசோதித்தார். இதற்காக விருதுகளையும் அவர் பெற்றார். அவரது கண்டுபிடிப்பிற்கு தேசிய மீட்புக் குழுவினர் வரவேற்பு தெரிவித்ததுடன், வெளி மாநிலங்களில் இருந்து அரசு சார்பில் கருவியை வாங்கிக்கொண்டனர்.

இந்த கருவி மூலம் ஆழ்துளையில் விழுந்த பல குழந்தைகள் மணிகண்டன் உயிருடன் மீட்டுள்ளார். ஆனால் தமிழக அரசு மணிகண்டன் கண்டுபிடிப்பை உரிய முறையில் இதுவரை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இவரது கண்டுபிடிப்பை தமிழ் திரைப்படமான ‘அறம்’ உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

தற்போது திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவிக்கும் 2 வயது குழந்தையை மீட்பதற்கு மதுரையிலிருந்து மணிகண்டன் திருச்சி விரைந்து கொண்டிருக்கிறார். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அவர் திருச்சி அடைந்துவிடுவதாக புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் கருவி மூலம் குழந்தையை கட்டாயம் மீட்டுவிட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

articleBackgroundPoliticsTamilnadu

சாதியத்திடம் வீழ்ந்த தமிழ் இனவாதம்: படுதோல்வி அடைந்த சீமானின் நாம் தமிழர்

ஒவ்வொரு தேர்தல் நேரங்களிலும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளை மையப்படுத்தியே விவாதங்களும், செய்திகளும் இருக்கும். இவ்விரு கட்சிகளை சார்ந்த தலைவர்களின் கருத்துக்கள் மட்டுமே விவாதப்பொருளாகும். ஆனால், இந்த இடைத்தேர்தலில் வாக்குப்பதிவுக்கு முந்தைய ஒருவாரகாலமாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றிய செய்திகளும், விவாதங்களுமே ஊடகங்களை ஆக்கிரமித்தன. காரணம் விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ் காந்தியை கொன்றது தமிழர்கள் என்ற பொருள்பட அவர் பேசியது தான்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவில் சீமானின் நாம் தமிழர் குறிப்பிடத்தகுந்த வாக்கு சதவீதத்தை பெற்றது. இந்நிலையில் இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவியின் அமமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடாதபோது நாம் தமிழர் கட்சி போட்டியிட்டதும், பிரச்சாரத்தில் அவரது பேச்சுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்ததை பார்க்கையில், தேர்தல் முடிவுகளில் நாம் தமிழர் வெற்றிபெறாவிட்டலும் நல்ல வாக்கு சதவீதத்தை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று வெளியான தேர்தல் முடிவில் நாம் தமிழர் கட்சி பெற்ற மோத்தா வாக்குகள் அக்கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தமுள்ள 1,88,692 வாக்குகளில் நாம் தமிழர் பெற்றது வெறும்.2,921 மட்டும் தான். இந்த முடிவை நாம் தமிழர் மட்டுமின்றி மக்களாலும் நம்ப முடியவில்லை. ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொன்றோம் என சீமான் வீரவசனம் பேசிய விக்கிரவாண்டியிலேயே இந்த நிலை என்றால், நாங்குநேரியில் அதை விட மோசம்.

ஆம், விக்கிரவாண்டியிலாவது நாம் தமிழர் 3-வது இடத்தை பிடித்தது. ஆனால், நாங்குநேரியிலோ சுயேட்சை வேட்பாளர் ஹரி நாடாரை விட குறைவான வாக்குகளை பெற்று படுதோல்வியை சந்தித்தது நாம் தமிழர். மொத்தமுள்ள 1,70,680 வாக்குகளில் நாம் தமிழர் பெற்ற வாக்குகள் வெறும் 3,494 மட்டுமே.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாக நமது நியூசு தளத்தில் செய்திகள் வெளியிட்டுள்ளோம்.

செய்தி 1. அதிமுகவின் கூட்டணி கணக்கு, உள்கட்சி மற்றும் கூட்டணி பூசல்: நாங்குநேரியில் காங்கிரஸ் வீழ்ந்தது எப்படி?

செய்தி 2. மாம்பழத்தால் மலர்ந்த இரட்டை இலை: விக்கிரவாண்டியில் அதிமுக வென்ற கதை!

அதில் குறிப்பிட்டுள்ளபடி இடைத்தேர்தல் முடிவுகளை சாதி வாக்குகளே தீர்மாணித்துள்ளன. அதன் படி விக்கிரவாடியில் பாமக ஆதரவு வன்னியர் சாதி வாக்குகள் அதிமுகவை வெற்றிபெற வைத்துள்ளது. நாங்குநேரியிலும் சுயேட்சையாக போட்டியிட்ட பணங்காட்டு மக்கள் கட்சியின் ஹரி நாடாருக்கு நாடார் வாக்குகள் அதிகளவில் விழுந்துள்ளன. இதனால் நாம் தமிழர் கட்சியோ ஹரிநாடாருக்கும் குறைவான வாக்குகளை பெற்று 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது. நாடார் தொடர்பாக ஹரிநாடார் நடத்தும் பெரும்பாலான நிகழ்சிகளில் தவறாமல் கலந்துகொள்ளும் சீமான், இன்று அதே ஹரி நாடாரால் வீழ்த்தப்பட்டுள்ளார். இதில் குறிப்பிடத்தகுந்த விசயம் என்னவென்றால் நாம் தமிழர் கட்சியை தொடங்கிய சி.பா.ஆதித்தனாரும் இதே தூத்துக்குடி வட்டாரத்தை சார்ந்த நாடார் சமுதாயத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் தலையாய பிரச்சனையாக சாதி, மத ஏற்றத்தாழ்வு உள்ளது. ஆனால், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானோ சாதி ஏற்றத்தாழ்வுகள் பற்றி அதிகம் எதிவிணையாற்றாமல், தமிழர் கலாச்சாரம் என்ற பெயரில் சாதிப்பெருமை பாராட்டும் பிற்போக்குத்தனமான விசயங்களை ஆதரித்தும் பரப்பியும் வருகிறார். தமிழகத்திற்குள் இதுவரை பாஜக போன்ற மதவாத சக்திகள் வலுவாக காலூன்ற முடியாததற்கு பெரியாரின் சமூகநீதிக்கொள்கை வேறூன்றி இருப்பதே காரணம். ஆனால், சீமானோ தமிழருக்கும் திராவிடருக்கும் இல்லாத பகையை உருவாக்கி சமூக நீதித்தத்துவத்தை வேறறுக்க நினைக்கிறார். பெரியாரையும், அண்ணாவையும் தமிழரிடம் அந்நியப்படுத்துகிறார்.

தமிழர் என நிரூபிக்க சாதி என்ற நுழைவுச்சீட்டை கேட்கும் நாம் தமிழர், இன்று அதே சாதிய அரசியலால் வீழ்த்தப்பட்டுள்ளது. இங்கு சாதி, மத, இனவாதத்தை கடந்து சமத்துவ கோட்பாட்டின் படி அரசியல் செய்ய முடியாதவரை சீமான் எந்த பிரிவினைவாதத்தை, ஆணவத்தை தோற்றுவிக்க முயல்கிறாரோ அதே ஆணவத்தால் தான் தோற்கடிக்கப்படுவார்.

articlefact checkIndiatechnology

வாட்ஸ் ஆப் பொய் வெறுப்பு பிரச்சாரத்தில் உயர்சாதியினர் முதலிடம் – அதிர்ச்சியளிக்கும் ஆய்வு

Image Source: Cartoonistsatish.com

இந்தியாவில் பல்வேறு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் பொய்யான தகவல்களை பரப்புவதில் உயர்சாதியினரும், இடைநிலை சாதியினரும் முன்னிலை வகிப்பதாக லண்டன் பொருளாதாரப் பள்ளித் தெரிவித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு லண்டன் பொருளாதாரப் பள்ளியும், வாட்சப் நிறுவனமும் இணைந்து இந்தியாவில் போலிச் செய்திகள் பரப்பப்படுவது குறித்த ஆய்வை முன்னெடுத்தனர்.

கர்நாடகா, மகராஸ்டிரா, மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் என நான்கு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 250 வாட்சப் பயனாளர்களிளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மிக நீண்ட நேர்காணல் மூலம் திரட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், “தொழில்நுட்ப அறிவுடைய, இளம் அல்லது நடுத்தர வயதுடைய உயர் அல்லது இடை சாதி ஆண்கள் தவறான மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் போலிச் செய்திகளைப் பரப்புவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக கூறப்பட்டு உள்ளது”.

போலி வெறுப்புச் செய்திகளை உருவாக்கி பரப்பிவிடுவதற்காக தொழில்நுட்ப அறிவுகொண்ட உயர் சாதி அல்லது இடை சாதி இளைஞர்கள் வாட்சப் குழுமங்களை நடத்துவதாகவும் அவை செய்திகளை பகிர்வதில் முதலிடத்தில் இருப்பதாகவும் லண்டன் பொருளாதாரப் பள்ளி கூறுகிறது.

உயர் அல்லது இடை சாதி இளைஞர்களால் பரப்பப்படும் தவறான செய்திகள் அனைத்தும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் மீது வெறுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதாகவும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வெறுப்புச் செய்திகளைப் பரப்பும் பொதுமக்கள் தங்களது வெறுப்புக் கொள்கையின் மீதுள்ள அதிகமான பற்றால் செய்திகளில் உள்ள தவறான மற்றும் போலியான தகவல்களை பார்க்கத் தவறிவிடுவதாகவும், இதனால் பல சமயங்களில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துவிடுவதாகவும் தெரிவிக்கிறது அந்த ஆய்வு.

அதே நேரத்தில் போலிச் செய்திகள் மற்றும் வெறுப்பை தூண்டக் கூடிய செய்திகளை சாதி அடுக்கில் கீழ்நிலையில் உள்ளவர்களும், முஸ்லிம்களும், தலித்களும், பெண்களும், கிராமப்புறங்களில் உள்ளவர்களும், குறைந்த தொழில்நுட்ப அறிவு கொண்டவர்களும் பகிர விரும்புவதில்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும், போலி வெறுப்புச் செய்திகள் அறியாமையாலும், தொழில்நுட்ப அறிவின்மையாலும் பரப்பப்படுவதை காட்டிலும் தவறான எண்ணம் மற்றும் சித்தாந்த்தின் அடிப்படையில் வேண்டுமென்றே பரப்பப்படுவதாக சுட்டிக்காட்டி உள்ளது லண்டன் பொருளாதாரப்பள்ளியின் ஆய்வு முடிவு.

இந்தியாவில் கடந்த 2018-ம் ஆண்டு மட்டும் வெறுப்பைத் தூண்டும் போலிச் செய்திகளால் 50-க்கும் அதிகமானோர் அடித்துக் கொல்லப்பட்டு உள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் முஸ்லிம்களும், தலித் மக்களும் ஆவார்கள்.

மதச்சார்பின்மையை சட்டப் புத்தகத்தின் முன்னுரையிலும், தீண்டாமைமையை பாடப் புத்தகத்தின் முதல் பக்கத்திலும் வைத்திருப்பதால் இந்த அவல நிலை மாறிவிடாது.

இந்தியாவில் இந்து அல்லாதவர்களை வாழ அனுமதித்திருப்பதே மதச்சார்பின்மை என்றும், தலித்கள் செருப்பு அணிவதை பொறுத்துக் கொள்வதும், கல்வி கற்க அனுமதிப்பதுமே தீண்டாமை ஒழிப்பு என்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு இந்திய குடிமகன் தான் விரும்பும் எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமை உடையவன் என்பதையும், குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவதால் ஒரு நபரின் அடிப்படை உரிமைகள் எந்த வகையிலும் குறைந்துவிடாது என்பதையும் அவர்ளுக்குப் புரியவைக்க வேண்டும். பிறப்பால் உயர்வு, தாழ்வு இல்லை என்னும் உண்மையை உணர்த்தி அனவரையும் சமமாக நடத்துவது அடுத்தவருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்பதை உணரச்செய்ய வேண்டும்.

ஒரு இந்துவுக்கு இந்தியாவின் மீது இருக்கும் உரிமைகள் அனைத்தும் துளி குறையாது மாற்று மதத்தினருக்கும் உண்டு என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். பல்வேறு கலாச்சாரங்களை, வேறுபாடுகளை, வழிபாடு முறைகளை கொண்டவர்களை அரவணைத்து அன்பு செலுத்தும் வழி முறைகள் கற்பிக்கப்பட வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக சுயநலத்திற்காக, தனிநபர் ஆதாயத்திற்காக சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் வெறுப்பை வளர்ப்பவர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற போலிச் செய்திகள் பரப்பப்படுவதும், அதனால் உயிர்கள் பறிபோவதும் நிறுத்தப்படும்.

ஆக்கம்: தி வயர்.இன்

தமிழாக்கம்: நியூசு.இன்

articleBackgroundMedia Criticssociety

“புள்ளிங்கோ” என்ற பெயரில் சென்னை பூர்வகுடிகளை கொச்சைப்படுத்தும் யூடியூப் சேனல்கள்

“எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்” என சென்னையை சேர்ந்த ஒரு இளைஞர் பாடிய பாடல் வைரலானதை தொடர்ந்து ட்ரெண்டானது இந்த புள்ளிங்கோ வார்த்தை. சென்னையில் அடித்தட்டு பூர்வக்குடி மக்கள் தங்கள் இளைஞர்களை பாசத்துடன் புள்ளிங்கோ அழைப்பார்கள். ஆனால், இந்த வார்த்தை டிரெண்டானவுடன் அதை வைத்து வீடியோ வெளியிடும் யூடியூப் சேனல்களோ சென்னை இளைஞர்களின் உடல்மொழி, ஆடை கலாச்சாரம், பேச்சு வழக்கை கேலி செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

சென்னையின் பூர்வகுடி மக்களின் எந்த அடிப்படை வாழ்வியல் பிரச்சனைகள் பற்றியும் அதிகம் வாய் திறக்காத இந்த யூடியூப் சேனல்கள், டிரெண்டுக்காக அவர்கள் அழைக்கும் புள்ளிங்கோ வார்த்தையை வைத்து இழிவுபடுத்தி, அவர்களை ஏதோ ஒரு ஜந்து போல் பாவித்து சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்தும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். கானா, ஹிப் ஹாப், ரேப் கலைஞர்கள் அதிகம் உள்ள வட சென்னையில், தங்கள் கலைக்கு தகுந்தவாறு சிகை, உடை அலங்காரம் செய்து கொள்கிறார்கள். ஆனால், வட சென்னைக்குள் சென்று பார்த்தால் 100ல் 10 பேர் தான் அவ்வாறு இருப்பார்கள். ஆனால், இந்த யூடியூப் சேனல்களோ வட சென்னை புள்ளிங்கோ அனைவருமே தலையில் வண்ணச்சாயம் பூசிகொள்பவர்கள் போன்றும், அனைவருமே ரவுடிகள் போன்றும், அனைவருமே டியோ பைக்கை வைத்து போக்குவரத்து விதிகளை மீறி விபத்துக்களை ஏற்படுத்துபவர்கள் போன்றும் சித்தரிக்க முயல்கிறார்கள்.

வட சென்னையில் ரவுடிகளே இல்லையா என்றால் இருக்கிறார்கள். ஆனால், அதை விட பல மடங்கு அதிகமாக அங்கு நல்ல கானா பாடகர்கள், கால்பந்து வீரர்கள், பாக்சர்கள், கிரிக்கெட் வீரர்கள், தடகள் வீரர்கள், எழுத்தாளர்கள், திரைப்பிரபலங்கள், நகைச்சுவை கலைஞர்கள், உழைப்பாளிகள், மீனவர்கள், கட்டிட கலைஞர்கள், பொறியாளர்கள், வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், ஆபத்து என்றால் ஓடி வந்து உதவும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.

படித்து பணம் சம்பாதித்துவிட்டு, சாதியால் வர்க்கத்தால் ஏற்றத்தாழ்வு காட்டும் எலைட் வந்தேரிகள் நிறைந்த சென்னையில், அனைவரையும் சமமாக பாவித்து நம்ம புள்ளிங்கோ என அரவணைக்கும் பூர்வக்குடி சென்னைவாசிகள் அவர்கள் தான். ஆனால், டிரெண்டிங் வீடியோவை பதிவிட்டால் பணம் ஈட்டலாம் என அலையும் இந்த யூடியூப் சேனல்கள், பழைய சினிமா படங்களின் பாணியில் வட சென்னை இளைஞர்களை கெட்டவர்கள், வில்லன்கள், ரவுடிகள், கொலைகாரர்கள் என்றே சித்தரிக்கின்றன.

“புள்ளிங்கோ” டியோவை வைத்துக்கொண்டு சாலை விதிகளை மீறுவது தவறு இல்லையா என்றால் தவறு தான். அவர்களை தண்டிக்க வேண்டும். அதற்காக அவர்கள் அனைவருமே அப்படிப்பட்டவர்கள் என காட்டுவது எந்த வகையில் நியாயம். இவர்களை விமர்சிக்கும் யூடியூப் சேனல்கள், சென்னை ஈ.சி.ஆரில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்ரக பைக்குகளில் ரேஸ் சென்று விபத்துக்களை ஏற்படுத்தும் பணக்கார இளைஞர்கள், தென் தமிழகத்தில் முறுக்கு மீசையுடன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ராயல் என்பீல்டில் தங்கள் சாதிப்பெயரை அச்சிட்டுக்கொண்டு சாதித்திமிருடன் போலீஸுக்கு அடங்காமல் வேகமாக செல்பவர்கள், குடித்திவிட்டு ஆடிகாரில் சென்று சாலையோரம் படுத்துறங்கும் ஏழைகள் மீது மோதி கொல்பவர்கள் பற்றி பேசியுள்ளார்கள்

“புள்ளிங்கோ”க்களை ரவுடிகள் என்ற வகையில் சித்தரிப்பவர்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கௌரவக்கொலைகளை, சாதி வன்முறைகளை நிகழ்த்தும் ஆதிக்க சாதியினர் பற்றி பேசத்தயங்குவது ஏன்? அனைத்து ஊர்களிலும், சாதிகளிலும் ரவுடிகள், சமூதாய விரோதிகள் உள்ளர்கள். ஆனால், தமிழகத்தின் பிற சாதி, பகுதி மக்கள் அனைவரையும் ரவுடிகள் என பொதுமைப்படுத்தி அழைக்கப்படாதபோது, வட சென்னையில் ஒரு சிலர் செய்யும் குற்றங்களுக்கு ஒட்டுமொத்த பகுதி மக்களையும் தவறாக சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்?

articlehiddenPolitics

தமிழக பள்ளிகளில் அரசு ஆதரவுடன் மாணவர்களை மூளைச்சலவை செய்யும் ஆர்.எஸ்.எஸ்!

ஆர்.எஸ்.எஸ். கோட்டையாக தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் மாறி வருகின்றன. தமிழகம் முழுவதும் பாஜக அனுதாபிகள், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளால் நடத்தப்படும் தனியார் பள்ளிகளில் பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். ரகசிய தீவிரவாத பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளிலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவியுள்ளது. கோவை மாவட்டத்தின் பல அரசு பள்ளிகளில் தூய்மை பணி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவியுள்ளது. இவர்கள் தூய்மை பணி என்ற பெயரில் பள்ளிக்குள் நுழைந்து நல்லவர்கள் போல் மாணவர்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்பட்டு, தூய்மை என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். சித்தாங்களை புகுத்த முயற்சிப்பார்கள். மேலோட்டமான பார்வையில் தூய்மைப்பணி தானே என இவர்களுடன் இணையும் மாணவர்களும் ஆர்.எஸ்.எஸ். மத பயங்கரவாத சித்தாந்தால் மூளைச்சலவை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.இதே போல்.கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தபுரம் கே.வி. தனியார் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். சாகா பயங்கரவாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

-கே.வி. தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி, குமரி

சாகா பயிற்சி வகுப்பில், நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் செய்யப்படுவதுடன், அவர்கள் வந்தேறிகள், அவர்களை இந்தியாவை விட்டே விரட்ட வேண்டும், அவர்களை கொல்ல வேண்டும் என்பது போன்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு சட்டவிரோத ஆயுதப்பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ். சாகா பயிற்சியின் உண்மை குறித்து அந்த அமைப்பில் இருந்து வெளியேறியவரின் பேச்சை கேளுங்கள்

இதே போல் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்புகள் கடந்த மாதம் ஒரு வார காலமாக நடந்துள்ளன. இந்த நிலையில், இன்று சென்னை மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகரும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி பேச்சாளருமான ராமசுப்பிரமணியத்தின் ஸ்ரீ நடேசன் வித்தியாலயா மேல்நிலைப்பள்ளியில் இன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதை அவரே தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்தியாவில் 2 முறை தடை செய்யப்பட்ட அமைப்பவாகவும், மத்திய பாஜக அரசை பின்னால் இருந்து இயக்கும் சக்தியாகவும், தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொலை செய்த அமைப்பாகவும், பாபர் மசூதி இடிப்புக்கு காரணமாக இருந்த, இந்தியாவில் லட்சக்கணக்கான மதக்கலவரங்களை நிகழ்த்திய RSS அமைப்பு சிறுவர்களை மூளைச்சலவை செய்து தங்கள் அமைப்பில் இணைத்து பயங்கரவாதிகளாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. வடநாட்டில் பெரிய அளவில் நடைபெற்று வந்த இந்த பயிற்சி வகுப்புகள் தற்போது தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு பிறகு தங்கு தடையின்றி நடத்தப்பட்டு வருகிறது.பள்ளி, கல்லூரிகளில் அரசியல்சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்ற உத்தரவு உள்ள நிலையில், எந்த அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை இதுபோன்ற ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குகிறது என்ற பெற்றோர்கள் எழுப்பாவிட்டால், உங்கள் குழந்தைகளும் எதிர்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதியாக மாறக்கூடும்.

1 2 3 5
Page 1 of 5